Monday, February 1, 2016

மும்பை அருகே, ராட்சத கடல் அலையில் சிக்கினர் கல்லூரி மாணவ-மாணவிகள் 14 பேர் பலி சுற்றுலா வந்த இடத்தில் துயரம்

மும்பை அருகே ராட்சத கடல் அலையில் சிக்கி புனேயை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் 14 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா வந்தனர்.

கல்லூரி சுற்றுலா

இந்த சுற்றுலா குழுவில் 143 மாணவ, மாணவிகள் 3 பஸ்களில் வந்திருந்தனர். மாணவ, மாணவிகளுடன் 11 பேராசிரியர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் கடலில் குளிக்க விரும்பினார்கள். ஆனால் அப்போது கடல் உள்வாங்கி இருந்தது. இதன் காரணமாக மதியம் உணவு சாப்பிட்டு விட்டு மாணவ, மாணவிகள் கடற்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் கடல் நீர் மட்டம் உயர்ந்தது.

இதை பார்த்த மாணவ, மாணவிகள் 20 பேர் குளிப்பதற்காக கடலுக்குள் இறங்கினார்கள். அப்போது கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. இருப்பினும் குளிக்கும் உற்சாகத்தில் ஒவ்வொருவராக கடலுக்குள் சென்றனர்.

ராட்சத அலை சுருட்டியது

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலைகள் கடலில் குளித்து கொண்டிருந்த மாணவ, மாணவிகள் 4 பேரை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.

இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் அவர்களை காப்பாற்றுவதற்காக முயன்றனர்.

14 பேர் பலி

துரதிருஷ்டவசமாக அவர்களும் கடலில் எழுந்த மற்றொரு ராட்சத அலையால் உள்ளே இழுத்து செல்லப்பட்டனர். இதனால் 20 பேரும் கடலில் மூழ்கினார்கள். கரையில் விளையாடி கொண்டிருந்த மாணவ, மாணவிகள் தங்களது நண்பர்கள் கடலில் மூழ்கியதை பார்த்து பதறி அடித்து கொண்டு ஓடி வந்தனர். உதவி கேட்டு சத்தம் போட்டனர். கடற்கரையில் இருந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் குதித்து மாணவ, மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தண்ணீரில் தத்தளித்த 18 பேரை மயங்கிய நிலையில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து போனது தெரியவந்தது. 4 பேர் மயக்க நிலையில் இருந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேடும் பணியில் ஹெலிகாப்டர்

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மேலும் 2 மாணவர்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாணவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இரவு 7 மணி வரையிலும் அவர்கள் மீட்கப்படவில்லை. இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களில் 10 பேர் மாணவிகள். 4 பேர் மாணவர்கள் ஆவர். இறந்தவர்கள் அனைவரும் புனேயில் வசித்து வந்தவர்கள் என்று தெரியவந்தது.

அவர்கள் புனே சிவாஜிநகரை சேர்ந்த ரபியா, சபியா (அக்காள், தங்கைகள்), சாஜித், கோந்தவா குருட்டை சேர்ந்த சுமைய்யா, யூசுப், ஹதிவாடியை சேர்ந்த சீபா, ஹடப்சரை சேர்ந்த சுப்ரியா, சனா, முகமதுவாடியை சேர்ந்த சுவபனாளி, கோண்டுவாவை சேர்ந்த இப்தேக்கர், தான்க்வாடியை சேர்ந்த சம்ரீன், புத்ரூக்கை சேர்ந்த பரீன், முந்துவாவை சேர்ந்த ராஜலட்சுமி, குருட் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோர் ஆவர்.

பெரும் சோகம்

இந்த துயர சம்பவம் பற்றி அறிந்ததும் மாணவ, மாணவிகளின் குடும்பத்தினர் பரிதவிப்புடன் அழுதாவறு முருடுக்கு விரைந்தனர். கடற்கரை மற்றும் மருத்துவமனைகளின் முன் திரண்டு கதறி அழுதபடி இருந்தனர். கடலில் மூழ்கி 14 மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து முருட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
courtesy,dailythanthi

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval