Sunday, February 7, 2016

கருணாநிதியே வந்தாலும் கவலையில்லை: வேட்புமனு தாக்கல் செய்த போலீஸ்அதிகாரி பேட்டி!


ரசுப் பணியில் இருந்து கொண்டு தேர்தலில் சீட் கேட்பதும், தேர்தலுக்கு பிரசாரம் செய்வதும் இந்திய அரசியலில் புதியது அல்ல. அந்த வகையில், சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி கமிஷனர் பீர் முகம்மது சென்னை திருவல்லிக்கேனியில் சீட் கேட்டு அ.தி.மு.க.வில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மனுத்தாக்கல் செய்து இரண்டு நாட்கள் ஆன பின்னர்தான் இந்த விவகாரம் காவல்துறை மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று (6-ம் தேதி) மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தொடர்பாக நடந்த ஒரு பயிற்சி முகாமில் உதவி கமிஷனர் பீர் முகம்மது சீருடையுடனும் கலந்து கொண்டார். இந்நிலையில், உதவி கமிஷனர் பீர் முகம்மதுவை திருவல்லிக்கேனியில் அவருடைய நண்பர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தோம்.

எப்படி திடீர் என்று அரசியலில் குதிக்கும் ஆர்வம் ஏற்பட்டது?

எங்கள் குடும்பமே அ.தி.மு.க. குடும்பம். என்னுடைய சகோதரர் கே.எம். சுல்தான் அலாவுதீன் 25 ஆண்டுகளாக மானாமதுரை தொகுதியின் திருப்புவனம் ஒன்றிய செயலாளர். அ.தி.மு.க. தொடங்கிய காலத்தில் இருந்து அதன் தீவிர தொண்டர். என்னுடைய அண்ணி பீமா ஜான் திருப்புவனம் பேரூராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். அவருடைய மகனும் இளைஞர் பாசறையில் பொறுப்பில் இருக்கிறார். எனக்கும் அ.தி.மு.க. மீது மிகுந்த மரியாதையும், பிடிப்பும் உண்டு.

சென்னை, திருவல்லிக்கேனியில் சீட்டு கேட்டு உள்ளீர்களே?

எனக்கு சிவகங்கை மாவட்டம் தான் பூர்வீகம். இருந்தாலும், 25 ஆண்டுகளாக சென்னையில் தான் சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்று காவல் பணியாற்றி இருக்கிறேன். அதிகமாக திருவல்லிக்கேனி காவல் மாவட்டத்தில்தான் என்னுடைய சர்வீஸ் இருந்திருக்கிறது. திருவல்லிக்கேனி போலீஸ் உதவி கமிஷனராக இருந்து இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன். மேலும் இங்கு அனைத்து மதத்தினரும் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

உங்களுடைய இளம் வயது பற்றி சொல்லுங்களேன்?

சிவகங்கையில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பை முடித்தேன். முடித்துமே நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல் துறை பணிக்கு வந்து விட்டேன். மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் என்னுடைய ஆரம்ப கால பணிகள் இருந்தது.

காவல்துறை பணியைத் தவிர, உங்களுக்கு பிடித்ததாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

கண்டிப்பாக விவசாயம்தான். எனக்கு வேறு எந்த விளையாட்டிலும் அந்த அளவுக்கு ஈடுபாடு இல்லை. விளையட்டுகளை ரசிப்பேன் அவ்வளவுதான். அடிப்படையில் நாங்கள் ஒரு விவசாய குடும்பம் என்பதால், இன்றும் ஊருக்கு போனால் அந்த பயிர்களையும், நிலங்களையும் பார்த்து மகிழ்வது மனதுக்கு பிடித்தமானது. இன்னொரு நிறைவான விஷயம், ஆதரவற்ற பிள்ளைகளை கண்டறிந்து அவர்களின் கல்விக்கு முடிந்த அளவு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இதை விளம்பரத்துக்காக சொல்லவில்லை. என்னைப்போன்று பொறுப்பான பணியில் இருப்பவர்கள் முடிந்தால் இதுபோன்று ஆதரவற்றை பிள்ளைகளை அரவணைக்க முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் குறிப்பிடுகிறேன். அண்மையில், சென்னையை புரட்டிய மழை வெள்ளத்தின்போது இதுபோன்ற என்னுடைய பணியை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டேன். அதில்தான், நிம்மதி அடைவதாக நம்புகிறேன்.

(நம்மிடம் பேசிக் கொண்டு இருக்கும்போதே உதவி கமிஷனர் பீர் முகம்மதுக்கு ஒரு போன் வந்தது. மறுமுனையில் பேசியவர் சென்னதைக் கேட்டு, கலகலவென சிரித்த பீர் முகம்மது, ''யார் வந்தாலும் ஒரு கை பார்த்து விட வேண்டியது'' என்றார்.)

இதைக்கேட்ட நாம், என்ன சார் ஏதேனும் மிரட்டலா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்தத் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட போகிறாராம் என்று சொல்கிறார்கள். யார் வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன்.

நீங்கள் அரசு பணியில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்வதை மேலதிகாரிகள் எப்படி பார்க்கிறார்கள்?

இதுவரை யாரும் இதுகுறித்து என்னிடம் விளக்கம் கேட்கவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்

ந.பா.சேதுராமன்
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval