Monday, September 19, 2016

புத்தகத்தைத் திறக்காமலே, படிக்கலாம்!#TerahertzCamera


ஒரு புத்தகத்தை திறக்காமலே, அதில் இருக்கும் எழுத்துக்களைப் படிக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியும், ஜார்ஜியா தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்தப் புதுத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு விஞ்ஞானியும் இடம் பெற்றுள்ளார்.

சாதாரணப் புத்தகங்களைப் படிப்பதில் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் நீண்ட காலமான பழங்காலப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். பழங்காலப் புத்தகங்களை திறந்தாலே, அதற்கு சேதம் ஏற்பட்டு விடும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அதனை முழுமையாக படிப்பது என்பது கடினமான விஷயம். அவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே இந்த ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் மியூசியம்.

எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?



மனித உடலை ஊடுருவி செல்லும் எக்ஸ்- கதிர்களைப் போலவே, இதில் டெராஹெர்ட்ஸ் அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மைக்ரோ அலைகள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களுக்கு இடைப்பட்ட அலைகள். "இதன் மூலம், காகிதம் மட்டுமின்றி எந்தவொரு அடர்த்தி குறைவான பொருட்களின் மீதும் ஊடுருவ முடியும். இதனால் இயந்திரங்களின் மீது எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் ஆராயலாம்" என்கிறார் விஞ்ஞானி  பர்மக் ஹெஷ்மட்..  டெராஹெர்ட்ஸ் அதிர்வலைகள், X-கதிர்கள் போல இல்லாமல், காகிதம் மற்றும் அதன்மேல் அச்சிடப்பட்டிருக்கும் மையை பிரித்து உணரும் ஆற்றல் கொண்டது.  இந்த புதிய முறையில் டெராஹெர்ட்ஸ் கேமரா, கதிர்களை புத்தகத்தை நோக்கி செலுத்தும். அது புத்தகத்தில் பட்டு திரும்ப வருவதை கேமராவின் சென்சார் பெற்றுக்கொள்ளும். திரும்ப வரும் கதிர்களை கொண்டு என்ன எழுத்துகள் என்று கண்டறியப்படும். அது சென்று வரும் நேரத்தை வைத்து எவ்வளவு தொலைவு, எந்தப் பக்கம் என்று கண்டுபிடித்துவிடும்.

இதனை முதல்கட்டமாக சோதனை செய்துபார்த்ததில் வெற்றியடைந்துள்ளனர் விஞ்ஞானிகள். தற்போது 20 பக்கங்கள் வரை, இந்த கேமரா மூலம் உணர முடிகிறது. 9 பக்கங்கள் வரை தெளிவாகப் படிக்க முடிகிறது. ஆனால் விரைவில், இதனை மேம்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் இதனை மெருகேற்றினால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவி புரியலாம்.





























No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval