Tuesday, March 28, 2017

’லிம்கா சாதனைப் புத்தக’த்தில் இடம் பெற்ற சாதனை! ஆந்திராவைப் பார்த்துக் கற்றுக் கொள்வோம்!

நதிகளை இணைத்த சந்திரபாபு நாயுடுஇப்போது உலகம் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்னை...தண்ணீர். மூன்றாம் உலகப் போரும் தண்ணீருக்காகவே நிகழும் என்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழகம் தண்ணீரில் மிதந்தது. இந்த ஆண்டு வறட்சியால் தவிக்கிறது.   தமிழகத்தில், கிடைக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டிய 'நீர் மேலாண்மைத் திட்டம்' அரசிடம் நிச்சயமாக  இல்லை என்றே  கூற வேண்டும். தூர்ந்து கிடக்கும் குளங்கள், ஏரிகளைக் கண்டால், எந்த விவசாயிக்கும் வயிறு பற்றிக் கொண்டுதான் வரும். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், இளைஞர்களிடையே குளங்கள், ஏரிகளை காக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்பு உணர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் இளைஞர்கள் களமிறங்கி குளம், குட்டைகளை தூர் வாருவதைக் காண முடிகிறது.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுதான் தீர்வு என்று சொல்லப்படுகிறது. நதி நீர் இணைப்பு குறித்து பல ஆண்டு காலமாகவே பேசப்படுகிறது.  நேரு காலத்தில் பெரிய நதிகளான பீயாஸ் - சட்லெஜ் நதிகள் பெரிய கால்வாய் மூலம் இணைக்கப் பட்டுள்ளன. இதேபோல் சட்லெஜ் நதியையும் யமுனையையும் இணைப்பதற்காக ஹரியானா , பஞ்சாப் மாநிலங்களில் சில மாவட்டங்களில் கால்வாய் வெட்டப்பட்டது. பின்னர், காலிஸ்தான் பிரச்னையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. 
இதற்கு பின், இந்தியாவில் இரு நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லாத விஷயமாக கருதப்பட்டது. ஆனால்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளை இணைத்து புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ;அதுவும் ஒரே ஆண்டுக்குள். ஆந்திராவைப் பொறுத்த வரை கிருஷ்ணா, கோதாவரி நதிகள் முக்கியமானவை. மஹாராஷ்டிர மாநிலத்தில் உற்பத்தியாகும் கோதாவரி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை வளம் கொழிக்க வைத்து 1,465 கிலோ மீட்டர் தொலைவு ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. கிருஷ்ணா நதி 1,300 கி.மீ நீளம் கொண்டது. இந்த நதி மகாராஷ்ட்ரா  ,கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது. 
ஆந்திராவில் ராயலசீமா வறட்சி பாதித்த பகுதி. அதே வேளையில், தென்னிந்தியாவிலேயே கோதாவரி நதியில் இருந்துதான் அதிகமானத் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி கடலில் கொண்டு சேர்ப்பது 3 ஆயிரம் டி.எம்.சி தண்ணீர். கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைப்பதால், ராயலசீமா, கிருஷ்ணா டெல்டா பகுதியில் 7 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும். இதனால்தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரு நதிகளையும் இணைக்கத் திட்டமிட்டார். நதிநீர் இணைப்பு திட்டத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
நதிகள் இணைத்த சாதனைக்கு லிம்கா அங்கீகாரம்கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி  திட்டம் அறிவிக்கப்பட்டது. திட்டத்துக்கானச் செலவு ரூ. 1,427 கோடி.2015ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. ஹைதரபாத்தைச் சேர்ந்த மெகா இன்ஜீனியரிங்  நிறுவனம் சவாலாக எடுத்து இந்தப் பணியை மேற்கொண்டது. கேதாவாரி ஆற்றில் பட்டிசீமா என்ற இடத்தில் பிரமாண்டமான 'பம்ப் ஹவுஸ்' அமைக்கப்பட்டது. ஆசியாவிலேயே இந்த பம்ப் ஹவுஸ்தான் பெரியது. 24 பிரமாண்ட பம்புகள் ( 24 vertical turbine pumps)  இங்கு பொருத்தப்பட்டன. ஒவ்வொரு பம்பும் 4,611 குதிரைத் திறன் கொண்டது. இதனால், நாள் ஒன்றுக்கு 8,500 கியூபிக் தண்ணீரும் எடுக்க முடியும். இந்த பம்ப் ஹவுஸ் 173 நாட்களில் கட்டப்பட்டடது. கோதாவரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக கால்வாயில் தண்ணீர் பாய்ச்ச முதல் திட்டம் தயாரானது. 
பட்டீசீமா பகுதியில் இருந்து  போலாவரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு,  கிருஷ்ணா நதியில் சேர வழி ஏற்படுத்தப்பட்டது.   பணிகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடந்தன. ஒரே ஆண்டுக்குள் அனைத்தும் நிறைவடைந்தன. பணிகள் நடைபெறும் இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆந்திர முதல்வர் அதனை தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவிலேயே இவ்வளவு விரைவாக ஒரு நதி மற்றொரு நதியுடன் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை. 
கடந்த  2015 மார்ச் 29ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. 2016ம் ஆண்டு மார்ச் 30ம் தேதிக்குள் பணிகள் நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இந்தத் திட்டத்தை சந்திரபாபு நாயுடு நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.  தற்போது இந்த சாதனை 'லிம்கா' புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கோதாவரி நதியில் இருந்து கடலில் கலக்கும் 80 டி.எம்.சி தண்ணீரை ஆந்திரா மிச்சப்படுத்தியுள்ளது. 
vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval