Sunday, June 29, 2014

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். இதில் நிறைய ஸ்டார்ச்சத்தும், நோய் எதிர்பொருட்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம். சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாவரவியல் பெயர் இபோமோயா பட்டடாஸ். 


இந்த கிழங்கு நிஜத்தில் தாவரத்தின் வேர்ப் பகுதியாகும். இது வெப்பமண்டலத்தில் விளையும் தாவர வகை. சிவப்பு, சாம்பல், வெள்ளை, கருஞ்சிவப்பு என பல வண்ணங்களில் விளைகிறது. மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும்.

மிகமிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.

எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும். நொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.

கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.


நன்றி : முகநூல்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval