ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கார்கில் செக்டாரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலியான நெல்லை வீரர் சிப்பாய் விஜயகுமார் தனது தாயின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் செக்டாரில் கடந்த 17ம் தேதி லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பனிச்சரிவு ஏற்பட்டதில் 2 வீரர்கள் பனியில் சிக்கி புதையுண்டனர். தேடல் பணி துவங்கப்பட்ட அன்று சிப்பாய் சுஜித் உயிருடன் மீட்கப்பட்டார்.
சிப்பாய் விஜயகுமார்(23) மூன்றாவது நாள் அதாவது கடந்த 20ம் தேதி தான் 12 அடி ஆழ பனியில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது கையில் தாயின் புகைப்படத்தை வைத்தபடி இறந்திருந்தது மீட்புக்குழுவினரை நெகிழ வைத்துவிட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் 21 வயதில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் சேர்ந்தார். பயிற்சி காலத்திலேயே சிறந்து விளங்கி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றவர்.
பயிற்சி முடிந்து 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி அவர் பட்டாலியனில் சேர்ந்தார். அவர் சேர்ந்த பட்டாலியனுக்கு கார்கில் சிகரத்தில் பணி அளிக்கப்பட்டபோது அவர் கடுங்குளிரில் நாட்டை காக்க தயாரானார். விஜயகுமார் தனது தாய் முத்துக்குட்டி மீது அதிக பாசமாக இருந்தார். அவருக்கு அவரது தாய் தான் உலகம். இந்நிலையில் அவர் தாயின் புகைப்படத்தை பிடித்தபடி இறந்துள்ளார். அவரது தந்தை கருத்தபாண்டியன் ஒரு விவசாயி. விஜயகுமாருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். விஜயகுமார் பற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், விஜயகுமார் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பனியில் புதையுண்டு பலியானார். 17,500 அடி உயரம் கொண்ட கார்கில் சிகரத்தில் சிரமமான சூழலில் அவர் சிறப்பாக பணியாற்றினார். அவர் பணியாற்றிய இடம் பனிக்காலத்தில் 6 மாதம் வரை யாரும் செல்ல முடியாத அளவுக்கு இருக்கும். அவர் பணியாற்றிய இடம் பனிக்காலத்தில் 10 முதல் 15 அடி பனியால் சூழப்பட்டிருக்கும் என்றார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval