Thursday, November 19, 2015

ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.!?


பெரும்பாலும் நமதூர் பகுதிகளில் நாம் அனுதினமும் ஒருசிலரை பார்த்திருப்போம். வாய் ஓயாமல் அடுத்தார்களுக்கு ஏதாவது ஒரு உபதேசம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.உபதேசம் செய்வது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.மறுப்பதற்கில்லை. அதேசமயம் யாரொருவர் பிறருக்கு உபதேசம் செய்கிறார்களோ அந்த நபரும் ஓரளவுக்கு அவ்விசயத்தில் சரியாக கடைப்பிடித்து நடப்பவர்களாக இருக்கவேண்டும்.தாம் அந்த விசயத்தில் சரியாக இல்லாமல் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வாராயின் அதை யாரும் பெரும்பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.அவரை யாரும் மதிக்கமாட்டார்கள். மேலும் பல இழிவுச்சொல்லுக்கே ஆளாவார்கள்.இன்னும் சொல்லப்போனால் சிலர் வாய் கிழிய பொதுக்கூட்டங்களில் விழா நிகழ்ச்சிகளில் பல நல்லுபதேசங்கள் சொல்லி மிகச் சிறப்பாக சொற்ப்பொழிவாற்றுவார்கள். ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையில் இதற்க்கு நேர்மாறாக நடப்பவராக இருப்பார்கள். இவர் சொற்ப்பொழிவில் நல்ல விஷயங்ககள்,பல உண்மைகள்,நன்மைகள் இருந்தாலும் இவர் சொல்லியா நாம் கேட்பது சொல்பவரை முதலில் சரியாக நடக்கச் சொல்லுங்களென விமரிசனம் செய்து அவருடைய பேச்சை அலட்சியப்படுத்திவிடுவார்கள். அப்படியானால் அடுத்தவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்து என்ன இலாபம் இருக்கிறது.? சற்று சிந்திக்கவேண்டும்.

இதுபோல் அடுத்தவர்களுக்கு உபதேசிப்போர் தன்னிலையில் சரியாக இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளை சுட்டிக் காட்டலாம்.சில அரசியல்வாதிகள் எத்தனையோ ஊழல் மோசடி போன்ற குற்றங்களை தாமும் செய்துவிட்டு அடுத்தவர்களின் மோசடியையும் ஊழலையும் பட்டியலிட்டு காண்பித்து உரத்தகுரலில் மக்களுக்கு எடுத்துரைத்து உபதேசம் செய்து கொண்டிருப்பார்கள்.சில மருத்துவர்கள் புகைபிடித்தல் மது அருந்துதல் கூடாது. உடல் நலத்திற்கு தீங்கானது.அதனை விட்டுவிடுங்கள் என்று நோயாளிக்கு அறிவுரை வழங்கிவிட்டு அந்த மருத்துவர் அந்த பழக்கம் உள்ளவராக இருப்பார். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கக் கூடாது என கெடுபிடியாக பேசிவிட்டு தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரியின் உதவியுடன் லஞ்சம் பெற்றுக் கொள்வார். அது போல் சில ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களுக்கு புத்திமதி சொல்லிவிட்டு தமது சொந்த வாழக்கையில் அராஜகப் போக்குடன் ஈவு இரக்கமில்லாமல் தன்னிடம் பயிலும் மாணவ மாணவிகளிடமே பலாத்காரம், வன்புணர்வு போன்ற பெரும் தவறான குற்றப்போக்கை கையாழ்வார்.சில ஆன்மீகவாதிகள் பக்திப் பரவசத்துடன் கடவுளின் பெயரைச் சொல்லி காசுசம்பாதிப்பதுடன் கடவுளுக்குப் பிடிக்காத எல்லா செயலையும் செய்வார்கள். இப்படி தவறென தெரிந்தும் தப்பு செய்யும் இவர்கள் ஏன் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்.?

கல்வி பகுத்தறிவு உலக அறிவு எதையும் அறிந்திடாத மனிதர் கூட மனிதனாய் பிறந்திருப்பதால் அறிவுடன் யோசித்து கொஞ்சமாவது சிலவிசயங்களில் புரிந்து நடந்து கொள்வார்கள். ஆனால் நீண்ட உரை நிகழ்த்தி நல்லுபதேசம் வழங்கும் திறமைசாலிகள், படித்தவர்கள், அனுபவமிக்கவர்கள்,அனைத்து விசயங்களையும் நன்கு அறிந்தவர்கள் சிலரை பார்ப்போமேயானால் ஒன்றுமறியாத நபரிடம் இருக்கும் அந்த மனசாட்சிகூட இல்லாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இப்படி இருப்பவர்கள் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்து என்ன பயன்.? உபதேசம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.?

ஆக இன்றைய நிலையில் அரசியல்வாதிகளாகட்டும், ஆன்மீகவாதிகளாகட்டும் சிறந்த பேச்சாளராகட்டும் பெரும்பாலும் ஊருக்கு உபதேசம் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி. தனது சொந்த வாழ்வில் கடைப்பிடித்து நடப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளனர் என்பதை நாம் பல சம்பவங்களின் மூலம் அறியமுடிகிறது.

இறுதியாக சொல்லப்போனால் தவறு செய்யாத மனிதன் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது. ஆனால் தவறென்று தெரிந்திருந்தும் தன்னை திருத்திக் கொள்ளாதவன் மனிதனாய் இருக்க முடியாது. எது தவறு எது சரி என்கிற விபரம் தெரிந்தவர்கள் வயது வரம்பு இல்லாமல் அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யலாம். அதில் தவறில்லை. அதேசமயம் அப்படி உபதேசம் செய்பவர்கள் அதன்படி தானும் தனது நடைமுறை வாழ்க்கையில் சரிவர நடந்து கொள்ளவேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகிறது. எனவே ஊருக்குமட்டும்தான் உபதேசம் என்ற போக்கைவிட்டு தனக்குத் தெரிந்ததை நாம் தாராளமாக பிறருக்கு உபதேசம் செய்வதோடு அதன்படி நாமும் நமது நடைமுறைவாழ்வில் சரிவர நடந்து சமுதாய மக்கள் முன் நன்மதிப்பை தேடிக்கொள்வோம். !!!அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval