அந்தமான் அருகே மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 7ம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கடலூர் மாவட்டத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தோன்றிய மற்றொரு காற்றழுத்தம் வடக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மூன்று மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றுப் பாலங்கள் சிதைந்துள்ளன. ஏரிகள் உடைந்துள்ளன. பல ஏரிகள் நிரம்பி வழிந்தன.
இதற்கிடையே கடந்த 4 நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து சற்று வெயில் எட்டிப் பார்த்தது. ஆனால், வங்கக் கடலில் தென்மேற்கு திசையில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவானது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று பூதப்பாண்டியில் 40 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் நேற்று காலையில் இருந்தே மேக மூட்டம் காணப்பட்டது. மதியத்துக்கு மேல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர், தண்டையார்பேட்டை, தி.நகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, அசோக்நகர், பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், கோவளம், சோழிங்கநல்லூர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கி மாலை வரை மழை பெய்தது. இதுதவிர காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் கனமழை பெய்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்கிறது. அத்துடன் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தாழ்வு நிலைகள் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து வரும் பட்சத்தில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
மேலும், கடலில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் இருந்து 55 கிமீ வேகத்தில் காற்று வீசும். சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படும். அடுத்தடுத்த நாட்களில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரியிலும் கன மழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக் கூடும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval