Sunday, June 22, 2014

மோடி அரசின் கசப்பு மருந்து !!!

bitter-medicineகடுமையான சரிவை சந்தித்து வரும் இந்திய பொருளாதாரத்தை மீட்க கசப்பு மருந்துகள் கட்டாய தேவை என பிரதமர் நரேந்திர மோடி பேசிய ஒரே வாரத்திற்குள், பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்தி மக்களை அதிரவைத்துள்ளது பாஜக அரசு.
இந்த இரயில் கட்டண உயர்வை பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகவே அறிவித்து, விவாதங்களை தவிர்க்கவே பாஜக அரசு இத்தகைய முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அவ்வப்போது அமல்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள், குறுகிய கால இடைவெளியில் உயர்த்தப்பட்ட ரயில் கட்டண உயர்வுகள் போன்ற மக்கள் விரோத திட்டங்கள் மூலம் வதைத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மாற்றாக, மத்தியில் சரியான மாற்று அரசு ஒன்றை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
மக்களின் இந்த எதிர்பார்ப்பை சரியாக அறுவடை செய்துகொள்ள நினைத்த பா.ஜனதா, குஜராத்தை வளர்ச்சிபெற வைத்தவர் என்று ஊதிபெருக்கப்பட்ட மோடி பிம்பத்தை  முன்வைத்து, அவரையே நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்கி வெற்றியும் பெற்றது. மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சுகமாகும் என்ற ரீதியில் பிரசாரத்தை மேற்கொண்டனர் பா.ஜ.கவினர்.
ஆனால் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, நாட்டின் பொருளாதார நிலை கவலையளிப்பதாக உள்ளதாகவும், கடுமையான கசப்பு மருந்து நடவடிக்கைகள் மூலமே இதனை சரிசெய்ய முடியும் என்ற பிரதம் மோடியின் கூற்றால் அதிர்ந்து போயினர் மக்கள். ஆனால் கசப்பு மருந்து நடவடிக்கை இத்தனை சீக்கிரம் வரும் என்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை.
“கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது; இருப்பினும் பிரதமர் மோடியை கலந்தாலோசித்துவிட்டுத்தான் இறுதி முடிவெடுக்கப்படும்”  என்றெல்லாம் ரயில்வே துறை அமைச்சர் சதானந்தா கவுடா கூறியதை பார்த்தபோது, ஜூலையில் தாக்கலாக உள்ள ரயில்வே பட்ஜெட்டில் ஓரளவுக்கு கட்டண உயர்வு இருக்கலாம் என்பதை பொதுமக்கள் யூகித்துக்கொண்டனர். ஆனால் இந்த அளவுக்கு, அதாவது 14.2 சதவீதம் என்ற அளவுக்கு உயரும் என்பதையும், அதுவும் பட்ஜெட்டுக்கு முன்னரே அமலாகும் என்பதையும் அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் ரயில் கட்டணம் ஓரளவு உயர்த்தப்படுவதை கூட மோடி விரும்பவில்லை என்பது போன்ற பில்டப் செய்திகள் வேறு பா.ஜனதா வட்டாரத்தில் இருந்து கசியவிடப்பட்டன.
ஆனால் ஆட்சியைவிட்டு போகும் கடைசி தருணத்தில் மன்மோகன் சிங் அரசு உயர்த்திய எந்த ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறுத்திவைக்க சொன்னார்களோ, அதனையே துளியும் மாற்றாமல் அப்படியே அமல்படுத்தி உள்ளது பா.ஜனதா தலைமையிலான அரசு.
இந்நிலையில் மோடி அரசின் இந்த நடவடிக்கைகளை அடுத்து, ஜூலையில் தாக்கலாகப் போகும் பொது பட்ஜெட்டில் எந்தவிதமான கடுமையான கசப்பு மருந்தை பிரதமர் மோடி கொடுக்க உள்ளார் என்பதை நினைத்து மக்கள் கவலையுடன் உள்ளனர்.
இரயில் கட்டண உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிக்கும், அதனால் அரசுக்கும் கட்சிக்கும் எதிராக விமர்சனங்கள் எழும் என்பதை நன்றாக உணர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதால், பொது பட்ஜெட்டிலும் எரிபொருள் மற்றும் யூரியா போன்றவற்றுக்கான மானியங்களை குறைப்பது, அரசு கஜானாவுக்கு கடுமையான செலவுகளை ஏற்படுத்தும் முந்தைய காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட சில திட்டங்களை மாற்றியமைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால், சர்வதேச சந்தையில் ஏற்படப்போகும் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தை மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் என்பதால், அந்த சுமையையும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் மீதான விலையை உயர்த்தி பொதுமக்கள் மீதுதான் இறக்கிவைக்கப்போகிறது பாஜக அரசு.
எது எப்படியாகினும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தற்போதுதான் பதவியேற்றுள்ளது என்பதால், இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும். ஆட்சி முடியும் தருவாயில் அதாவது நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளில், நிலைமை  சீரடைந்தால், தேர்தலை கருத்தில்கொண்டு மக்களை கவரும் விலைகுறைப்பு, கவர்ச்சி திட்டங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.
பாஜக அரசு பதவியேற்று ஒருமாதம் மடுமே ஆன சூழ்நிலையில் பிரதமர் வழங்கிய கசப்பு மருந்தை போல் இன்னும் ஆட்சி முடியும்வரை கிடைக்கப்போகும் கசப்பு மருந்தை மக்கள் பொறுத்துக் கொள்வார்களா?
நன்றி
New india tv

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval