சென்னை: சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக்காக அதிமுக உடன் தமாகா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் தகவல் தமாகாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசில் இருந்து பிரிந்த தமாகா இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அதிமுகவா அல்லது மக்கள் நலக்கூட்டணியா என்ற குழப்பம் அக்கட்சியில் நிலவுகிறது. இப்படி கூட்டணி அறிவிப்பு தாமதமாவதாலும், சைக்கிள் சின்னம் மறுக்கப்படுவதாலும் தமாகா தொண்டர்கள் விரக்தியடைந்துள்ளனர். யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய ஜி.கே.வாசன் செய்த காலதாமதமே இத்தகைய நிலை ஏற்படக்காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 50 நாட்களே உள்ளன. வேட்பு மனுதாக்கல் ஏப்ரல் 22 தொடங்கி, 29ம் தேதியுடன் முடிகிறது. எனவே கூட்டணி, தொகுதிப்பங்கீடுகளை இம்மாதம் இறுதிக்குள் முடித்து விட அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. எத்தனை தொகுதி என்பதில் இரு கட்சிகளிடையே இழுபறி நீடிக்கிறது. மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன. கூட்டணிக்கான பெயரை முடிவு செய்து அறிவிப்பதிலேயே சிக்கல் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான அதிமுகவுடன் ஏற்கெனவே சமக உள்பட 9 கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தமாகா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் அதிமுக அழைப்புக்காக காத்திருக்கின்றன. கட்சி தொடங்கியது முதல் அதிமுக அரசு மீதான விமர்சனத்தை தவிர்த்து வரும் தமாகா தலைவர் வாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக 10 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் வாசனை இழுக்க மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகிறது. இதற்காக வாசனுடன் விஜயகாந்த் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் வாசனுடன் பேசி வருகின்றனர். ஆனால் வெற்றிக்கூட்டணியில் மட்டுமே தமாகா இணையும் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறார் ஜி. கே.வாசன்.
courtesy;one India
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval