ப்ளீஸ் பிள்ளைகளை கொல்லாதீர்
காலம் காலமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் பொழுதெல்லாம் அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களை சீராட்டியும் பாரட்டியும் புளகாங்கிதம் அடையும் நமது சமூகமும் ஊடகங்களும், குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மற்றும் தேர்வு பெற்றிராத மாணக்கர்களை பார்க்கும் பார்வை இருக்கிறதே அது ஓராயிரம் முறை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டியது. அவர்களை மனோதத்துவ ரீதியான ஒரு
தாக்குதலுக்கு உட்படுத்தி சமூகத்தை விட்டு நிரகாரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இங்கே புத்திசாலிகள் என்று கூறிக் கொண்டு முதல் மாணக்கர்களைப் புகழ்ந்து அவர்களைப் பற்றிய செய்தியைப் பேசிப் பேசி மிச்சமுள்ள பிள்ளைகளை மனதளவில் கொன்றே விடுகிறீர்களே இது எந்த விதத்தில் நியாயம் ?
மனப்பாட சக்தி அதிகமாயிருக்கும் மாணக்கர்ளையே நமது கல்விமுறை எப்போதும் முதல் மாணவன் என்று கூறி சிறப்பித்துக் கொண்டிருக்கிறது. சிக்கலான கல்வி முறையும், சிக்குப் பிடித்த மனிதர்களின் மனோநிலையையும் வைத்துக் கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், தேர்வு பெறாத மாணவர்களையும் அங்கீகரிக்காமல் போவது மிகப்பெரிய சமூகக் குற்றம்.
மனப்பாடத் திறன் அதிகமாயிருப்பது சிறப்பு என்றும் மனப்பாடத் திறன் அறவே இல்லாதது சிறப்பு இல்லை என்றும் எவன் சொன்னான்.. ?
ஒவ்வொரு வருடமும் ஆகச்சிறந்த அறிவாளிகளாக அறியப்படும் அதிக மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் அடுத்த, அடுத்த வருடங்களின் என்னவாகிறார்கள்..?
அவர்களின் மனப்பாடத் திறன் வாழ்க்கைக்கு எந்த அளவில் உதவுகிறது என்பதை பற்றியெல்லாம் நம் சமூகம் எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. அவர்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு எடுத்து பாருங்கள் வாழ்க்கைத் தரம் என்பது எப்போதும் பள்ளியிலும் கல்லூரியிலும் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்ற உண்மை நமக்கு
உரைக்கும்.
ஒரு மாணவன் தான் அதிக மதிப்பெண் பெறவில்லை என்பதற்காக குற்ற உணர்ச்சியைக் கொள்கிறான் அல்லது தற்கொலை முயற்சியைச் செய்கிறான் என்று சொன்னால் அதற்கு சரியான புரிதல் இல்லாத சிதிலமடைந்த மனம் கொண்ட நமது சமூகம்தான் காரணம்.
அதிக அளவில் கிராமப்புறங்களைக் கொண்ட தமிழகத்தின் மாணவர்கள் வயலுக்குச் சென்று தன் தாய், தகப்பனுக்கு உதவி செய்து விட்டும், பால் பண்ணையில் பாலை ஊற்றி விட்டும், வெறும் காலோடு சைக்கிள் மிதித்து அரசுப்பள்ளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களின் தேர்ச்சி என்பது எதைச் சார்ந்து இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமையாக
இருக்கிறது.
வாழ்வியலின் அடிப்படைச் சூழல்கள் எப்படியான தாக்கத்தைக் கொடுக்கிறதோ அல்லது எதை முக்கியத்துவப்படுத்துகிறதோ அதைப் பொறுத்தே மனித மனதின் விருப்பங்கள் அமைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் மனோதத்துவ ரீதியாக அறிந்து அவர்களின் ஈடுபாட்டினைக் கேட்டு அதற்கேற்றார் போல கல்வி கற்கும் முறைகள் நமது தேசத்தில் வடிவமைக்கப்பட வேண்டும்.
Thank You : http://eluthu.com/
தகவல் ; N.K.M. புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval