Thursday, March 17, 2016

கார்த்திக்கின் ‘நாடாளும் மக்கள் கட்சி’ இரண்டாக உடைந்தது

Karthik600
யார், யாரோடு கூட்டணி வைக்கிறார்கள், யார் இருக்கிற கூட்டணியை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகளும், ஒரு சில இடங்களில் அதற்கான எதிர்பார்ப்பும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிற வேளையில், ‘திறந்த அழைப்பு’ம் சில கட்சிகளில்  இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு அழைப்பில் அறிவாலயம் ஏரியாவில் இன்று காலை (17.3.2016)  நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.
தி.மு.க தலைவரைச் சந்தித்து தனது கட்சிக்கான உரிய தொகுதிகளை கார்த்திக் வாங்கி விடுவார் என்று அவரது கட்சியினர் எதிர்பார்ப்பில் இருந்தனர். மீடியாக்களும் கார்த்திக் வருகையை எதிர்பார்த்து, அறிவாலயத்தில் காத்து நின்றன. ஆனால், கார்த்திக் அங்கு வரவில்லை. அதேபோல், தி.மு.க தலைவரும் கார்த்திக் தரப்பு சொல்லியிருந்த காலை 10 மணிக்கு அறிவாலயம் வரவில்லை. 12 மணியளவில் அங்கே தி.மு.க பொருளாளரான மு.க.ஸ்டாலின் மட்டுமே வந்தார். மீடியாக்கள் கூட்டமாக இருந்ததைப் பார்த்த ஸ்டாலின், காத்திருப்புக்கான காரணத்தைக் கேட்டுவிட்டு லேசாக புன்னகைத்தபடி அறிவாலயத்துக்குள் சென்று விட்டார்.
கார்த்திக் தூதரை சந்தித்த ஸ்டாலின்
இதற்கிடையே நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில், கட்சியின் மாநில தலைவர் சவுந்தர், அறிவாலயம் வந்து ஸ்டாலினை சந்தித்ததாக தகவல்கள் ஒரு பக்கம் வர ஆரம்பித்தது. கார்த்திக்-கருணாநிதி சந்திப்பு ஏன் நிகழவில்லை? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அறிவாலய சந்திப்பின் எதிரொலியாக  நாடாளும் மக்கள் கட்சியையே இரண்டாக உடைத்து விட்டார்கள் என்ற தகவலும் பரவ ஆரம்பித்து விட்டது. கடந்த தேர்தலில் கூட்டணிக்காக அ.தி.மு.க பக்கமும், காங்கிரஸ் பக்கமும் போய்விட்டு கூட்டணி பேசாமலே வந்தவர்தான் நடிகர் கார்த்திக் என்ற இமேஜ் இன்னமும் இருக்கிறது. இப்போது அந்தக் கட்சியே உடைகிறது என்ற இமேஜும் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை?
கார்த்திக் கட்சி உடைப்பா?
நாடாளும் மக்கள் கட்சித் நிறுவனர் கார்த்திக் தரப்பிலேயே தொடர்பு கொண்டோம். அவருடைய இரண்டு செல்போன் இணைப்புகளும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. கட்சி உடைந்ததாக சொல்லப்படும் தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஏரியாக்களில் அது பற்றி பேசினோம். முதல் சுற்றிலேயே, ‘கார்த்திக் கட்சி உடைந்து அதிலிருந்து இன்னொரு மாற்றுக் கட்சி உருவாகப் போவது உண்மைதான்’ என்றது அந்த தகவல். தாமிரபரணி அணை தூர் வாருவோர் பணி மேம்பாட்டுக்குழுவின் நிர்வாகியும், நாடாளும் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளருமான ராஜாதான் நாடாளும் மக்கள் கட்சி (2)- ன் (இப்போதைக்கு இதுதான் பெயர்) நிறுவனர் -தலைவர். அவர்தான் நடிகர் கார்த்திக்கின் கட்சியிலிருந்து வெளியே வருகிற புதிய தலைவர் என்கின்றனர்.
போராடாத தலைவர் கார்த்திக்
அவர்களிடம் பேசியபோது, “தேர்தல் நேரத்தில் மட்டுமே வெளிப்படுகிற ஒரு தலைவர் இந்திய அளவில் இருக்கிறார் என்றால் அது நடிகர் கார்த்திக்தான். வடமாவட்டத்தில் எத்தனை, எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தோழர்கள் உதயகுமார், முகிலன், நடிகர் சீமான் மற்றும் நாடாளும் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர் நடத்தினர். ஆனால், ஒன்றில் கூட கார்த்திக் பங்கேற்றதில்லை. பெப்சி, கோக் நிறுவனங்களுக்காக தாமிரபரணி சுரண்டப்படுவதைக் கண்டித்தும், மணல், கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கக் கோரியும் நடந்த அத்தனைப் போராட்டங்களிலும் எங்களின் நா.ம.கட்சி இருக்கும். ஆனால், கட்சியின் நிறுவனர் கார்த்திக் அங்கு இருக்க மாட்டார். நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தினால், ‘தேர்தல் முடியட்டும் அதுக்குள்ள என்ன அவசரம்? அப்போ இறங்கிடுவோம்’ என்பார்.
2006, 2011, 2016 என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படித்தான் எங்களுக்குப் பதில் சொல்வார். ஆனால், கார்த்திக் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றாலே எங்கள் பகுதியில் சமுதாய மக்கள் 5 ஆயிரத்துக்கு குறையாத எண்ணிக்கையில் கூடி விடுவார்கள். நடிகராகவும் இருப்பதால் அது பத்தாயிரமாக கூடிவிடும். அவருடைய தந்தை நடிகர் முத்துராமன் போட்டுவைத்த பவுண்டேசன் அது. இதைப் பார்த்துவிட்டு ஏதோ தமிழ்நாடே நமக்குத்தான் சொந்தம், இந்தப் பூவரசன் சொன்னால் ஊரே கேட்கும் என்பது போல அவர் நடந்து கொள்கிறார். அதன் எதிர்வினைதான் நாடாளும் மக்கள்  கட்சியில் இருந்தே அவரை  நீக்கும் வேலையில் இறங்கியுள்ளோம்” என்றனர்.
‘கட்சியை ரிஜிஸ்டரே பண்ணலைங்க’
‘அதற்கெல்லாம் பெரிய அவசியமே இல்லைங்க… முதலில் அந்தக் கட்சியை பதிவு பண்ணியிருக்காரான்னு மட்டும் அவரைக் கேட்டுச் சொல்லுங்க?’ என்று கிண்டலடிக்கிறது, கார்த்திக்கின் எதிர்ப்பு வட்டத்தில் உள்ள இன்னொரு டீம். இது என்ன புதுப்புரளியாய் இருக்கே? என்றபடி அதையும் கேட்க ஆரம்பித்தேன்.  “அறிவாலயத்துக்குப் போய் கார்த்திக் சார்பாக ஏதோ பேசிவிட்டு வந்திருக்கும் நா.ம.கட்சியின் இந்த நிமிடத்துக்கான மாநிலத் தலைவர் சவுந்தருக்கே கார்த்திக் லெட்டர் பேட் போட்டுத்தரவில்லை. ஏனென்றால் எந்த ரிஜிஸ்ட்ரேசனை வைத்து கட்சிக்கென்று லெட்டர் பேட் போடுவார்? கார்த்திக்கும் போனில் பேசமாட்டார், அவர் சார்பில் அந்த கட்சியின் தலைவராக இருக்கும் சவுந்தரும் கார்த்திக்கிற்கு தெரியாமல் பேசவோ, பேட்டி கொடுக்கவோ முடியாது. நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்சிக்கென எந்தவித கட்டமைப்பும் இல்லாத நிலையை மாற்றியவர் ராஜா. அவர்தான் கார்த்திக்கை தூக்கி நிறுத்தியவர்.
கைது என்றால் பயப்படுவார் கார்த்திக்
நல்ல விஷயத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல்னு செய்தால் அந்த இடத்துக்கு கார்த்திக் வரவே மாட்டார். நாங்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தி ‘நீங்க கண்டிப்பா வரணும்’ என்று கேட்டுக் கொண்டால், “போலீஸ் பர்மிஷன்லாம் முறைப்படி வாங்கிட்டுத்தான் நாம போராடணும், சரியா… இல்லைன்னா, நம்மளை புடிச்சிக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்ருவாங்க” என்று சின்னக் குழந்தைகள் போல பயப்படுவார். ஏன், சீமானும் இவரைப் போல ஒரு நடிகர்தானே?  அவர் ஆர்ப்பாட்டம் நடத்தி கைது ஆனதே இல்லையா? இவர் ஏ.சி.யிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர், அரசியலுக்கு வந்ததே தவறுதானே?”  இப்படி ஒரு தரப்பில் பதில் வருகிறது.
அதனால்தான் உடைக்கிறோம்
திமுகவுடன் கார்த்திக் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்குப் போன ஒருமணி நேரத்தில் இப்படி கட்சியே இரண்டாகி விட்டது என்றும், இதற்கு முன்னுதாரணமாக  நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உடைந்து சமத்துவ மக்கள் கழகம் என்ற பெயரில் இன்னொரு கட்சி உருவானதையும் சுட்டிக் காட்டுகிறார்களே… என்ற கேள்வியை முன்வைத்து புதிய நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகத்தில் வரவிருப்பவர்களிடம் பேசியபோது, “தமிழர்களுக்கு எதிரியான தி.மு.க.வில் நாங்கள் கூட்டு சேரமாட்டோம் (அட, நாம சரியாத்தான் கேட்டிருக்கோம்?!) காங்கிரசின் துணையோடு ஆயிரமாயிரம் தமிழர்களின் இன்னுயிரை கொன்று குவித்தது இலங்கை அரசு. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டும் அதைத் தடுக்கவோ, கூட்டணியை விட்டு வெளியேறவோ கொஞ்சமும் விரும்பாத தி.மு.க.வோடு கூட்டணியை எங்களால் எப்படி நினைத்துப் பார்க்கமுடியும்? இதை பலமுறை நாங்களே கார்த்திக்கிடம் பேசியுள்ளோம். அப்போதெல்லாம், அவர் தலையாட்டிக் கொள்வார். இப்போது ஒரு தலையாட்டி பொம்மையை, அறிவாலயத்துக்கு  தூதராக அனுப்பி வைத்திருக்கிறார். எத்தனை மாவட்டச் செயலாளருக்கு இவர் கட்சியில் லெட்டர் பேட் கொடுத்திருக்கிறார் என்று கேட்டுப் பாருங்கள்” என்றனர்.
புதிய தலைவர் பேட்டி
பலகட்ட சேசிங்கிற்கு பிறகு சிக்கினார் ராஜா. “கார்த்திக் பற்றி நீங்கள் சேகரித்திருக்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையே. யாருடன் கூட்டணி, அடுத்த கட்ட முடிவு என்ன? இப்படி பல விஷயங்களை நிர்வாகிகளுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் கலந்து பேசித்தான் சொல்ல முடியும். இரண்டொரு நாளில் தலைநகர் (சென்னை) வருகிறேன், விரிவாகப் பேசலாமே” என்று முடித்தபோது, நண்பரிடமிருந்து ஒரு போன். “ஆமாம், உறுதியான தகவல்தான், மொத்தமா கிளம்பி வந்துக்கிட்டிருக்காங்க. எல்லாம் பேசி முடிஞ்சுடுச்சு. வாங்க நேரில் பேசுவோம்” என்று அழைத்தார்.
ஏப்ரல் 1-க்குள் எத்தனை (ஏ)மாற்றங்கள் நிகழப் போகிறதோ…

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval