Tuesday, June 24, 2014

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் புலம்பல்...


விடியற்காலையில் விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசல் என்னும் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அன்றைய நாள்...

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழன்று உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், அதனுடன் கொஞ்சம் முதுகு வலியும்...

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில் சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள் அதிக எரிச்சலைக் கிளப்புகிறது...

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது...

பாசமாக பேசும், பணிச்சுமையினை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?" என்று ...

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்ட தர்க்கங்களில் "புரிந்தது"
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது...

செம்மறி ஆடுகள்
பலிக்காக நேர்ந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேர்ந்து விடப்படுகிறார்கள்.


செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval