Monday, March 7, 2016

மகத்துவம் நிறைந்த வெள்ளைப்பூண்டு!

poondu01
பூண்டு, வெள்ளைப்பூண்டு, பூடு, உள்ளி என அழைக்கப்படும் பூண்டு பருவகால தாவரமாகும். பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது. சுவாச கோளாறுகளை சரி செய்ய பூண்டிலுள்ள சல்பைடு எண்ணெய் மிகவும் உதவியாக உள்ளது.
வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும். நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது. கபத்தை இளக்கி தூக்கத்தை தரக்கூடிய பூண்டானது செரிமானத்தை சீர்படுத்தக்கூடியது; உடல் எடை கூட்டக்கூடியது.
வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து பூண்டை மட்டும் சாப்பிடுவதால் மேலே சொன்ன கோளாறுகள் எல்லாம் சரியாகும். பூண்டை ரசம் வைத்தும் சாப்பிடலாம், குழம்பும் வைத்தும் சாப்பிடலாம். இதன்படி, சிலர் ‘எங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு இல்லாமல் சமையலே கிடையாது’ என்பார்கள்.
சமையலில் பெயருக்கு பூண்டு சேர்ப்பதால் கிடைப்பதன் பலன் வேறு. மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பூண்டு ரசம், குழம்பு, துவையல் என பல்வேறு வடிவங்களில் சாப்பிடுவதன்மூலம் கிடைக்கும் பலன் வேறு. அதன் தனித்துவத்தின் காரணமாக வாயுதொடர்பான நோய்கள் குணமாகும். இதே வாயுத்தொல்லை உள்ளவர்கள் மட்டுமல்லாது இதயக்கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்திருப்பவர்களும் வெள்ளைப்பூண்டை வேக வைத்து சாப்பிடுவதால் நாளடைவில் அவர்களுக்கு நோய்கள் கட்டுக்குள் வரும்.
சளித்தொல்லை உள்ளவர்களுக்கும் வெள்ளைப்பூண்டு பலன் கொடுக்கும். 10, 15 பூண்டுப்பற்களை உரித்து 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக்கொள்ளவும். பால் + நீர் பாதியாக வற்றியதும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், மிளகுப்பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக கடைய வேண்டும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து இரவு தூங்கப்போவதற்கு முன் அருந்தினால் மூக்கடைப்பில் தொடங்கி, நெஞ்சுச்சளி, கபம், மலச்சிக்கல், ரத்த அழுத்தம், இதயக்கோளாறு போன்றவை சரியாகும். பிரச்னை உள்ள கால கட்டங்களில் சில நாட்கள் மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
இவைதவிர கிருமி தாக்கிய புண்களை, பூண்டுச்சாறுடன் தண்ணீர் கலந்து துடைத்து வருவதால் பலன் கிடைக்கும். இப்படி செய்வதன்மூலம் புண்களில் வலி குறைந்து, சீழ் பிடிப்பது குறைந்து நாளடைவில் புண் ஆறத்தொடங்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval