ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி பொதுமக்கள் செலுத்தாமல் இருந்த ரூ.2,855 கோடி குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பதவி ஏற்றார். அவரது அரசு பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, டெல்லி மக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் டெலிபோனில் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மக்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, ”எங்கள் ஆட்சியில், வரி செலுத்துவோரின் பணம் ஒரு பைசாவைக் கூட வீணாக்கவில்லை. குடிநீர் கட்டணத்தை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான கட்டணங்கள், குடிநீர் மீட்டர்படி கணக்கெடுக்காமல், சராசரியாக தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அந்த கட்டணங்களை சரிசெய்வது கடினம். இதை கருத்தில் கொண்டு, கடந்த நவம்பர் 30-ம் தேதி வரை, செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். சொத்து வரி நிர்ணய பகுதிகளுக்கு ஏற்றவாறு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
அதாவது, ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு சொத்து வரி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 25 சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படும். ‘சி’ பிரிவு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 50 சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படும். ‘டி’ பிரிவு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 75 சதவீத கட்டண விலக்கு அளிக்கப்படும். ‘இ’, ‘எப்’, ‘ஜி’, ‘எச்’ பிரிவு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக குடிநீர் கட்டண விலக்கு அளிக்கப்படும்.
தாமதமாக கட்டணம் செலுத்துவதற்கான அபராத கட்டணம், எல்லோருக்குமே ரத்து செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ரூ.2,855 கோடிக்கான குடிநீர் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. தாமதத்துக்கான அபராதம் மூலம் கிடைக்கக்கூடிய ரூ.923 கோடியும் ரத்து செய்யப்படுகிறது. இந்த சலுகை அனைத்தும், டெல்லி குடிநீர் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட குடிநீர் மீட்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுவரை பதிவு செய்யாதவர்கள், இனிமேல் பதிவு செய்து கொண்டு இச்சலுகையை பெறலாம்” என்றார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval