Monday, September 19, 2016

உயிரைப் பறித்த வி.ஐ.பி.க்களின் கொண்டாட்டம்!

 டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய வி.ஐ.பி.யின் மகன் ஒருவர் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகட்டு ஓடி விபத்துக்குள்ளானது. சென்னையில் நடந்த இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்.பி.எல்) கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு பார்ட்டி கொடுக்கப்பட்டது. அந்த பார்ட்டியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜயானந்தின் மகன் விகாஸ், அவரது நண்பர்கள் பங்கேற்றனர். பார்ட்டிக்குப் பிறகு விகாஸ், 2 கோடி மதிப்பிலான சொகுசு காரில் நண்பருடன் கடற்கரை நோக்கி சென்றார். அதிகாலை 3.15 மணியளவில் கார் ராதாகிருஷ்ணன் சாலை- கதீட்ரல் சாலை சந்திப்பில் உள்ள பாலத்தின் கீழே சென்றது.

அப்போது அங்கு ஏராளமான ஆட்டோக்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். மின்னல் வேகத்தில் பறந்த கார், ஆட்டோக்கள் மீது மோதின. மொத்தம் 13 ஆட்டோக்களை சேதப்படுத்தியும் கார் நிற்கவில்லை. மதுமயக்கத்தில் இருந்த விகாஸ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன நடந்தது கூட தெரியவில்லை. ஒருவழியாக கார் அனைத்து ஆட்டோக்களையும் சேதப்படுத்தி விட்டு சிறிது தூரம் சென்று நின்றது. காரும் கடுமையாக சேதமடைந்தது. இருப்பினும் சொகுசு கார் என்பதால் காருக்குள் இருந்த இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.



இந்த சம்பவத்தால் தூங்கிக் கொண்டு இருந்த ஆட்டோ டிரைவர்களில் ஆறுமுகம், வரதன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இன்று காலை ஆறுமுகம் உயிர் இழந்தார். இது தொடர்பாக சாஸ்திரிநகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார், விகாஸ், அவரது நண்பர் சரண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு மது அருந்தியதற்கான பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய சொகுசு கார் மற்றும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "விகாஸ் கார் ரேஸராக உள்ளார். அவரது நண்பர், பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். கிரிக்கெட் போட்டி வெற்றிக்காக நடந்த பார்ட்டியில் பங்கேற்ற விகாஸ் உள்ளிட்ட நண்பர்கள் அதிகவேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்" என்றார். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval