Sunday, September 4, 2016

துணிவின் முகமே துக்கம் கொள்ளாதே!


ரலாற்று பொன்னேடுகளில் பதிக்கப்பட்டவர்களில் பலரது வாழ்க்கை  சோகமானது. ஆனால் மற்றவர்களுக்கு பாடமாகக்கூடியது. கோரமான சோகத்தைத் தாங்கிக்கொண்டு, உலக பெண்களுக்கே தன்னம்பிக்கை பாடமாக திகழ்பவர் டெல் லியை சேர்ந்த லட்சுமி அகர்வால். அவரது வாழ்க்கைப் பதிவில் சில பக்கங்களை மட்டும் புரட்டுவோம்!

லட்சுமி பெயருக்கு ஏற்ற மங்களகரமான முகத்தைக் கொண்டிருந்தவர். அப்போது பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து பறக்கும் பருவத்தில் இருந்தார். வயது 15. தனக்காக அந்த கொடூர மனம் படைத்தவன் காத்திருப்பது தெரியாமல் அன்று, வழக்கம்போல் புத்தகம் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

கையில் பாட்டிலோடு திடீரென்று தோன்றிய அவன், வக்கிரமாக சிரித்தபடி லட்சுமியின் முன்னால் வந்து நின்றான். அவர் திடுக்கிட்டு ‘நீயா?’ என்று கேட்க, ‘ஆமாம் நானேதான்! உனக்கு ஒரு பரிசு தரப்போகிறேன். அதை நீ உன் ஆயுள் முழுக்க ஞாபகம் வைத்திருக்கப்போகிறாய். இப்போது என்னை நினைக்க மறுக்கும் நீ, இனி ஒருபோதும் என்னை நீ மறக்கவே மாட்டாய்’ என்று குரூரமாக சிரித்தான்.

லட்சுமி இடத்தைவிட்டு நகர முயற்சிக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை கீழே தள்ளினான். தடுமாறி கீழே விழுந்ததும், தன் கையில் இருந்த பாட்டிலை திறந்து லட்சுமியின் முகம், கை, கால், உடல் என்று எல்லா பகுதியிலும் கொட்டிவிட்டு, ஓடிவிட்டான்.

தனக்கு என்ன நேர்ந்தது என்றுகூட லட்சுமியால் அனுமானிக்க முடியவில்லை. நெருப்பை வாரி கொட்டியதுபோல இருந்தது. தன்மீது கொட்டப்பட்டது மிகுந்த வீரியமுள்ள ‘ஆசிட்’ என்பதை உணர்ந்தார். வலியால் அழுது துடித்தார். கூட்டம் கூடியது. தொட்ட இடமெல்லாம் தோல் கையோடு வந்தது. காது, கம்மலோடு கழண்டு வந்துவிட்டது. இந்த பயங்கரத்தை பார்க்க சகிக்க முடியாமல் மக்கள் மனம் துடித்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல லட்சுமியை தொட்டுத் தூக்கக்கூட முடியவில்லை. அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்ப்பதே பெரும்பாடாகிவிட்டது. அவர் அழுது புரண்ட இடங்களில் கொத்துக் கொத்தாய் தசை உதிர்ந்திருந்தது. 

லட்சுமி அப்போது 7–ம் வகுப்பு மாணவி. கனவுகள், கற்பனைகள் சிறகை விரிக்க துள்ளி விளையாடிக் கொண்டிருந்த பருவம். நன்றாக பாடவும், ஆடவும் செய்வார். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் எல்லாம் அதை பார்த்து ரசிப்பார்கள். 

இதைக் கண்ட ஒருவனுக்கு லட்சுமி மீது காதல் வந்தது. அவன், அவளைவிட இரண்டு மடங்கு வயதில் பெரியவன். விளையாட்டாகத்தான் தன்னை காதலிப்பதாக சொல்கிறான் என்று நினைத்த லட்சுமிக்கு அவன் கொடூரமானவனாக மாறப்போகிறான் என்று தெரியவில்லை.

லட்சுமி வெளியில் போகும்போது, வரும் போதெல்லாம் வழி மறித்து வம்பு செய்தான். வம்பு எல்லை மீறியது. தன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தினான். அதனால் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி லட்சுமி அழ, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அவனை மடக்கிப் பிடித்து அடித்து நொறுக்கினார்கள். ‘இனி இந்த பக்கம் வந்தால் தொலைத்துவிடுவோம்’ என்று துரத்தினார்கள். அவமானம் தாங்காமல் அவன் தலைமறைவானான்.

அதன்பிறகு அன்று தான் வீரியமிக்க ஆசிட் பாட்டிலோடு ஊருக்குள்  நுழைந்திருக்கிறான். மலர்ந்தும் மலராத அந்த அழகு மலரை ஆசிட்டால் சிதைத்துவிட்டு, ஓடிவிட்டான்.

அவரது கருகிய முகத்திற்கும், உடலுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. எந்த தவறும் செய்யாத தனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை என்று குமுறினார். முடியாது என்று சொன்ன ஒரு வார்த்தை தன்னை வாழ்க்கை முடிவிற்கே கொண்டு வந்துவிட்டதே என்று அழுதார்.

சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் கொஞ்சம் கொஞ்சமாக தேறியது. தன் முழு உருவத்தை கண்ணாடியில் பார்த்தார். கோரமாக இருந்தது. கதறி கதறி அழுதார். லட்சுமியை நன்றாக அழவிட்ட மருத்துவர்கள், ‘உண்மையை புரிந்துகொள். மனதை தேற்றிக்கொள். வேறு வழியில்லை’ என்றார்கள். ‘அவன் ஏன் என்னை அரைகுறையாகவிட்டான். இதற்கு பதில் அவன் என்னை கொன்றிருக்கலாமே. சுடுகாட்டில் எரிந்துகொண்டிருந்த பிணம் பாதியில் எழுந்து வந்துவிட்டதைபோல் ஆகிவிட்டேனே! இனி இந்த உலகத்தில் எனக்கு எந்த வேலையும் இல்லை. மரணம் வரும் வரை என் முகத்தை மறைத்துக்கொண்டு நான் காத்திருக்கவேண்டியதுதான்’ என்று கதறினார்.

உடல் தேறினாலும் வலி போகவில்லை. உடலின் ஒவ்வொரு பகுதியும் வலியால் துடித்தது. எல்லோரும் ஆறுதல் சொன்னார்கள். ஊரின் முக்கியஸ்தர்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் வந்தார்கள். அவளுடைய வலியை யாராலும் வாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒருகட்டத்தில் சமூகத்தின் மீது லட்சுமிக்கு கோபம் வந்தது. பல நாட்கள் வீட்டிலே அடைபட்டுக்கிடந்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டார். அவரைப் போலவே பாதிக்கப்பட்ட பலருடைய வாழ்க்கை அவருக்கு கூறப்பட்டது. மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. தன்னைப்போல் பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்றார். அவர்களோடு நட்புகொண்டார். மனம்விட்டுப் பேசினார். அதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

‘இனி தன்னைப்போன்று எந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் இருக்க என்ன வழி?’ என்று சிந்தித்தார். ஆசிட் வீசும் கொடிய வர்களை தடுக்கமுடியாது. ஆனால் ஆசிட் கண்டபடி விற்பனையாவதை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தார். தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட பெண்களை எல்லாம் ஒன்று திரட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்தவேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.

அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் 2013–ம் ஆண்டு ஆசிட் விற்பனைக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. ஆசிட் வாங்குபவர்கள், ஊர், பெயர், அதை பயன்படுத்தும்விதம் போன்ற தகவல்களை கூறி அடையாள அட்டையை காட்டினால்தான் ஆசிட் வாங்க முடியும். ஆசிட் விற்பனையை முறைப்படுத்தியது லட்சுமியின் முயற்சிக்கு கிடைத்த முழு          வெற்றியாகும்.

ஆண்கள் எல்லோரும் கொடூரமானவர்கள் என்ற எண்ணம் முதலில், லட்சுமி மனதில் வேரூன்றி இருந்தது. அதனால் ஆண்களை வெறுத்தார். அப்போதுதான் அவரை சமூக சேவகர் முஹிம் சந்தித்தார். ஆண்களை பற்றிய லட்சுமியின் கருத்தை மாற்றினார், முஹிம். அவர் அரசு வேலையைவிட்டுவிட்டு சமூக சேவையில் ஈடுபட்டு, ஆசிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மையம் ஒன்றையும் இயக்கிவந்தார்.

முஹிம் செய்த சமூக சேவைகளிலேயே உயர்ந்த சேவை லட்சுமியை தன் வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவரது வாழ்க்கையில் ஒரு வசந்தமும் பூத்தது. ஒரு குழந்தைக்கு தாயானார். 

குழந்தை எங்கே தன் முகத்தை பார்த்து பயந்துவிடுமோ என்று நினைத்து அதன் அருகில் செல்ல தயங்கினார். தாயன்பில் அழகுக்கு இடம் ஏது! பீஹூ என்ற அந்த குழந்தை  லட்சுமியை ஒருநேரமும் பிரிவதில்லை. தான் நடத்தும் சேவை மையத்திற்கு அந்த குழந்தையோடுதான் சென்று வருகிறார். 

இவரை பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நம்பிக்கை துளிர்க்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா இவருக்கு ‘உமன் ஆப் கரேஜ்’ விருது வழங்கினார். இது சர்வதேச அளவில் சிறந்த தன்னம்பிக்கை பெண்மணிக்கு வழங்கப்படுவது. சிறகுகள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் நடத்தி லட்சுமி பெண்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். புகழ்பெற்ற இந்திய பேஷன் நிறுவனம் ஒன்று தங்களுடைய நவீன ஆடைகளுக்கான விளம்பர மாடலாகவும் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அந்த விளம்பரத்தின் தலைப்பு ‘‘துணிவின் முகம்’’.

உண்மைதான்! லட்சுமி உலகிற்கே துணிச்சலின் முகமாக இருக்கிறார் அல்லவா!
courtesy;dailithanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval