Friday, April 17, 2015

சகோதரி ஜோதிமனி அவர்களின் பதிலடி.

"இந்திய முஸ்லிம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். நாட்டுக்காக உயிரையும் தருவார்கள்"
-நரேந்திர மோடி.
மோடி அவர்களுக்கு: இந்திய முஸ்லிம்களுக்கு யாரிடம் இருந்தும் நாட்டுப்பற்று நற்சான்றிதழ் தேவையில்லை. இந்த தேசத்தின் விடுதலைக்காக கல்வி, செல்வம் , உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவான போதும் இயல்பாக இந்தியமண்ணைத் தேர்ந்தெடுத்தவர்கள். இந்தியன் அதைத்தான் செய்யமுடியும்.
முஸ்லிம்களும் இந்தியனாகத்தான் அன்றும் , இன்றும் , என்றும் இருக்கிறார்கள் இருப்பார்கள். அதுவும் சுதந்திரப்போராட்டத்தில் ஆங்கிலேயரை அண்டிப்பிழைத்து , விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த நீங்கள், நாட்டுப்பற்று சான்றிதழ் எல்லாம் கொடுப்பது உங்களுக்கே கூச்சமாக இல்லையா?
நியாயமாகப் பார்த்தால் உங்கள் கூட்டத்திற்குத் தானே நாங்கள் கொடுக்கவேண்டும்! உங்கள் துரோகத்தின் வரலாற்றை இந்த தேசம் இன்னும் மறந்துவிடவில்லை. இப்போது மட்டும் என்ன இந்த திடீர் ஞானோதயம்?
இந்தியாவில் இருக்கிற இந்துக்கள் ஒருபோதும் உங்கள் பிரிவினைவாத கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தான் இந்துவாக இருப்பது போல் இன்னொருவர் , முஸ்லிமாக ,கிறித்தவராக வேறு ஏதாவது நம்பிக்கை உள்ளவராக இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அனைவரும் இந்தியராக வாழவேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் இந்த தேசத்தின் 60ஆண்டுகால வரலாறு நிரூபித்திருக்கிறது.
நீங்கள் இந்துக்களாகிய எங்களின் சம்மதமில்லாமல் எங்கள் மதத்தை உங்கள் சுயநல அரசியலுக்காக பயன்படுத்துகிறீர்கள். அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. உங்கள் கலவர அரசியல் எங்களுக்குத் தேவையில்லை என்று மக்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் தானே இந்த திடீர் கரிசனம்?! பரவாயில்லை . எதன் பொருட்டாவது நீங்கள் இந்த மதக்கலவர அரசியலை கைவிடுவதுதான் உங்களுக்கும். நாட்டுக்கும் நல்லது . அப்படி உண்மையிலேயே நடந்தால் அதை வரவேற்போம்.
இது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு . இன்னும் 17 ஆம் நூற்றாண்டு பற்றியே பேசி இந்தியாவை பின்னோக்கி அழைத்துப் போகாதீர்கள் . அதை இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் .
முஸ்லிம் உறவுகளுக்கு:
இந்தியாவில் உள்ள இந்துக்கள் பேரன்பும் , நியாய உணர்ச்சியும் , சகோதரத்துவமும் உடையவர்கள் . மோடி போன்றவர்களைக் கூட இப்படிப் பேச வைப்பதுதான் அவர்களின் ஆகச் சிறந்த பலம். இந்தியா இந்தியர்களின் நாடு.நாம் இந்தியர்கள் . யாரும் யாருக்கும் நாற்றுப்பற்றுச் சான்றிதழ் அளிக்கவோ , நாட்டுப்பற்றை நிரூபிக்கவோ தேவையில்லை.
நாம் அனைவரும் இணைந்து நல்லிணக்கத்தோடும் , அமைதியோடும் , மகிழ்ச்சியோடும் , பரஸ்பர நம்பிக்கையோடும் வாழும் இந்தியா தான் நம் தலைவர்கள் கனவு கண்ட இந்தியா . அதை உறுதி செய்வது ஒவ்வொரு இந்தியரின் கடமை . அதில் தான் நம் அனைவரின் மகிழ்ச்சியும் , அமைதியான எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம் அதை நோக்கிய பாதையில் பயணிப்போம்
courtesy;facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval