Sunday, June 22, 2014

தமிழ் மொழி செழித்து வளர 6 அம்ச செயல் திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வலியுறுத்தல்

apjதமிழ் மொழி செழித்து வளர 6 அம்ச செயல்திட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் தமிழ் மொழி செழித்து வளரும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வலியுறுத்தி பேசினார்.

‘தமிழ் இலக்கியத் திருவிழா’ 

தினமணி மற்றும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ‘தமிழ் இலக்கியத் திருவிழா’ வின் தொடக்க விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. துணைவேந்தர் தாண்டவன் தலைமை தாங்கினார். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா முன்னிலை வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:


தொழில் புரட்சி முதல் அறிவியல் புரட்சி வரை அது எந்த மொழியினரால் நடத்தப்படுகிறதோ அந்த மொழியே ஆதிக்கம் பெறுகிறது. அவ்வாறு ஆதிக்கம் பெறும் மொழி வழக்கு மொழியாக மாறி, அது பின்னர் வாழ்வியல் மொழியாக மாறுகிறது. எனவே, தமிழ் பேசலாம், கேட்கலாம், எழுதலாம், படிக்கலாம் என்ற நிலை மாறி அது வாழ்வின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்ற நிலை என்று வருகிறதோ, அன்றைக்கு தான் தமிழ் வளரும்.

தமிழர்களின் கல்வி, வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், மின்னியல், கணிதம், நீதி, வங்கித்துறை செயல்பாடுகள், அரசியல், சினிமா, ஊடகங்கள் என அனைத்திலும் தமிழ் என்ற நிலையை ஏற்படுத்தி, அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் மட்டுமே, தமிழ் மென்மேலும் செழித்து வளரும். தமிழ் பல்கலைக்கழகம், தமிழ் மொழி மீது ஆர்வம் உள்ளவர்கள், தமிழ்த் துறையின் தலைவர்கள், தமிழ் படிக்கும் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆறு முக்கிய செயல் திட்டங்களைச் செய்ய வேண்டும்.

6 செயல்திட்டங்கள் 

அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வேளாண்மை, மின்னியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை, சட்டம் போன்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயன்பாட்டு மொழியாக தமிழை கொண்டுவரத் தேவையான தமிழ் சொற்களை உருவாக்க வேண்டும். அனைத்துத்துறைகளிலும் உள்ள பாடப் புத்தகங்களை, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் வெளிவரும் ஆராய்ச்சி நூல்களை அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களோடு சேர்ந்து, அதன் செழுமை மாறாமல் தமிழ் மொழியில் மாற்றம் செய்ய வேண்டும். அதை கல்வி பயில்வதற்கான நூலாக மாற்றம் செய்து அதை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

உலக தொடர்பு மொழியான ஆங்கிலத்தையும், தாய்மொழியான தமிழையும் அடிப்படையாக வைத்து நமது மொழியை வளர்க்க வேண்டும். முதலில் தமிழ் மொழியில் உயர்கல்வியை கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம்.

தமிழ் மொழி வளரும் 

தமிழ் மொழி வளர்வதற்கு உயர்கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பங்கள், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ்மொழியிலேயே ஆராய்ச்சிகளைச் செய்து தாய் மொழியிலேயே சிந்திக்கும் திறனையும், கற்பனைத் திறனையும் மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், நாம் உலகத் தரத்தோடு புதிய சாதனங்களை, எந்திரங்களை உற்பத்தி செய்து உலக நாடுகளோடு போட்டி போட்டு வெற்றி பெற முடியும். இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். இதன்மூலம் தொழில் மேம்பாடு அடைவதோடு, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும்.

ஆட்சி அதிகாரத்திலும், சட்டம் மற்றும் நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, அதை, துணை ஆட்சி மொழியாக பயன்படுத்த வேண்டும். தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமல்லாது, மற்ற இந்திய மொழிகளையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அதேபோன்று, மற்ற மொழிகளின் நூல்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும். இந்த ஆறு அம்ச திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் தமிழ் மொழி செழித்து வளரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வரவேற்று பேசியதாவது:–

அந்நிய மொழிக்கலப்பு 

எந்த ஒரு மொழியும் வழக்கொழிந்து போவதற்கு மூல முதல் காரணம், அளவுக்கு அதிகமான அந்நிய மொழிக் கலப்பு தான். 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வடமொழி இருந்திருக்கிறது. 1,100 ஆண்டுகளாக உருது இங்கே பேசப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளாக தெலுங்கு பரவலாக வழக்கத்தில் இருந்து வருகிறது. 500 ஆண்டுகளாக மராட்டியம் தமிழகத்தில் நுழைந்து அரசவை மொழியாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் தமிழ் அழிந்துவிடவில்லை. மாறாகத் தழைத்தோங்கி இருக்கிறது. வெறும் 250 ஆண்டுகள் தான் ஆங்கிலேயர் நம்மை ஆண்டனர். தமிழ் தன் அடையாளத்தையே இழந்துவிட்டது.

வடமொழிக் கலப்பில்லாத, உருது கலப்பில்லாத தெலுங்கின் தாக்கமில்லாத, மராட்டியத்தின் வாடையே இல்லாத தமிழை நாம் பேசிவிட முடியும். ஆங்கிலக் கலப்பில்லாத தமிழை நம்மில் எத்தனை பேரால் பேச முடியும். இந்த உண்மைதான் பயமுறுத்துகிறது. இப்படிப்பட்ட மொழிக் கலப்புதான் மெல்ல, மெல்லப் புற்றுநோயாகத் தமிழை அழித்து அடையாளம் தெரியாமல் சிதைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

தமிழில் பேச சூளுரைப்போம் 


ஆங்கில வழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது கருத்து. ஆனால், தமிழின் அழிவில் ஆங்கில வழிக் கல்வி தேவையில்லை என்பது தான் நமது வாதம். ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் அறிவியலில் சாதனைகளைப் படைத்திருக்கின்றனர் என்றால் அவர்கள் அவர்களுடைய தாய்மொழியான ஆங்கிலத்தில் பயில்கின்றனர். இங்கே தமிழில் பேசினால் தரக்குறைவு, அவமானம் எனக் கருதும் மனநிலை மாற வேண்டும்.

தமிழ் வாழ்ந்தால் தான் தமிழ் பத்திரிகைகள் வளரமுடியும். ஊடகங்கள் தான் ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் சிதைவுக்கும் காரணமாக அமையும். ஊடகங்கள் மொழியைக் கொச்சைப்படுத்தினால், அதுவே மொழியின் வீழ்ச்சிக்கு மேலதிகமான காரணமாகிவிடும். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் பேசுவோம், தமிழில் பேசுவோம் எனச் சூளுரைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இலக்கிய அமர்வுகள் 

முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், குமரிஅனந்தன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் க.ப.அறவாணன், சாஸ்த்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியன், ராம்ராஜ் காட்டன் அதிபர் கே.ஆர்.நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ‘இன்றைய தேவையும் இலக்கியமும்’ என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வுக்கு அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார். வீ.அரசு, எஸ்.ராமகிருஷ்ணன், நா.கண்ணன் மற்றும் ‘என்னைச் செதுக்கிய இலக்கியம்’ என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் ஆகியோர் பேசினர். காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம் என்ற தலைப்பில் நடந்த 2–வது அமர்வு ஞானராஜசேகரன் தலைமை தாங்கினார். எஸ்.பி.முத்துராமன், கே.பாரதி, ரோகிணி மற்றும் ‘என்னைச் செதுக்கிய இலக்கியம்’ என்ற தலைப்பில் திருச்சி சிவா ஆகியோர் பேசினர். ‘தகவல் ஊடகத்தில் தமிழ்’ என்ற தலைப்பில் நடந்த 3–வது அமர்வில் மூத்த பத்திரிகையாளர் மாலன் தலைமை தாங்கினார். ஆ.இரா.வேங்கடாசலபதி, சுபாஷிணி ட்ரம்மல், கண்ணன் மற்றும் ‘என்னைச் செதுக்கிய இலக்கியம்’ என்ற தலைப்பில் தமிழருவி மணியன் ஆகியோர் பேசினர். ‘மொழியும் பெயர்ப்பும்’ என்ற தலைப்பில் நடந்த 4–வது அமர்வுக்கு சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நா.குறிஞ்சிவேலன், கா.செல்லப்பன், சி.மோகன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து ஜாகிர் உசேன் குழுவினரின் ‘தசாவதாரம்’ நாட்டிய நாடகம் நடந்தது.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘சமயமும் தமிழும், வாசிப்பும் பழக்கமும்’, ‘வேர்களைத் தேடி இலக்கியம்’, ‘வேர்களைத் தேடி கலைகள்’ ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் நிறைவு விழாவில் கவர்னர் கே.ரோசைய்யா, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியம் உட்பட பலர் பேசுகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval