மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண் எதிரேயே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கணவன்–மனைவி
அம்பத்தூர் வெங்கடாபுரம் ஒரகடம் குறுக்குத் தெருவில் வசிப்பவர் நமசிவாயம். ஓய்வுபெற்ற துறைமுக ஊழியர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (வயது 58). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை கணவன்–மனைவி இருவரும் அம்பத்தூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
லாரி மோதி பலி
பட்டாபிராம் அருகே சி.டி.எச். சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கிய கிருஷ்ணவேணி, கணவர் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். லேசான காயங்களுடன் நமசிவாயம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான கிருஷ்ணவேணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த காமராஜ் (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval