Sunday, April 26, 2015

வில்லங்கம் இல்லாத சொத்து வாங்க வேண்டுமா?

ld1606
எத்தகைய சொத்து வாங்கினாலும் அந்த சொத்துக்கான ஆவணங்கள் வில்லங்கம் இல்லாமல் இருந்தால்தான் அந்த சொத்தின் மீது நாம் உரிமை கொண்டாட முடியும். ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அந்த சொத்து பிரச்சினைக்குரியதாக மாறிவிடும். எனவே சொத்து வாங்கும்போது ஆவண சரிபார்ப்பு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆவண சரிபார்ப்பு
சொத்தை விற்பனை செய்பவரிடம் அந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங் களையும் கேட்டு பெற வேண்டும். அவர் ஒரிஜினல் ஆவணங்களை கொடுக்காமல் ஜெராக்ஸ் நகல்களை கொடுத்தால் அதை வைத்து மட்டுமே சரிபார்க்க கூடாது. கண்டிப்பாக ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு பெற வேண்டும். அந்த ஆவணங்களை சொத்துக்கான பத்திரப்பதிவு முடியும்போது தருவதாக கூறினாலோ, அல்லது காலதாமதம் செய்தாலோ உஷாராக இருக்க வேண்டும்.
ஒரிஜினல் ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி பார்த்த பிறகே அந்த சொத்தை வாங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சிலரிடம் ஒரிஜினல் ஆவணங்கள் இருக்காது. டூப்ளிகேட் ஆவணம் (நகல் ஆவணம்) இருக்கலாம். தங்களுடைய ஒரிஜினல் ஆவணம் தொலைந்து போய்விட்டதாக கூறுவார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்பதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
பரிசீலிக்க வேண்டும்
சிலர் ஒரிஜினல் ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கலாம். அவசரமாக சொத்தை விற்பனை செய்யும் பட்சத்தில் வங்கிக்கடனை திரும்ப செலுத்தினால்தான் ஆவணத்தை மீட்க முடியும். அதற்கு தேவையான பணத்தை திரட்டுவதற்கு இயலாமல் இருக்கலாம். அதனால் ஒரிஜினல் ஆவணம் அடமானத்தில் இருக்கும் விஷயத்தை உங்களிடம் மறைத்தும் இருக்கலாம்.
அதுபற்றி தெரியாமல் அவர்கள் கொடுக்கும் டூப்ளிகேட் ஆவணத்தை நீங்கள் பெற்றால் பின்னாளில் நீங்கள்தான் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சொத்தை விற்பனை செய்பவர் வங்கியில் ஒரிஜினல் ஆவணத்தை வைத்து வாங்கி இருக்கும் கடனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய நிலை வரலாம். சிலர் போலியாக டூப்ளிகேட் ஆவணம் தயாரித்து அடுத்தவருடைய சொத்தை விற்பனை செய்ய முன்வரலாம். ஆதலால் ஒரிஜினல் ஆவணம் தங்களிடம் இல்லை என்று சொத்து விற்பனை செய்பவர்கள் கூறினால் அந்த சொத்தை வாங்குவது குறித்து தீவிரமாக பரிசீலனை செய்ய வேண்டும்.
வில்லங்க சான்று சரிபார்ப்பு
ஒருவேளை ஆவணம் தொலைந்து போனது உண்மையாக இருந்தால் அது எப்படி தொலைந்தது என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஆவணம் மாயமானது குறித்து முறையாக புகார் கொடுக்கப்பட்டு டூப்ளிகேட் ஆவணம் பெறப்பட்டு இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் டூப்ளிகேட் ஆவணம் முறைகேடாக தயார் செய்யப்பட்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
டூப்ளிகேட் ஆவணம் பார்ப்பதற்கு ஒரிஜினல் ஆவணம் போலவே தெரியும். எனவே பத்திரப்பதிவு சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கே அது பற்றி தெளிவாக தெரியும். அவர்கள் பார்த்த உடனே கண்டுபிடித்து விடுவார்கள். எனவே அவர்கள் மூலம் ஆவணங்களை சரி பார்ப்பது பிரச்சினைகளை தவிர்க்க உதவும். எந்த சொத்து வாங்குவதாக இருந்தாலும் வில்லங்க சான்றிதழை 30 வருடங்களுக்காவது சரிபார்ப்பது அவசியம்.
சொத்து பரிமாற்ற விவரம்
அதில் எந்த ஆண்டுகளில் யார், யார் வசம் சொத்து இருந்தது, அது யாருக்கெல்லாம் கை மாறி இருக்கிறது என்பது உள்ளிட்ட சொத்து பற்றிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும் என்பதால் அதனை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்போது வில்லங்க சான்று விவரங்களை இணையதளம் ( லீttஜீ://மீநீஸ்வீமீஷ்.tஸீக்ஷீமீரீவீஸீமீt.ஸீமீt ) மூலம் பார்க்கும் வசதி இருப்பதால் அதன் மூலம் சொத்து பரிமாற்ற தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாங்கப்போகும் சொத்து பற்றிய நகல் ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்கி சரிபார்ப்பது நல்லது. சொத்தை விற்பனை செய்பவர் உங்களிடம் ஒரிஜினல் ஆவணங்களை கொடுத்து இருந்தாலும், இந்த நகல் ஆவணம் மூலம் அதன் உண்மை தன்மையை உறுதிபடுத்தி விடலாம். இந்த இரு ஆவணங் களிலும் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை அச்சு மாறாமல் கூர்ந்து படித்து பார்க்க வேண்டும். முக்கியமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்து பற்றிய அளவு விவரங்களை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval