நம்மில் பலர் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்கான முதலீட்டை மார்ச் மாதம் தொடங்கிய பின்புதான் யோசிக்க ஆரம்பிக்கிறார்கள். வருமான வரிச் சலுகை பெறுவதற்காக கடைசி நேரத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது மிகவும் உஷாராக இருப்பது அவசியம்.,!
மாதச் சம்பளம் வாங்குபவர் களிடம் அவர்கள் வேலை பார்க்கும் அலுவலகங்களில் உள்ள காசாளர்கள், ‘ஜனவரி மாத ஆரம்பத்திலே நீங்கள் இவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் வரியை சம்பளத்தில் பிடித்துவிடுவேன்’ என்று எச்சரிப்பார்கள். இந்த எச்சரிக்கையை பலரும் காதில் வாங்கிக்கொள்வதே இல்லை. மார்ச் மாதம் தொடங்கியபின்பு தான், பிராவிடெண்ட் ஃபண்ட், பிள்ளைகளின் பள்ளிக்கூட கட்டணம் போக ஏதாவது வருமான வரியை மிச்சப்படுத்தும் முதலீட்டை பற்றி யோசிக்கிறார்கள். வரி கட்ட வேண்டுமே என்று நினைத்து அவசர அவசரமாக ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுவிடுகிறார்கள்.
இந்தத் தவறை ஒரு உதாரணத்துடன் பார்த்தால் எளிதில் விளங்கும். ரமேஷின் ஆண்டு வருமானம் ரூ.4,30,000. ரமேஷின் அலுவலக காசாளரோ, ‘நீங்கள் ரூ.50,000 முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ. 5,000 வரி (10% வரி வரம்பில் உள்ளவருக்கு) கட்ட வேண்டும்’ என்கிறார்.
இந்த நிலையில், ரூ.50,000 பிரீமியம் கட்டுவது போல ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியை ஏஜென்ட் ஒருவர் ரமேஷூக்கு பரிந்துரை செய்கிறார். இந்த பாலிசி தனக்கு தேவைதானா, எந்த நிலையில் இது தனக்கு பயன் தருவதாக இருக்கும், இதை விட நல்ல பாலிசி திட்டம் ஏதும் உண்டா என்பது போன்ற வகையில் எல்லாம் ரமேஷ் யோசிக்கவே இல்லை. விளைவு, ரூ.5,000 வரி கட்டுவதைவிட அதிகமாகவே நஷ்டம் அடைந்தார் ரமேஷ்.
இன்ஷூரன்ஸ் கவரேஜ் என்பது எல்லோருக்கும் தேவைதான். என்றாலும் இந்த ஆண்டு ரூ.50,000 பிரீமியம் கட்ட முடிகிறது. அடுத்து வரும் ஆண்டுகளிலும் இதே அளவுக்கு பிரீமியத்தைக் கட்ட முடியுமா என்கிற கேள்விக்கு உறுதியான பதில் கிடைத்தால் மட்டுமே இந்த பிரீமியத்தை கட்டி இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். அப்படி இன்ஷூரன்ஸ் எடுப்பவர்கள் கூட, பணம் திரும்ப கிடைக்கும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பதில் முழுக்க முழுக்க, இன்ஷுரன்ஸ் கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்தால் அதிக தொகைக்கு கவரேஜ் கிடைக்கும்.
இந்த ஆண்டு் ரூ.50,000 பிரீமியம் கட்டிவிட்டோம் அல்லது ரூ.5,000-யை மிச்சப்படுத்திவிட்டோம் என்று பலரும் இருந்துவிடுகிறார்கள். அடுத்த ஆண்டு இதே அளவுக்கு பிரீமியம் கட்டச் சொல்லி ஏஜென்ட் கேட்கும்போதுதான், சிக்கல் உருவாகும். அந்த ஆண்டு, பிள்ளைகள் கல்விச் செலவு உயர்வு, பிராவிடெண்ட் ஃபண்ட் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அந்த அளவுக்கு முதலீடு செய்ய முடியாமல் போகக்கூடும். அல்லது அந்த அளவுக்கு முதலீடு செய்ய கைவசம் பணம் இல்லாமல் இருக்கும். அந்த சமயத்தில்தான், ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டோமே என்று பலரும் வருத்தப்படுவார்கள்.
இதெல்லாம் சரி.. அப்படி என்றால் எப்படி இந்த ரூ.50,000 முதலீட்டை மேற்கொள்வது என்றுதானே கேட்கிறீர்கள்?
அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் முதலீடு செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லாத ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (இஎல்எஸ்எஸ்) திட்டங்கள், வரிச் சலுகை அளிக்கும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரம் போன்றவற்றில் ஒருவரது ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப முதலீட்டை மேற்கொள்ளலாம்.
தற்போதைய நிலையில், பங்குச் சந்தை மிகவும் இறங்கி இருப்பதால், வரிச் சேமிப்புக்காக மொத்த முதலீடு செய்ய வேண்டியவர்கள் இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். காரணம், அதிக யூனிட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இஎல்எஸ்எஸ் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களை சிலர் அணுகி, யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் முதலீடு செய்யும்படி பரிந்துரை செய்யலாம். ‘‘இதுவும் இஎல்எஸ்எஸ் ஃபண்ட் மாதிரிதான். இதில் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கிடைப்பதோடு, உங்களின் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்” என்பார்கள்.
யூலிப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கமிஷன் அதிகம் என்பதால், முதலீட்டுக்கு செல்லும் தொகை குறைவாக இருக்கும். அந்த வகையில், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே யூலிப் பாலிசியை எடுக்க வேண்டும். குறுகிய காலத்தில், சந்தை மிகவும் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் யூலிப் பாலிசிகளில் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். மற்றபடி நீண்ட காலத்தில் மட்டுமே அது லாபகரமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சிலர், இப்போது முதலீடு செய்ய பணம் இல்லை என்பார்கள். இது மாதிரியானவர்கள் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டிலோ அல்லது இன்ஷூரன்ஸ் திட்டங்களிலோ முதலீடு செய்திருந்தால், அதை விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு புதிதாக முதலீடு செய்ய சில ஏஜென்ட்டுகள் யோசனை சொல்வார்கள். இது மிகவும் தவறான முடிவாகும். காரணம், தற்போதைய நிலையில் பங்குச் சந்தை மிகவும் இறங்கி இருப்பதால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் மற்றும் யூலிப் பாலிசிகளின் வருமானம் இறங்கியே இருக்கும். எனவே, ஏஜென்ட்டுகள் சொல்கிறார்கள் என்பதற்காக இப்போது ஃபண்ட் யூனிட்களை விற்பதோ, பாலிசியை சரண்டர் செய்வதோ, புத்திசாலித்தனமான காரியமாக இருக்காது. பாலிசியை சரண்டர் செய்து அல்லது யூனிட்களை விற்று புதிய முதலீட்டை மேற்கொள்ளும்போது ஏஜென்ட்டுகளுக்கு கூடுதல் கமிஷன் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இன்னும் சிலர் ஆண்டின் தொடக்கத்திலேயே வரிச் சலுகைக்கான முதலீட்டுக்கு எந்தவித திட்டமிடலும் செய்யாமல், கடைசி நேரத்தில் கடன் வாங்கி பணத்தை சேமிக்க நினைக்கிறார்கள்.
இப்படி வாங்கும் கடன் தனிநபர் கடன் அல்லது தங்க நகையை அடமானம் வைத்து அதில் கிடைக்கும் தொகையாகவோ இருக்கக் கூடும். இதற்கான வட்டி என்பது 12 %- 18% வரை இருக்கும். வரிச் சலுகை கிடைக்கும் சதவிகிதத்தை (10%) கழித்தால், இந்த முதலீட்டின் மூலம் கிடைக்கும் தொகை லாபகரமாக இருக்குமா என்பதை கவனிப்பது அவசியம்.
ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்து, 5 முதல் 6 ஆண்டுகள் கழித்து எடுக்கும் போது, கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். மேலும், பணவீக்க விகிதத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படியும் லாபகரமாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே கடன் வாங்கி முதலீடு செய்யலாம். இல்லை எனில், எந்த வகையிலும் கவலைப்படாமல் வருமான வரியைக் கட்டிவிட்டு நிம்மதியாக இருந்துவிடலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval