Tuesday, April 7, 2015

அதிகரித்து வரும் வாகனங்களும் அதிர்ச்சி தரும் விபத்துகளும் !?


இன்றைய நாட்களில் நாம் அன்றாடம் தொலைக்காட்சி செய்திகளிளும், பத்திரிக்கைச் செய்திகளிலும், மற்ற அனைத்து ஊடக செய்திகளிலும் அதிகம் வாசிப்பதும் கேட்பதும் கொடூரமாக நடக்கும் சாலைவிபத்துக்களாகத்தான் இருக்கும்... 

ஒருகாலத்தில் மாட்டுவண்டிகளும் குதிரைவண்டிகளும் சைக்கிளும் வாகனமாக அதிகப்படியாக பயன்பாட்டில் இருந்தபோது இத்தனை சாலைவிபத்துக்களோ, உயிரிழப்புக்களோ ஏற்ப்பட்டதில்லை. என்றைக்காவது அரிதாகவே விபத்துக்களை கேள்விப்படுவோம். அது நாட்டில் எந்த மூலையில் நடந்தாலும் கேள்விப்படும்போது அதிர்ச்சியாகவும் மனதிற்கு மிகுந்த வேதனையாகவும் இருக்கும். ஆனால் இன்றைய நிலையோ சாலை விபத்து சர்வசாதாரணமாக தினமும் நடந்து கொண்டும் அதனால் பல உயிரிழப்புக்களும் உடலுறுப்பு இழப்புக்களும் ஏற்ப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆக மனித உயிர்கள் இப்படி விபத்துக்களில் மலிவாகக் கொல்லப்படுவது மிக வேதனைப்படக் கூடியவையாக உள்ளது.

வாகனவிபத்துக்கள் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. சிற்றூர்களிலும் பெருநகரம்போல் குறுகிய சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் கணக்கில்லாமல் வாகனப் போக்குவரத்து அதிக எண்ணிக்கையில் புழங்க ஆரம்பித்துவிட்டன. விபத்துக்கள் அதிகமாக ஏற்ப்பட இதுவும் ஒருகாரணமாக இருந்தாலும் உண்மைநிலையை பார்ப்போமேயானால் சாலை விதிமுறைகள் வாகனச் சட்டம் போன்றவைகளை கடைபிடிப்போர் அரிதிலும் அரிதாகவே உள்ளனர் என்றே சொல்லலாம். வாகன ஓட்டிகள் சாலைவிதிமுறைகளை சரிவர கடைபிடித்துவந்தாலே போதும் சாலைவிபத்துக்கள் சரிபாதியாகக் குறைந்துவிடும்.

அடுத்து பார்ப்போமேயானால் விதவிதமாக 2,3,4 சக்கரவாகனங்கள் வண்ணவண்ண வடிவமைப்பில் வலம்வரத் தொடங்கியபின் விபத்துக்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டனஎன்றே சொல்லலாம்..இதில் பரிதாபத்திற்க்குரியவை என்னவென்றால் எவ்வளவோ கொடூர விபத்துக்களை கண்கூட பார்த்தும் கேள்விப்பட்டபிறகும் அதிலிருந்து யாரும் படிப்பினைபெற்றதாக தெரியவில்லை.மீண்டும் பழைய நிலையிலேயே அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும்தான் வாகனம் ஓட்டுகிறார்கள்.

இதற்க்கு உதாரணமாக சமீபத்தில் நடந்த பெரிய சாலைவிபத்தைச் சொல்லலாம். கொடைக்கானலிலிருந்து திண்டுக்கல் நோக்கி பள்ளப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த குவாலிஸ் வாகனம் பால் டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி ஒன்பது பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.நெஞ்சை பதைபதைக்க வைத்து தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர வாகன விபத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திட முடியாது. இத்தனை பேரை மொத்தமாக பலிகொண்ட இந்த விபத்துக்கு காரணம் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்லவேண்டி முயற்ச்சித்ததுதானே .! சில நொடிகள் வேகத்தை குறைத்து அடுத்த வழித்தடத்தை கவனித்து வாகனத்தைச் செலுத்தியிருந்தால் பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம் அல்லவா.! இப்படி அனுதினமும் எத்தனையோ விபத்துக்களும் அதன்காரணமாக உயிரிழப்புக்களும் உடலுறுப்பு இழப்புக்களும் ஏற்ப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. 

அடுத்து பார்ப்போமேயானால் சாலையைக் கடக்கும் பொதுமக்கள் கூட ஒருவிதத்தில் விபத்துக்கள் ஏற்ப்பட காரணமாக இருக்கிறார்கள். வலப்புறம் இடப்புறம் வாகனம் வருகிறதா என்று கவனிக்காமல் சாலையைக் கடப்பதாலும் சாலையை கடக்க உகந்த இடத்தில் சாலையைக் கடக்காமல் ஆபத்து விளைவிக்கும் பகுதிகளில் சாலையைக் கடக்க முயற்சிப்பதும் சாலையின் மிக நெருக்கமான ஓரத்தில் நடந்து செல்வதும் பொதுமக்கள் செய்யும் தவறுகளாகும். 

இதற்கடுத்து பார்ப்போமேயானால் வாகனவிபத்துக்கள் நாளுக்குநாள் அதிகமாக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது..!

1, தக்க பயிற்சி இல்லாமல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது 

2, தூக்க நிலையிலும் குடிபோதையிலும் வாகனம் ஓட்டுவது.

3, அலட்சியமாகவும் கவனக் குறைவாகவும் வாகனம் ஓட்டுவது.

4, வாகனத்தை அடுத்த வழித்தடத்தில் ஓட்டிச்சென்று பிறவாகனத்தை முந்திச் செல்ல முயற்சிப்பது.

5, செல்பேசியில் பேசியபடியும் பாட்டு இசைகளை கேட்டபடியும் சிந்தனையை சிதறவிட்டபடியும் வாகனம் ஓட்டுவது 

6, குறுகிய சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டிச் செல்வது.

7, வேகத்தடை இருப்பதை கவனிக்காமல் வேகமாக வாகனம் ஓட்டுவது. 

இப்படி பல காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

ஒருகாலத்தில் நோய்வாய்ப்பட்டும்,முதுமை எய்தும், இயற்கையில் இறப்போர்கள் எண்ணிக்கைதான் அதிகப்படியாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையோ சாலைவிபத்துக்களில் பரிதாபமாக உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாகி விட்டதை நினைக்கும்போது நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது.

எனவே விலைமதிப்பில்லா உயிர்களை மனிதநேயத்துடன் காப்பது ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் கடமையாக இருக்கிரது.வாகனஓட்டிகள் கவனம் செலுத்தி தவிர்க்கப் படவேண்டியவைகளை தவிர்த்து நடந்துகொண்டால் பெரும் விபத்துக்களிலிருந்து விடுதலை பெறுவதுடன் தன்னையும் பாதுகாத்து பிற உயிர்களையும் காக்கலாம்.

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval