உலகின் எந்த மூலைக்கும் நான்கே மனி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன ரக விமானத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகின்றது.
<
தரையில் இருந்து புறப்படும் போது விமானத்தின் வேகத்திலும், புவி ஈர்ப்பு சக்திக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும் வேளையில் ராக்கெட் வேகத்திலும் சீறிப்பாயும் இந்த விமானத்தை தயாரிக்கும் இரண்டாம்கட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன.
முந்தைய முயற்சிகளில் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் அளவிலான வெப்பத்தை, ஒரு நொடியின் நூறில் ஒரு மடங்கு நேரத்தில் 150 டிகிரி வெப்ப நிலையாக குளிர்விக்கக் கூடிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒலியை விட இரண்டரை மடங்கு வேகத்தில் பாயும் ஜெட் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
ஆனால், இதைவிட இரு மடங்கு வேகத்தில்-அதாவது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ஜெட் எஞ்சின்களை இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து, அதற்கான காப்புரிமையும் பெற்று வைத்துள்ளது.
எனினும், வர்த்தக ரீதியாக இவ்வகையிலான விமானங்களை இந்த நிறுவனம் தயாரிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கி, ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன விமானங்களை தயாரிப்பதற்கான பரிசோதனை முயற்சியின் இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பயணிகள் விமானங்களுக்கான சிறிய வகை எஞ்சின்களை சுமார் 250 கோடி ரூபாய் செலவில் இன்னும் 3 ஆண்டுகளுக்குள் தயாரிக்க ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து, இவ்வகையிலான நவீன விமானங்களை தயாரித்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் எந்த மூலைக்கும் நான்கே மணி நேரத்தில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நவீன வகை ‘ஸப்ரே’ தொழில்நுட்பத்துடன் நாங்கள் தயாரிக்கவுள்ள ‘ஸ்கைலான்’ விமானங்கள் இன்னும் 10 ஆண்டுகளில் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ‘ஸ்கைலான்’ விமானங்களின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களையும் அனுப்பி வைக்க முடியும். இதன் மூலம், செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்துச் செல்ல ராக்கெட்டுகளின் உதவியை எதிர்பார்க்கும் தற்போதைய சூழ்நிலையில் மாற்றம் ஏற்படும்.
‘ஸ்கைலான்’ விமானங்களின் மூலம் மிகக்குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
courtesy;malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval