Friday, February 12, 2016

இஸ்லாமிய வாலிபர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்கள் கோவில் பூஜை நிறுத்தம்.

திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அருகே பத்தெனடா என்ற இடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அறங்காவலர்கள் நிர்வாகக் குழுவில் எம்.வி. சபீர் என்ற 23 வயது முஸ்லிம் இளைஞரும் இருந்தார். மத வேறுபாடு இல்லாமல் கோவில் விழாவை இணைந்து நடத்துவதை இந்த கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.
நிர்வாகக் குழுவில் இருந்த சபீர் பத்தனடா சிவன் கோவில் விழாக்களை முன்னின்று நடத்தி வந்துள்ளார். சபீருக்கு தயாரும் இரு சகோதரிகளும் உள்ளனர். தந்தை குடும்பத்தை கைவிட்டு விட்டார். ஏழ்மை காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் கை விட்டு கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பற்றி வந்துள்ளார். சகோதரிகளையும் படிக்க வைத்துள்ளார். வரும் 9ஆம் தேதி முதல் இந்த கோவிலில் 10 நாட்கள் திருவிழா தொடங்கவிருந்தது.
கோவில் விழாவின் போது, யானை வாலை பிடித்துக் கொண்டு பக்தர்கள் ஓடும் நிகழ்ச்சி இங்கு நடத்தப்படுவது வழக்கமானது. இது தொடர்பாக கடந்த ஆண்டின் போது ஏற்பட்ட தகராறில் முன்பகை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 பேர் கொண்ட கும்பல் இதன் காரணமாக நடுத்தெருவில் வைத்து சபீரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகிய காட்சி கேரளா முழுவதும் இணையங்களில் வைரல் ஆகியுள்ளது.
சபீர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிராமத்தில் பதற்றம் நிலவியது. சபீரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சபீர் கொலை செய்யப்பட்டதையடுத்து, இந்த ஆண்டு திருவிழாவின் அன்னதான நிகழ்ச்சியை கிராம மக்கள் நிறுத்தியுள்ளனர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமா கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் கோவிலில் எந்தவிதமான பூஜையும் நடத்தப்படவில்லை. கோவிலில் மணிகளும் ஓலிக்கப்படவில்லை. தினமும் 5 வேளை பூஜை நடைபெறும் இந்த கோவில் திறந்து மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கோவில் நிர்வாகக்குழுவை சேர்ந்த உன்னி இது குறித்து கூறுகையில்..
” மதங்களை தாண்டிய நட்பு இது. இந்த முறை கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சபீர் தீவிரமாக செய்து வந்தார். நான் கூட சொந்த வேலை காரணமாக அன்னதானம் செய்வதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆனால் சபீர் கடந்த ஒரு வார காலமாக கிராம மக்களை சந்தித்து அரிசி, தேங்காய் உள்ளிட்டவற்றை தீவிரமாக சேகரித்துக் கொண்டிருந்தார். எங்கள் கோவில் நிர்வாகத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். இந்த கோவிலில் நிர்வாகத்தில் இருப்பதற்காக அவர் சார்ந்த ஜமாத் நிர்வாகத்தினர் கூட எந்த எதிர்ப்பும் தெரிவித்தது இல்லை ” என்றார்.
Mohd M Abdahir

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval