Sunday, June 1, 2014

பாசப்போராட்டத்தில் குடும்பமே பலி: கிராமமே சோகத்தில் மூழ்கியது!

no-sucide-2012014நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வலிவலம் செங்குந்தர் தெருவைச் சேர்ந்த நாகராஜன் (55). கம்பி பிட்டர். இவரது மனைவி ராமலெட்சுமி(50). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மூத்த மகன் செந்தில் (30). இளைய மகன் சதீஷ்குமார்(28). மூத்தமகன் சென்னையில் பேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலை செய்கிறார். இளைய மகன் உள்ளூரில் டூ வீலர் மெக்கானிக்.
மேலும் பழைய பைக் வாங்கி, விற்பனை செய்தார். கடந்த 28ம் தேதி சதீஷ்குமார் பைக் விற்றார். அந்த பணத் தில் ரூ. 500ஐ சதீஷ்குமார் செலவு செய்து விட்டார்.  தந்தை நாகராஜன் பைக் விற்ற பணத்தை கேட்டார். சதீஷ்குமார் பணத்தை கொடுத்தார். அதை எண்ணிப்பார்த்த நாகராஜன் ரூ.500 குறைவதை பற்றி கேட்டார். அதை செலவு செய்துவிட்ட தாக சதீஷ்குமார் கூறினார். இதைக்கேட்டு கோபமடைந்த நாகராஜன், மகனை கடுமையாக திட்டியுள்ளார்.
இதனால் மன வேதனையடைந்த சதீஷ்குமார் அன்றிரவு விஷம் குடித்து விட்டு வீட்டில் படுத்துக்கொண் டார். இரவு 2 மணி அளவில் சதீஷ்குமார் திடீரென வாந்தி எடுத்தார். சத்தம்கேட்டு எழுந்த அவரது தாய், மகன் விஷம் குடித்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் படுத்திருந்த கணவரை எழுப்பினார்.அவர் எழுந்திருக்கவில்லை .
அவர் போதையில் படுத்திருப்பதாக நினைத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மகனை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதற்கிடையே மருத்துவமனையில் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். மறுநாள் காலை மகன் இறந்த செய்தியை கூறுவதற்காக உறவினர்கள் நாகராஜை எழுப்பியபோது அவர் இறந்து கிடந்தது தெரிந்தது.
மகனை திட்டிவிட்ட மன வருத்தத்தில் நாகராஜும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது அதன்பிறகுதான் தெரியவந்தது. . தகவலறிந்த போலீசார் உடலை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தகவல் அறிந்து சென்னையில் இருந்து மூத்த மகன் செந்தில் ஊருக்கு திரும்பினார். தந்தை, மகன் இறுதி சடங்கு 29ம்தேதி நடைபெற்றது. ஒரே நாளில் கணவனையும் மகனையும் பறிகொடுத்த ராமலட்சுமியும், செந்திலும் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.
இருவரின் இழப்பையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மூன்றாம் நாள் பால் தெளிக்கும் நிகழ்ச்சி முடிந்து உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். கணவர், மகன் இறந்த துக்கத்தில் இருந்த ராமலெட்சுமி தனது கணவர் இல்லாத நிலையில் வாழ மாட்டேன் என்று புலம்பினார். அவரைப் போல் செந்திலும் துக்கத்தில் இருந்தார். இருவருக்கும் ஆறுதல் சொல்ல ஆளில்லாத நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அன்று இரவு ராமலெட்சுமி, தனது மகன் செந்தில் ஆகிய இருவரும் தாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ வை ஏற்கனவே மூன்றாம் நாள்பூஜை செய்த இடத்தில் வைத்து விட்டு வீட்டின் உத்தரத்தில் புடவையில் தனித்தனியே தூக்கு மாட்டி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காத நிலையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளே எட்டிப் பார்த்தபோது தாயும், மகனும் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிந்தது.
இதுகுறித்து வலிவலம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் இரண்டு உடல்களையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர், ஒருவர் மீது ஒருவர் கொண்ட பாசத்தால் சங்கிலி தொடர்போல் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
நன்றி: தினகரன்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval