Tuesday, April 28, 2015

இந்தோனேசியாவில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர் உள்பட 8 பேரின் மரண தண்டனை நிறைவேற்றம் சுட்டுக் கொல்லப்பட்டனர்

201504290இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.
போதைப்பொருள் கடத்தல்
ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் போதைப்பொருட்கள் கடத்தல் என்பது கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றை விட கொடிய குற்றமாக கருதப்படுகிறது. அங்கு போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அந்த நாட்டில், கடந்த 2005-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17-ந் தேதி, 8.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் உள்ளிட்ட 9 பேர் சிக்கினார்கள். இவர்களில் மயூரன் சுகுமாறன், இலங்கை தமிழர் ஆவார்.
மரண தண்டனை
9 பேரையும், பாலி தீவில் போலீசார் கைது செய்ததால், அந்த வழக்கு ‘பாலி-9’ என்றழைக்கப்பட்டது. வழக்கில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.
இந்த வழக்கை விசாரித்த பாலி கோர்ட்டு, இந்த கடத்தல் கும்பலின் தலைவர்கள் என்று கருதி மயூரன் சுகுமாறனுக்கும், ஆண்ட்ரூ சானுக்கும் மரண தண்டனை விதித்தது. மற்ற 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
10 ஆண்டு சட்டப்போராட்டம்
மரண தண்டனையை எதிர்த்து மயூரன் சுகுமாறனும், ஆண்ட்ரூ சானும் 10 ஆண்டு காலம் சட்டப்போராட்டம் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். அவற்றை அவர் தள்ளுபடி செய்தார்.
அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தோனேசிய அரசு உறுதியாக இருந்தது. இதே போன்று போதைப்பொருள் வழக்குகளில் சிக்கிய வேறு 7 பேர் என மொத்தம் 9 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தது.
சிறை மாற்றம்
இந்த 9 பேரில் மயூரன் சுகுமாறனும், ஆண்ட்ரூ சானும் ஆஸ்திரேலிய குடிமக்கள். மற்ற 7 பேரில் 4 பேர் நைஜீரியா நாட்டினர், இந்தோனேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர்.
தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட நுசகம்பன்கன் தீவு சிறைக்கு கடந்த மாதம் 4-ந் தேதி மாற்றினர்.
72 மணி நேர நோட்டீசு
இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவரை தவிர பிற 8 பேரையும் மரண தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அவர்களது நாடுகள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகள் பலவும் வலியுறுத்தி வந்தன. ஆனால் எல்லா வேண்டுகோள்களையும் அதிபர் ஜோகோ விடோடோ திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.
இந்த நிலையில், 9 பேரின் மரண தண்டனையும் 28-ந் தேதி நிறைவேற்றப்படும் என இந்தோனேசியா அரசு அறிவித்தது. இது தொடர்பாக 9 கைதிகளுக்கும் 72 மணி நேர நோட்டீசும் அளித்தது.

முழுவீச்சில் ஏற்பாடு
இதையடுத்து அவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு இனி ஒரு சட்ட வழியும் இல்லை என்று உருவானது.
அவர்களது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறை நிர்வாகம் முழுவீச்சில் செய்து வந்தது.
உடல்களை வைத்து எடுத்துச்செல்வதற்கு பளபளக்கும் துணியால் அலங்கரிக்கப்பட்ட 9 சவப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக கைதிகள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரை கடைசியாக சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கண்ணீர் சந்திப்பு
குறிப்பாக, மயூரன் சுகுமாறனின் தாயார் ராஜனி, தந்தை சுகுமாறன், சகோதரி பிருந்தா, சகோதரர் மைக்கேல் ஆகியோரும், ஆண்ட்ரூ சானின் புதுமனைவி பெபி ஹீயர்விலா மற்றும் குடும்பத்தினர் நேற்று நுசகம்பன்கன் சிறைக்கு வந்தனர். அவர்கள் அழுதவாறே வந்தனர். இதில், மயூரன் சுகுமாறனின் சகோதரி பிருந்தா மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. அவர் தூக்கிச்செல்லப்பட்டார்.
அவர்கள் மயூரன் சுகுமாறனையும், ஆண்ட்ரூ சானையும் கடைசி முறையாக சந்தித்தனர். இந்த சந்திப்பில் உரையாடலை விட அனைவரும் சிந்திய கண்ணீர்தான் முக்கிய பங்கு வகித்தது.
மத போதகர்கள் ஆறுதல்
இந்த சந்திப்பை தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் சிறை அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.
இதையடுத்து மயூரன் சுகுமாறனை மெல்போர்ன் பாதிரியார் கிறிஸ்டி பக்கிங்காம், ஆண்ட்ரூ சானை மதபோதகர் டேவ் சோபர் சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றினர்.
அதைத் தொடர்ந்து 9 பேரின் தண்டனையை நிறைவேற்ற சிறைக்கு அருகேயுள்ள காடு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அங்கு தண்டனையை நிறைவேற்ற பயிற்சி பெற்ற 12 போலீசார் சென்றனர். அவர்களது துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டது.
விருப்ப தேர்வு
பொதுவாக மரண தண்டனையை நிறைவேற்றும் போது உட்கார்ந்து கொண்டு இருக்கப்போகிறீர்களா, முழங்காலில் நிற்க விருப்பமா அல்லது நின்று கொண்ட நிலையில் தண்டனையை ஏற்க விரும்புகிறீர்களா என கைதிகளிடம் கேள்வி கேட்டு, அவர்கள் விருப்பப்படி முடிவு எடுக்க அனுமதி வழங்கப்படும்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கான சமிக்ஞையாக, தளபதி ஒருவர் கைதிகளின் மேல் சட்டையில் (இதயம் அமைந்துள்ள இடத்தில்) கருப்பு புள்ளி வைப்பார். அதைத் தொடர்ந்து தளபதி ஒரு வாளை உயர்த்துவார். அதைத் தொடர்ந்து போலீஸ் படையினரால் மரண தண்டனை கைதிகள் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.
தண்டனையை நிறைவேற்றிய பிறகு, அங்கு வரும் டாக்டர்கள், சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்களை பரிசோதித்து அவர்களது உயிர் பிரிந்து விட்டதை உறுதி செய்வார்கள்.


நேற்று நள்ளிரவு இது போன்ற ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு பெண் கைதியான வெலோசா தவிர மற்ற 8 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.அதன் பிறகு அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்றது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval