Tuesday, September 27, 2016

அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள்!


குளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
உணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
கழிவுகளை நீக்கும் வெந்நீர்
காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.
வெந்நீர் குடிக்க உகந்த நேரம்
எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.
செரிமான மண்டலம் மேம்பட...
நமது இரைப்பையானது, புரத செரிமானத்துக்குத் தேவையான பெப்ஸின், ரெனின் முதலான என்ஸைம்களைக் கொண்டுள்ளது. இவை இரைப்பையில் இருக்கும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.
செல்கள் புத்துணர்வு பெறும்
வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.
போதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval