Thursday, March 9, 2017

1 ஏக்கர்... 90 நாட்கள்... 70 ஆயிரம் வருமானம்... அசத்தும் பெண் விவசாயி..!

வெள்ளரிபேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலையில் குறிக்கிடும் ரயில்வே கேட்கள், டோல்கேட்கள்... என அனைத்திலும் இந்தக் குரலைக் கேட்டிருப்போம். பயணத்தின்போது உடல் சூட்டைக் குறைக்கவும், தாகம் தீர்க்கவும் பலரும் உண்பது வெள்ளரியைத்தான். அதனால் வெள்ளரிக்கு எப்போதுமே நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலுமே பரவலாக வெள்ளரி சாகுபடி நடந்து வந்தாலும்... குறிப்பாக, சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி நடந்து வருகிறது. மழைக்கு முந்தைய மாதங்களில் மானாவாரியாகவும், கோடைக்காலங்களில் இறவைப்பயிராகவும் இப்பகுதிகளில் வெள்ளரி விளைவிக்கப்படுகிறது.
இங்கே, நாட்டு ரக வெள்ளரி விவசாயத்தை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார், சங்ககிரியை அடுத்துள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி மாணிக்கம். இவர், மா, தென்னை, மரவள்ளி, நெல், வெள்ளரி என கலந்து கட்டி சாகுபடி செய்து வருகிறார். வெள்ளரி வயலுக்குள் வேலை செய்துகொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகம் மலர்ந்து பேசத் தொடங்கினார்.
ஊடுபயிராக வெள்ளரி!
“எங்க பூர்வீகமே இந்த ஊருதாங்க. பரம்பரை விவசாயக் குடும்பம். அவர், கட்டட கான்டிராக்டரா இருக்கார். நான் விவசாயத்தைப் பாத்துக்கிறேன்.
மொத்தம் 15 ஏக்கர் நிலமிருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப்பாசனம்தான். நல்ல மழை பேஞ்சு கிணத்துல தண்ணீர் நின்னுச்சுனா... 15 ஏக்கர்லயும் வெள்ளாமை வைப்போம். பக்கத்துல ஏரி, குளம்னு ஒரு நீர் ஆதாரமும் கிடையாது. அதனால இருக்கிற தண்ணீரை வெச்சு மரவள்ளி, வெள்ளரினு சாகுபடி செய்றோம். இப்போதைக்கு 4 ஏக்கர்ல மரவள்ளி, அரை ஏக்கர்ல நெல், 6 ஏக்கர்ல மா, தென்னை இருக்கு. பண்ணை வீடு, தொழுவம் அரை ஏக்கர்ல இருக்கு. மீதி நிலம் சும்மாதான் இருக்கு.
மழை கிடைச்சா சோளம், கடலைனு மானாவாரியா போட்டு எடுத்துக்குவோம். இல்லேனா மாடு, கன்னுகளை மேய்க்கிறதுக்குப் பயன்படுத்திக்குவோம். இப்போ தென்னைக்கு இடையில ஊடுபயிரா ஒரு ஏக்கர்ல மட்டும் வெள்ளரி இருக்குது. எப்பவும் ரெண்டு, மூணு ஏக்கர்ல நடுவோம். இப்போ தண்ணி பத்தாக்குறையால ஒரு ஏக்கர்ல மட்டும் நட்டிருக்கோம். 15 ஏக்கர்ல 11 போர்வெல் போட்டிருக்கோம். அதுலயும் ஒண்ணு ரெண்டுலதான் தண்ணி கிடைக்குது” என்ற ராஜேஸ்வரி, தொடர்ந்தார்.
பருவம் பார்த்து பயிர் செய்யணும்!
“இது நாட்டு வெள்ளரிங்கிறதால இதுல இருந்தே விதை எடுத்து வெச்சுக்குவோம். இது குறுகியகாலப் பயிர்ங்கிறதால, விதைச்ச நாப்பதாவது நாள்ல இருந்து காய் பறிக்கலாம். தொடர்ந்து 50 நாட்களுக்கு காய்ப்பு இருக்கும். முழுக்க முழுக்க இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றோம். குழந்தைங்க, பெரியவங்கனு எல்லாரும் விரும்பி சாப்பிடுற பொருள் இல்லீங்களா... அதுல துளியும் ரசாயனம் இருக்கக் கூடாதுங்கிறது எங்க விருப்பம். அதனாலதான் நம்மாழ்வார் அய்யா கத்துக்கொடுத்த இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி சாகுபடி செய்றோம். மாசி, பங்குனி, சித்திரை மாசம்னு வெயில் காலங்கள்ல பறிப்பு வர்ற மாதிரி விதைக்கணும். அந்த சமயத்துலதான் அதிக தேவை இருக்கும். நாங்க தை மாசம் விதைச்சோம். இப்போ பறிப்பு நடந்துக்கிட்டிருக்கு” என்ற ராஜேஸ்வரி, வெள்ளரி சாகுபடி முறைகளைச் சொல்ல ஆரம்பித்தார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஊடுபயிராக வெள்ளரி
ஏக்கருக்கு 250 கிராம் விதை!
`நாட்டு ரக வெள்ளரியான இதன் வயது 90 நாட்கள். ஒரு ஏக்கருக்கு 250 கிராம் விதை தேவை. பழுத்து வெடித்த பழங்களில் இருந்து விதைகளைச் சேகரித்து பஞ்சகவ்யாவில் நனைத்து நிழலில் காய வைத்துச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை, கார்த்திகை மாதத்தில் மழை பெய்து ஈரம் காய்ந்த பிறகு...  நன்கு உழுது கொள்ள வேண்டும். பிறகு, 5 டன் ஆட்டு எருவுடன் 3 டன் தொழுவுரத்தைக் கலந்து இறைத்து உழ வேண்டும். 10 அடி இடைவெளியில் இரண்டடி அகலத்துக்கு வாய்க்கால்களை அமைத்து... வாய்க்கால்களின் இரண்டு வரப்புகளிலும் 3 அடி இடைவெளியில் ஒரு குழிக்கு இரண்டு விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். தொடர்ந்து வாய்க்கால் வழி நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். வாரம் இரு முறை பாசனம் அவசியம். விதைத்த 10-ம் நாளில் துளிர்விடும். இந்த சமயத்தில் தேவைப்பட்டால் களையெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழிக்கும் 250 கிராம் அளவில் செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை வைத்துப் பாசனம் செய்ய வேண்டும்.
ஊட்டத்துக்கு பஞ்சகவ்யா...
பூச்சிக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி
15-ம் நாளில் பத்து லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்கிற அளவில் பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து கைத்தெளிப்பான் மூலம் அதிகாலை வேளையில் புகை போல் தெளிக்க வேண்டும். 20-ம் நாளில் வளரும் கொடிகளை வயலுக்குள் படர விட வேண்டும். 30-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூத்து பிஞ்சுகள் பிடிக்கும். இந்த சமயத்திலும் தேவைப்பட்டால், களையெடுத்து மேற்சொன்ன அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.
35-ம் நாளில் ஒவ்வொரு குழிக்கும் 500 கிராம் அளவில் ஆட்டு எரு வைத்து பாசனம் செய்ய வேண்டும். 40-ம் நாளில் பிஞ்சுகள் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிஞ்சுகளை அதிகம் முற்ற விடாமல் இரண்டு விரல் பருமன் இருக்கும் பருவத்தில் பறித்து விட வேண்டும். தொடர்ந்து 50 நாட்கள் காய் பறிக்கலாம். காய் பறிக்க ஆரம்பித்த 10 மற்றும் 20-ம் நாட்களில் ஒவ்வொரு குழிக்கும் 250 கிராம் மண்புழு உரம் வைக்க வேண்டும். கொடி படர்ந்து பிஞ்சு பிடிக்கும் காலத்துக்குள் அசுவிணி மற்றும் சாறு ஊறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இவற்றை மூலிகைப் பூச்சிவிரட்டி மூலம் கட்டுப்படுத்தலாம். அதேபோல, பிஞ்சு, காய் பருவங்களிலும் இக்கரைசலைத் தெளித்து வந்தால்... பிஞ்சுகளை துளை போட்டு சேதப்படுத்தும் சிவப்பு வண்டு, பச்சைப்புழு ஆகியவற்றையும் விரட்டி விடலாம்.’
இரண்டு தரங்களில் பிஞ்சுகள்!
சாகுபடிப் பாடம் முடித்த ராஜேஸ்வரி, நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றிப் பேச ஆரம்பித்தார். “நாங்க பிஞ்சுகளை கூடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்றோம். இயற்கை விவசாயத்துல விளைவிக்கிற தகவல் தெரிஞ்சு சுத்துப்பட்டுல இருக்கிறவங்க வீட்டுத்தேவைக்காக நேரடியா வந்து வயல்லயே வாங்கிட்டும் போறாங்க.
பிஞ்சு பறிக்கத் தொடங்குன முதல் 40 நாட்கள்ல முதல் தரத்துல ஒரு நாளைக்கு 1,000 பிஞ்சுகள் கிடைக்கும். குறைந்தபட்சமா ஒரு பிஞ்சுக்கு 1 ரூபாய் 50 காசு விலை கிடைக்கும். இதன் மூலம், 40 நாட்கள்ல 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். கடைசி 
10 நாட்கள்ல இரண்டாம் தரத்துல ஒரு நாளைக்கு 1,000 பிஞ்சுகள் கிடைக்கும். பிஞ்சுக்கு 1 ரூபாய் வீதம் 10 நாட்கள்ல 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் ஒரு ஏக்கர்ல இருந்து 90 நாட்கள்ல 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல மொத்தச் செலவு 20 ஆயிரம் ரூபாய் போக... 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்று மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார், ராஜேஸ்வரி. .
வழிகாட்டும் பசுமை ஒலி!
“முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்துல வெள்ளரி சாகுபடி செய்தாலும்... இதுவரை நான் எந்த இயற்கை விவசாயப் பயிற்சியிலயும் கலந்துகிட்டதில்லை. பசுமை விகடன்ல பசுமை ஒலிக்கு போன் பண்ணுனா தேவையான தகவல் கிடைச்சிடும். நான் அது மூலமாத்தான் பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி எல்லாத்தையும் முழுசா தெரிஞ்சிக்கிட்டு வெள்ளரி சாகுபடிக்குப் பயன்படுத்தினேன்” என்று சொல்கிறார், ராஜேஸ்வரி.
மூலிகைப் பூச்சிவிரட்டி!
காட்டாமணக்கு, நொச்சி, வேம்பு, ஆடுதீண்டாபாளை ஆகிய நான்கு  இலைகளிலும் தலா 5 கிலோ வீதம் எடுத்து... 10 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு, வடிகட்டி சுத்தமான பாத்திரத்தில் சேகரித்தால்... மூலிகைப் பூச்சிவிரட்டி தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் என்கிற விகிதத்தில் கலந்து பயிர்கள் நனையும்படி காலைவேளையில் தெளிக்க வேண்டும்.
25/03/2015 பசுமை விகடன் இதழில் வெளியான கட்டுரையை மீண்டும் பகிர்கிறோம்.
- ஜி.பழனிச்சாமி

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval