Friday, April 24, 2015

டில்லியில் தமிழக அரசு


'சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள சிக்கல்களுக்கு, தீர்க்கமான முடிவுகளை எடுக்காமல், அவசர கோலத்தில், இதுகுறித்த அரசியல் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வருவது, ஏற்புடையது அல்ல. மாறாக, இவ்விஷயத்தில், மாநில அரசுகளின் கவலைகளைத் தீர்த்து, கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிறகே, இந்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும்'
என்று, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த, மாநில நிதி மற்றும் வணிக வரித்துறை அமைச்சர்களின், உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், விஞ்ஞான் பவன் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்படும் கவுன்சிலுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை, தமிழக அரசு உறுதியுடன் எதிர்க்கிறது. காரணம், இந்த கவுன்சில், மாநிலங்களின் நிதி பிரச்னைகளை கண்டுகொள்ளாத வகையில் உள்ளது. இந்த கவுன்சிலில், முடிவுகளை எடுப்பது மற்றும் ஓட்டுரிமை உள்ளிட்ட பல விஷயங்களில், மத்திய அரசின் கையே ஓங்கியுள்ளது. மாநிலங்களுக்கு எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் அனைத்தையுமே, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பிலிருந்து, முழுவதுமாக விலக்கி வைக்க வேண்டும்.
அப்போது தான், மாநிலங்களின் நிதி ஆளுமை காப்பாற்றப்படும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம், மாநிலங்களுக்கு ஏற்படப்போகும், நிரந்தர நிதி இழப்பை ஈடுகட்டுவதற்கு, 100 சதவீத நிவாரணத் தொகையை, மத்திய அரசு அளிக்க வேண்டும். இந்த இழப்பீட்டு நிதியை, முழு காலக்கெடுவான, ஐந்து ஆண்டுகளுக்கும் வழங்க வேண்டும். உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும், தமிழகம் போன்ற மாநிலங்களில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால், பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, இந்த வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருவாயில், 4 சதவீதத்தை, மாநிலங்களுக்கே, திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்து, அரசியல் சட்ட திருத்த மசோதாவை முதலில் கொண்டு வந்துவிட்டு, அதன் பின், இதில் உள்ள சிக்கல்கள், பிரச்னைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காணலாம் என, மத்திய அரசு நினைக்கிறது.
இது, முற்றிலும் ஏற்புடையது அல்ல. மாறாக, அனைத்து பிரச்னைகளும், மாநில நிதியமைச்சர்கள் அங்கம் வகிக்கும், இந்த உயர்மட்டக் குழு முன் வைக்கப்பட்டு, தீர்க்கமாக ஆராய்ந்து, கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அதன்பின் தான், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த, அரசியல் சட்ட திருத்த மசோதாவையே, மத்திய அரசு கையில் எடுக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் சம்பத் பேசினார்
Ravi SR Ravi
prop.S.R. OIL MILL
pattukkottai

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval