Wednesday, February 3, 2016

பதினைந்து ரூபாயில் பசியாறலாம்…ரிப்பன் மாளிகையில் ஒரு மூலிகை அட்சய பாத்திரம்!

mooligai canteen 600 2'
குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது இருந்தால்தான், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓரளவுக்கு தரமான உணவை வாங்கி உண்ண முடியும். ஆனால், பதினைந்து ரூபாயில் பசியை ஆற்றி, தரத்தோடு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது சென்னை மாநகராட்சி வளாகத்தில் இயங்கிவரும் மூலிகை உணவகம்.
“உணவே மருந்து மருந்தே உணவு” என்ற வாசகத்துடன் வரவேற்கும் இந்த மூலிகை உணவகத்துக்கு வெளியே தேநீர் கடை… அருகில் மூலிகைப் பொடி விற்பனை பிரிவு என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உணவகம். நுழையும் முன்னே மூலிகைகளின் வாசம் மூக்கைத் துளைக்கிறது.
காலையில் கறிவேப்பிலை இட்லி, ஆவாரம் பூ இட்லி, துளசி இட்லி, தினை அரிசி இட்லி, சாமை அரிசி இட்லி என்று இட்லி வகைகள் கிடைக்கின்றன. ஒரு இட்லியின் விலை 5 ரூபாய். அடுத்ததாக தோசை பிரிவில் முடக்கத்தான் தோசை, தூதுவளை தோசை, கம்பு தோசை, கேழ்வரகு தோசை, கறிவேப்பிலை தோசை, பொன்னாங்கண்ணி தோசை, கரிசலாங்கண்ணி தோசை, புதினா தோசை போன்றவை கிடைக்கின்றன. ஒரு தோசை 10 ரூபாய் மட்டுமே.
என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்தி என்னென்ன உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிற விவரங்களும் உணவுப் பட்டியலில் தவறாமல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உணவகத்தின் மேலாளரிடம் பேசியபோது, “இந்த உணவகத்துல முடக்கத்தான் தோசையும், தூதுவளை தோசையும் ரொம்ப பிரபலம். முடக்கத்தான் மூட்டுவலிக்கு சிறந்த மருந்து என்பதால் மூட்டுவலி உள்ளவங்க நிறைய பேரு இங்க சாப்பிட வர்றாங்க. இதேமாதிரி சளி, இருமலுக்கு தூதுவளை சிறப்பான மருந்து. அதனால நிறைய பேரு தூதுவளை தோசையை விரும்புறாங்க. இதோட ருசியும் நல்லா இருக்கு” என்றார்.
மதிய உணவாக கீரை சாதம், கறிவேப்பிலை சாதம், புதினா சாதம், கொத்தமல்லி சாதம், முடக்கத்தான் சாதம், தூதுவளை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என வரிசை கட்டுகின்றன. இதன் விலையும் 10 ரூபாய் மட்டுமே” என ஆச்சர்யப்படுத்துகிறார் மேலாளர்.
மதிய சாப்பாட்டில் இதுமட்டும்தானா? என ஊழியர்களிடம் கேட்டோம். “புழுங்கல் அரிசி சாதம், ஆவாரம் பூ சாம்பார், முடக்கத்தான் சாம்பார், கொள்ளு ரசம், மணத்தக்காளி ரசம், காரக் குழம்பு, கீரைக் கூட்டு, மோர், புதினா மோர், மூலிகை மோர் என அனைத்தும் சேர்ந்த மதிய அளவு சாப்பாட்டின் விலை 15 ரூபாய்” என்றனர்.
மூலிகை தேநீர் பிரிவில் ஆவாரம் பூ தேநீர், நிலவேம்பு கஷாயம், கொள்ளு ரசம், தூதுவளை சூப், கொள்ளுப் பயறு, மூலிகை தேநீர், மூலிகை சூப், மூலிகை ஜூஸ், எள்ளு கொழுக்கட்டை, பணியாரம், பனங்கருப்பட்டி குழிப்பணியாரம் என்று இருந்தது. அடை வகைகளில் முருங்கைக் கீரை அடை, முசுமுசுக்கை அடை, நவதானிய அடை ஆகியவையும் கடையில் மணம் பரப்புகின்றன. ஒவ்வொன்றின் விலை… 5 ரூபாய் மட்டுமே. மூலிகைப்பொடி விற்பனை பிரிவில் அனைத்து மூலிகைப்பொடி வகைகளின் பெயர்களையும் எழுதி அதன் மருத்துவக் குணங்களையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
உணவக பொறுப்பாளர் சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். “மூலிகையின் மகத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மேயர் சைதை துரைசாமியின் ஒப்புதலோடு, இதை நடத்தி வருகிறேன். வாரத்தில் ஐந்து நாட்களும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உணவகம் இயங்கும். ஊழியர்களிடம் அந்தந்த மூலிகையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லி விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தி இருக்கிறேன். இந்த கடையை வைத்தபின் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும்பாலும் யாரும் வெளியே சென்று சாப்பிடுவதில்லை. அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றி.
ஆரம்பித்த நாளிலிருந்தே நல்ல கூட்டம். தாமதமானாலும் வரிசையில் நின்று பொதுமக்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். டெல்லியில் நாடாளுமன்ற கேண்டீனில் கூட உணவு விலையை உயர்த்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த உணவகத்தை ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒரே விலை 15 ரூபாய் மட்டும் வைத்து நடத்திக்கொண்டு வருகிறோம் ” என்றார் பெருமையோடு.
மேலும், “ஆரோக்கியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்கள் நலன் சார்ந்தே மூலிகை உணவகத்தை நடத்தி வருவதால் லாபம் பார்க்க முடியாது, ஆனால் நஷ்டம் இல்லாமல் நடத்தி வருகிறோம்” என்றார்.
ரோட்டோர கடைகளில் ஒரு தேநீரும் வடையும் சாப்பிட்டாலே குறைந்தது 15 ரூபாய் ஆகிவிடும். சென்னையில் மூலிகை உணவு இப்படி மிகமிகக் குறைந்த விலையில் வழங்கப்படுவது… ஆச்சர்யமான விஷயம்தானே!
“மக்களிடையே மூலிகைகளின் பயன்பாடும், அதை சார்ந்த விழிப்பு உணர்வும் ஏற்பட்டுள்ள இந்நாளில் தமிழகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகங்களும், மூலிகை உணவகங்களாக மாற்றப்பட்டால் மக்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு மூலிகைகளை பயிர் செய்யும் விவசாயிகளும் இதன் மூலம் பயனடைவர். அரசுக்கு பாராட்டைப் பெற்றுத்தரும் செயலாக அது இருக்கும்” என்கின்றனர் மூலிகை ஆர்வலர்கள்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval