உப்பின் வாரா உறுதிகள் உளவோ?
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வாழ்நாள் முழுவதும் போராட்டங்களைச் சந்திக்கும் பெற்றோர்ஏராளம். தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்த பிறகு பெற்றோரின் தியாகங்களை நினைக்காத குழந்தைகளுக்கு இடையில், தன் தந்தையின் போராட்டத்தை சிறிதும் மறக்காத ஸ்ருதி இன்று ஒரு நீதிபதி!
ஜலந்தரின் நக்கோடர் கிராமத்தில் உள்ள சப் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற வளாகத்துக்கு முன் சிறு டீக்கடை வைத்திருப்பவர் சுரேந்தர் குமார். தன் மகள் ஸ்ழைருதி ஒரு நாள் மிகப்பெரிய சாதனையாளர் ஆவாள் என்று உறுதியாக நம்பிய சுரேந்தர், கடினமான உழைப்பை பொருட்படுத்தாது தொடர்ந்து படிக்க வைத்தார். தந்தையின் கனவை நனவாக்க ஸ்ருதி, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று கொண்டிருந்த அதே வேளையில், பஞ்சாப் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கும் இரவு பகலாக விடாமுயற்சியுடன் படித்து வந்தார். இவரின் கடின உழைப்பு வீணாகவில்லை.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவியான ஸ்ருதி முதல் முயற்சியிலேயே அந்தத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நீதித்துறை அகாடமியின் ஓராண்டுப் பயிற்சிக்குப் பிறகு, தன் தந்தை டீக்கடை வைத்திருக்கும் அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். “இந்த வெற்றியை இன்று நான் அனுபவிப்பதற்குக் காரணம் என்னுடைய முயற்சி மட்டுமல்ல… என் எதிர்காலத்துக்காக, பல்வேறு நிதி நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்ட என் குடும்பத்தில் உள்ள அனைவரின் இடைவிடாத கடின உழைப்பும் உறுதியும்தான்’’ என்கிறார் ஸ்ருதி.
இந்தப் பதில், இளம் வயதிலேயே அவருக்குள்ள பக்குவத்தையே காட்டுகிறது. தன்னிடம் வரும் வழக்குகளுக்கு நீதிநெறி தவறாத சரியான தீர்ப்புகளையே வழங்குவார் என்பதில் ஐயமில்லை. அதோடு, தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு, தங்கள் சவால்களை விட்டுக் கொடுக்காமல் கனவுகளை பின்தொடர முன் உதாரணமாகவும் திகழ்கிறார் ஸ்ருதி!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval