மூன்றாம் உலகப்போர்' என்று ஒன்று உருவானால், அதற்குக் காரணம் தண்ணீராகத்தான் இருக்க முடியும் என்று அனைத்து நாடுகளும் அச்சுறுத்தி வருகின்றன. தண்ணீரை நாம் பாதுகாக்கத் தவறியதன் விளைவுதான் இன்று நாம் பார்க்கும் தண்ணீரற்ற ஆறுகள், ஏரிகள், குளங்கள். ஒரு காலத்தில் தண்ணீர் இல்லாமல் தமிழகத்தின் எந்த ஓர் ஆற்றையும், ஏரியையும் பார்க்க முடியாது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. தலைகீழாக மாறிவிட்டது. தண்ணீர் இல்லாததன் பயனால், தினம்தினம் பல ஏக்கர் விவசாய நிலங்களையும், பல விவசாயிகளையும் இழந்துகொண்டிருக்கிறோம். இலவசமாக நமக்குக் கிடைக்கவேண்டிய குடிநீரை, பாலின் விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வரப்போகிறது என்றால் நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இந்த நிலை இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் தமிழ்நாடே பாலைவனமாக மாறிவிடும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்துக்கும்தான். அது எப்படி உலகம் பாலைவனமாகும் என்று நீங்கள் நினைத்தால்... வெறும் 55 ஆண்டுகளில் ஒரு கடலே காணாமல் போய், அந்த இடம் முழுவதும் இன்று பாலைவனமாக மாறி இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'உலக தண்ணீர் தினமான' இன்று 'காணாமல்போன ஒரு கடலை'ப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
1960-ம் ஆண்டு சுமார் 68,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருந்தது ஏரல் ஏரி. இதன் பரப்பளவு கடல்போல் பறந்துவிரிந்து இருந்ததால், இந்த ஏரிக்கு 'ஏரல் கடல்' என்ற பெயரும் உண்டு. இந்த ஏரல் கடலானது மத்திய ஆசியாவைச் சேர்ந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் அமைந்திருந்தது. ஷியர் தர்யா மற்றும் அமு தர்யா என்ற இரண்டு ஆறுகள் இந்த ஏரிக்குத் தண்ணீரை வாரிவழங்கியது. இந்தக் கடலைச் சுற்றி இருந்த சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் பரப்பளவு.
மத்திய ஆசியாவில் அதிகமான இடங்கள் வறண்ட நிலங்களாகவே இருந்தன. அதனால், ஏரல் ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளையும் தடுத்து பருத்தி பயிர் செய்யப் பயன்படுத்தலாம் என்று சோவியத் யூனியன் சொல்ல... இந்த ஏரியை நம்பியிருந்த நாடுகள் சம்மதம் தெரிவித்தன. விளைவு அந்த ஏரிக்குத் தண்ணீர் தரும் இரண்டு ஆறுகளும் தடுக்கப்பட்டு சிறுசிறு கால்வாய்களாக மாற்றப்பட்டன. மேலும், ஏரியின் நீரும் விவசாயத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 1980-ம் ஆண்டில் சுமார் 70 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புகளில் பருத்தியை உற்பத்தி செய்துவந்தனர். அதனால், அந்தப் பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை சரசரவென உயர ஆரம்பித்தது. பருத்திச் செடி, தண்ணீரை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிடும். இருந்தாலும், அனைவரும் செய்த மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது. பருத்தி உற்பத்தியை மேம்படுத்த ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினர். விளைவு, நிலங்கள் அனைத்தும் விஷமேறின. அதனால், தண்ணீரின் அளவும் அதிகமாகத் தேவைப்பட 'ஏரல் ஏரியின்' நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதோடு விட்டிருந்தால்கூட 'ஏரல் கடல்' தப்பித்திருக்கும். ஒருபுறம், ரசாயன உரங்களால் நிலத்தை அழித்துக்கொண்டிருந்தனர். மற்றொருபுறம், தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட வேதியியல் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் கடலில் கொட்டத் தொடங்கிவிட்டனர். இதனால் விவசாய நிலங்களும், 'ஏரல் கடலும்' தனது கனிம வளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கின. ஏரித் தண்ணீர், ரசாயனக் கழிவுகளால் விஷமேறி இருந்ததால்... மீன்களும் இறக்கத்தொடங்கின. அதனால் ஏரியில் மீன்பிடித் தொழிலும் நின்றுபோனது. 1995-ம் ஆண்டுக்குப் பிறகு ஏரல் கடலும், அதனை நம்பியிருந்த விவசாய நிலங்களும் பாலைவனங்களாக மாறத்தொடங்கின. ஏரியில் இருக்கும் விஷம்... காற்றில் கலந்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தூரம்வரை தாக்கியதால், அந்தப் பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இன்று அந்தப் பூமியே ஒரு பாலைவனமாக மாறிவிட்டது. ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்த காலத்தில் போக்குவரத்துக்காகவும், மீன்பிடித் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களும், படகுகளும் தண்ணீர் இல்லாத அந்த ஏரியின் மணலில் புதைந்து இருப்பதை இன்றும் நாம் காண முடியும்.
தண்ணீரைப் பாதுகாக்கத் தெரியாமல் சிறு கால இடைவெளிக்குள் ஒரு கடலையே இந்த உலகம் இழந்திருக்கிறது. வெறும் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளால் மட்டும் இந்தப் பேரழிவு ஏற்படவில்லை. விவசாயம் செய்வதற்கு ரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தியதும் இந்தக் கடல் அழிந்துபோனதுக்கு மிகப்பெரிய காரணம். இன்று நாமும் அப்படி ஒரு தவற்றைத்தான் செய்துவருகிறோம். விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நிலங்களில் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி, நிலங்களை மட்டும் அல்லாமல் நிலத்தடி நீர், ஆறு மற்றும் ஏரி நீர் அனைத்தையும் அழித்துவருகிறோம். மழை வராமல் இருப்பதற்கும், நீர் வற்றிப்போனதற்கும் இயற்கை மட்டும்தான் காரணமென நீங்கள் இப்போதும் நினைக்கிறீர்களா?
இந்த 'உலக தண்ணீர் தினத்தில்' அருகில் இருக்கும், ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருக்கும் கனிமவளங்கள், கொள்ளைபோகாமல் பாதுகாக்கவும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நிலங்களை அழிக்காமல் இருப்பதற்கும் சபதம் எடுப்போம். இல்லையேல், ஒருநாள் காணாமல்போன கடல் லிஸ்ட்டில் நம்மைச் சுற்றி இருக்கும் கடல்களும் சேர்ந்துவிடும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval