ஆம்புலன்ஸ் சைரன் கேட்டதும் பதற்றத்தோடு வழிவிட நினைத்தாலும், பைக் ஒதுங்கக்கூட இடம் இருக்காதபடி டிராஃபிக் இந்தியாவாக மாறிவிட்டன இந்திய நகரங்கள். அதுவும் பீக் அவர்ஸில் சொல்லவே வேண்டாம்! டிராஃபிக் நெருக்கடிகளையும் தாண்டி நினைத்த நேரத்தில் ஓர் உயிரைக் காப்பதற்கு என்னதான் வழி?,
வந்து விட்டது – பைக் ஆம்புலன்ஸ்! ஆசியாவிலேயே முதன்முறையாக பெங்களூருவில் டூ-வீலர் ஆம்புலன்ஸ் சர்வீஸை நேற்று கொடியசைத்துத் துவக்கியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா. இன்று முதல் கர்நாடகாவில் இந்த பைக் ஆம்புலன்ஸ்கள், சைரனுடன் ‘வ்வ்ர்ர்ரூம்’ என்று நகரங்களில் சுற்றி வருகின்றன.
30 டூ-வீலர் ஆம்புலன்ஸ்களில், முதலுதவி செய்வதற்கு முறையாகப் பயிற்சியளிக்கப்பட்ட, வாகன ஓட்டுதலில் தேர்ச்சி பெற்ற புண்ணியவான்கள் தயாராய் இருக்கின்றனர். வழக்கம்போல் 108-க்கு நீங்கள் போன் செய்தால் போதும்; அடுத்த ஐந்து முதல் பத்தாவது நிமிடத்தில் ‘தட் தட்’ என பைக் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு ஆஜராகிவிடும். விபத்து ஏற்பட்டவருக்கு முதலில் தேவைப்படுவது முதலுதவிதான் என்பதால், பைக் டிரைவர்கள் சரசரவென ஃபர்ஸ்ட் எய்ட்-ஐ ஃபாஸ்ட் எய்ட்-ஆக கொடுத்து முடிப்பதற்குள், ஃபோர்வீலர் ஆம்புலன்ஸும் ஸ்பாட்டுக்கு என்ட்ரி ஆகிவிடும்.
‘‘டிராஃபிக் நெருக்கடிகளைச் சமாளிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி எடுத்து வருகிறோம். பெங்களூருவில் டிராஃபிக் நெருக்கடி அதிகம் என்பதால், ஆம்புலன்ஸ்களால் குறித்த நேரத்துக்குச் சென்று விபத்து அடைந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. எனவேதான் இந்த பைக் ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது சோதனை முயற்சிதான். இப்போதைக்கு 30 பைக்குகளைக் களம் இறக்கியிருக்கிறோம். இதற்கு எப்படி வரவேற்பு என்பதைப் பொறுத்து, மேலும் இதைத் தொடரலாமா என்பது பற்றி முடிவெடுப்போம்!’’ என்று சொன்னார் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காதர்.
பெரும்பான்மையாக அவென்ஜர் பைக்குகள்தான் ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்றம் கண்டிருக்கின்றன. க்ரூஸர் பைக் என்பதாலும், அதிக இடவசதி கொண்டிருப்பதாலும் அவென்ஜரை இதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஸ்டெத்தஸ்கோப், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், பேண்ட்-எய்டுகள், சலைன் பாட்டில்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு அவென்ஜர் ஆம்புலன்ஸ் பைக்கின் விலை 2 லட்சமாம்.
விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது கர்நாடக சுகாதாரத் துறை!
courtesy;Today India.info
courtesy;Today India.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval