Sunday, November 15, 2015

சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் இறப்பு: டாக்டர் தகவல்

diabetes
உலக அளவில் சர்க்கரை நோயால் வினாடிக்கு 6 பேர் உயிரிழப்பதாக சர்க்கரை நோய் நிபுணர் தெரிவித்தார். தேனி மாவட்டத்தில் சர்க்கரை நோய் எதிர்ப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. சர்க்கரை நோய் குறித்து சிறப்பு சிகிச்சை நிபுணரான டாக்டர். ராஜ்குமார் கூறியதாவது: சர்க்கரை நோயானது முதல் பருவம், இரண்டாம் பருவம், கர்ப்பகால பருவம் என மூன்று பருவங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல் பருவம் சிறு குழந்தைகளை பாதிக்கச் செய்கிறது. 2ம் பருவம் 40 வயதை தொடுகிறவர்களுக்கும், கர்ப்ப கால பருவம் கர்ப்பிணி பெண்களையும் பாதிக்கச் செய்யும். பெரும்பாலும் சர்க்கரை நோயானது மரபு வழியாகவும், உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமையாலும் ஏற்படுகிறது.
சர்க்கரை நோய் வருவதை முன்னரே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் பெரும் பாதிப்பு இருக்காது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் விட்டுவிட்டால், சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தலைமுடி முதல் உள்ளம் பாதம் வரை பாதிக்கும். முடிவில் உயிரிழப்பு ஏற்படும்.
இந்தியாவில் சர்க்கரை நோயால் 6.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலை நீடித்தால், 2030 ல் 30 கோடி பேரை இந்நோய் பாதிக்கச் செய்யும். உலக அளவில் வினாடிக்கு 6 பேர் வரை சர்க்கரை நோயால் உயிரிழந்து வருகின்றனர். இதனை தவிர்க்க 30 வயதைத் தொட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும், உரிய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உணவு முறை கட்டுப்பாடு, உடற்பயிற்சி மேற்கொண்டால் சர்க்கரை நோயை 70 சதவீதம் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval