சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். தறித்தொழிலாளி. இவர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு ரேசன் கார்டு கிடைக்கவில்லை. இதனால் அவர் சேலம் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியான சுந்தரியை சந்தித்து , ரேசன் கார்டு வழங்க கேட்டு பல மாதங்கள் ஆகிறது.
இதனால் தனக்கு ரேசன்கார்டு உடனே வழங்கிட வேண்டும் என கேட்டார். அப்போது அதிகாரி சுந்தரி ரூ.2ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனே ரேசன் கார்டு பெற்று தருவதாக கூறினார்.
இந்த பணம் தர விரும்பாத சுரேஷ் இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் செய்தார். இதை விசாரித்த துணை கண்காணிப்பாளர் சந்திரமவுலி லஞ்ச பணத்தை அதிகாரி சுந்தரியிடம் தர சுரேசை அனுப்பி வைத்தார். அவர் கூறியபடி சுரேஷ் நேற்று மாலை சுந்தரியிடம் லஞ்சம் பணத்தை கொடுத்தார்.
இதை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, நடராஜன், செல்வக்குமார், ரங்கராஜன் ஆகியோர் சுந்தரியை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணம் ரூ.2ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர் சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்தில் உள்ள ஊழல் தடுப்பு தனி நீதிமன்ற நீதிபதி பி,மோகன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த அவர், கைதான சுந்தரியை 15 நாள் சேலம் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பின்னர் சுந்தரி நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரேசன் கார்டு வழங்க கேட்டு அதிகாரி சுந்தரியிடம் பொதுமக்கள் பலரும் மனு கொடுத்து இருந்தனர். இதில் பலரது விண்ணப்பங்கள் அப்படியே கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. கத்தைகத்தையாக கிடந்த இந்த மனுக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி பொதுமக்கள் சிலரை அழைத்து விசாரித்தும் வருகிறார்கள். அதிகாரி சுந்தரி யார் யாருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கி உள்ளார், இவர்கள் சுந்தரிக்கு எவ்வளவு லஞ்சப் பணம் கொடுத்தனர் என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஏன் புதிய ரேசன் கார்டு தரவில்லை. லஞ்சப் பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தான் புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டதா? என்றும் விசாரணை நடக்கிறது.
அதிகாரி சுந்தரியுடன் பணியாற்றும் சில அதிகாரிகளையும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அழைத்து விசாரித்தும் வருகிறார்கள். புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனே தாமதமின்றி ரேசன் கார்டு வழங்கிட சேலம் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கேட்டு கொண்டு உள்ளனர்.
courtesy;Malaimalar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval