Monday, March 27, 2017

கணவரை கைது செய்ய வந்த போலீசாரின் கண்முன்னே தீக்குளித்த மனைவி!


கணவரை கைது செய்ய வந்த போலீசாரின் கண்முன்னே தீக்குளித்த மனைவி!குற்ற வழக்குகளில் தொடர்புடைவரை கைது செய்ய சென்ற போலீசார் முன்பு, அவரது மனைவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்த மோகன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.  சமீபத்தில் சிறைக்கு சென்று விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் வேறொரு வழக்கில், மோகனை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்ற சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவமணி மற்றும் உதவி ஆய்வாளர் சேகர் உட்பட சில காவல்துறையினர், மோகனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் மோகன் உடனடியாக வரவில்லை என்றால் உங்கள் குடும்பத்தையே உரு தெரியாமல் அழித்து விடுவோம் என கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து மோகன் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டு அஞ்சிய மோகனின் மனைவி பத்மாவதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை உயிரிழந்தார். 

இதையடுத்து, பத்மாவதி உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் வரை  உடலை வாங்க மாட்டோம் என பத்மாவதியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டனர். 

இந்த சம்பவம் புதியதல்ல எனக்கூறும் பத்மாவதியின் மகள் பிரியங்கா, தனது தந்தை மீது பல ஆண்டுகளுக்கு முன்பாக சில பிரச்னைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், அதனை காரணமாக வைத்து தினந்தோறும் காவல்துறையினர் தங்களை தொந்தரவு செய்வதாகவும் கூறுகிறார். சிந்தாதிரிப்பேட்டைக்குள் இரவு நேரங்களில் அடிக்கடி நுழையும் காவல்துறையினர் தங்களை மிரட்டி பல்வேறு வழக்குகளில் ஒப்புக் கொள்ள வைப்பதாகவும், மறுத்தால் தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களை குறிவைத்து துன்புறுத்தும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே எங்களைப் போன்ற பொதுமக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பதே சிந்தாதிரிபேட்டை பொதுமக்களின் கருத்தாக உள்ளது. 
news7

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval