Tuesday, June 24, 2014

கண்ணை அகற்ற வேண்டிய (Indications) முக்கிய காரணங்கள்

eye : Eye icon

உயிரோடிருக்கும் போது கண்தானம் செய்யக் கூடாதா? சட்டத்தில் இடமில்லையா? என்று நண்பர் நிலாசூரியன் கேள்வி எழுப்பி இருக்கிறார். 

நான் அரசு ராசாசி மருத்துவமனை கண் மருத்துவ வெளி நோயாளிப் பிரிவில் இருக்கும் போது ஓரிருவர் என்னை அணுகி, 'என் மகளுக்குத் திருமணத்திற்கு பணம் தேவையிருக்கிறது. நான் கண்தானம் செய்கிறேன், பணம் கிடைக்குமா' என்று கேட்டிருக்கிறார்கள்.

*உயிரோடு இருப்பவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கண்தானம் செய்ய முடியாது*.

தானம் என்ற பின் அதற்கு விலையேது? உயிரோடிருக்கும் போது ஒருவரை ஊனப்படுத்தி, கண்ணைப் பெறுவது தார்மீகப் படியும், சட்டப்படியும் தவறு. தண்டனைக்குரிய குற்றம்.

கண்ணை அகற்றுவது 'Enucleation' எனப்படும். அதற்கு தகுந்த காரணங்கள் வேண்டும்.

நோயுற்ற கண்ணை அகற்றும் முன் நோயாளிடமும், நெருங்கிய உறவினரிடமும், கண்ணை எடுக்க வேண்டிய அவசியம் பற்றியும், அதன் சாதக பாதகங்கள் பற்றியும் முழுமையாக விளக்க வேண்டும்.

நோயாளிடமும், நெருங்கிய உறவினரிடமும் கையெழுத்துப் பெற்றபின், அறுவை அரங்கில் வைத்து, தகுந்த வலி மரப்பு ஊசி அல்லது மயக்க மருந்து கொடுத்து, நோயுற்ற, பாதிப்புள்ள, பார்வை கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் கண்ணை அகற்ற வேண்டும்.

அறுவை சிகிட்சை செய்து நோயுற்ற கண்ணை அகற்றிய பின், பார்வை வராது என்று எனக்கு விளக்கிச் சொல்லவில்லை என்றோ, கண்ணை எடுப்பது பற்றி எனக்குத் தெரியாது என்றோ, நோயாளியோ அவரது உறவினரோ நீதிமன்றம் சென்று வழக்காட வாய்ப்புண்டு.

ஒரு கண்ணை உயிரோடிருக்கும்போது அகற்ற வேண்டிய (Indications) முக்கிய காரணங்கள்:

1.ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு கண்ணிலோ, இரண்டு கண்ணிலுமோ வரக்கூடிய Retinoblastoma என்ற புற்றுநோய்க் கட்டியின் முதல் நிலை, இரண்டாம் நிலை.

2.பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய Malignant Melanoma என்ற புற்றுநோய்க் கட்டியின் முதல் நிலை, இரண்டாம் நிலை

3.குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வைட்டமின் A சத்துக் குறைவினால் உண்டாகும் Keratomalacia வின் பாதிப்பினால் உண்டாகும் Anterior staphyloma என்ற பார்வையற்ற கண்ணின் துருத்திய நிலை

4.பெரியவர்களுக்கு ஏற்படும் நீண்ட நாள் பட்ட கண் நீர் அழுத்த நோய் (Glaucoma) மருத்துவத்தினாலும், பல்வேறு அறுவை சிகிட்சை முறைகளாலும் பார்வை கிடைக்க எந்தவித வாய்ப்பும் இல்லாமலும், பொறுக்க முடியாத கட்டுப்படாத தீராத வலி இருந்தாலும் (Painful Blind eye due to Absolute glaucoma not responding by any medical and surgical means, as a last resort) கடைசியாக.

5.கண்ணில் ஏற்படும் கடுமையான காயத்தினால் கண்ணின் sclera, cornea என்ற பகுதி மிக மோசமாகக் கிழிந்து, தைக்க முடியாமலும், கண்ணின் உள் உறுப்புகளான lens, vitreous வெளியே வந்து கண்ணின் அமைப்பு சுருங்கிப் போய், தையல் போட்டாலும் பார்வை வராமலும், அடுத்த கண்ணுக்கு பார்வை பாதிப்பு (Sympathetic Ophthalmia) வரக்கூடும் என்பதாலும் காயம் ஏற்பட்ட கண்ணை எடுக்கலாம்.

நோயுற்ற கண்ணை அகற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் சரியான முறையில் பரிசோதித்து, தகுந்த காரணங்களை எழுதி, மருத்துவர் கையெழுத்திட வேண்டும். என்ன நோய், எந்தக் கண், அறுவை சிகிட்சையின் பெயர், மருத்துவரின் பெயர் தெளிவாக எழுதி (Capital letters) கையெழுத்திட வேண்டும். இவருக்கு Senior மருத்துவர் இரண்டாவது அபிப்பிராயமாக (Second opinion) உடன் ஆமோதித்து கையெழுத்திட வேண்டும்.

நோயாளிடமும், நெருங்கிய உறவினரிடமும் கையெழுத்துப் பெறவேண்டும்.

Thank You : வ.க.கன்னியப்ப


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval