திருமண விழாவில் கிடைத்த ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மொய்ப்பணத்தை புதுமணத்தம்பதியினர் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நவிமும்பையில் நடந்துள்ளது.
தானேயை சேர்ந்தவர் தேவேந்திரா. அதே பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இந்தநிலையில் மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தேவேந்திரா மற்றும் ரோஷினியை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. எனவே அவர்கள் திருமணத்திற்கு முன்பே வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்து இருந்தனர்.
இந்தநிலையில் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தரும் மொய்ப்பணத்தை ஏன் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கக்கூடாது என அவர்கள் யோசித்தனர். தங்களின் இந்த முடிவை அவர்கள் பெற்றோரிடம் கூறினர். தேவேந்திரா மற்றும் ரோஷினியின் இந்த முடிவை அவர்களின் பெற்றோரும் பூரித்துப்போய் ஏற்றுக்கொண்டனர்.
மொய்ப்பணம்
இந்தநிலையில் தேவேந்திரா மற்றும் ரோஷினியின் திருமணம் நவிமும்பையில் உள்ள சான்பாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருமண விழாவில் புதுமணத்தம்பதியின் நல்ல செயலை ஊக்குவிக்கும் வகையில் உறவினர்களும், நண்பர்களும் மொய்ப்பணத்தை சற்று அதிகமாகவே கொடுத்தனர். மணப்பெண்ணின் தந்தை மட்டும் விவசாயிகள் நிவாரண நிதிக்கு தனிநபராக ரூ.1 லட்சம் கொடுத்தார். மேலும் திருமண விழாவில் கலந்துகொண்ட வாஷி ஏ.பி.எம்.சி. வியாபாரிகள் 45 பேர் மொத்தமாக சேர்த்து ரூ.9 லட்சம் கொடுத்தனர்.
இத்துடன் மணப்பெண், மணமகன் வீட்டார், நண்பர்கள் வழங்கியது எல்லாம் சேர்த்து ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் வரை கிடைத்தது. இதை அவர்கள் தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில மந்திரி கணேஷ் நாயக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval