Friday, February 5, 2016

தேமுதிக – 50, பாஜக – 35, திமுக – 135+... அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை


TN assembly polls 2016: Possible for a new mega allianceதமிழ் நாட்டு அரசியிலில் புதிய திருப்பம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக வுடன் தேமுதிக, பாஜக இணைந்த புதிய அரசியல் அணிக்கான பேச்சு வார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டி விட்டதாக திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2 ம் தேதி கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பாஜக கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மோடி தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணிகள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இரண்டு திராவிட கட்சிகள் பற்றியும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் மோடி பேசத் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு பாஜக தலைவர் சுப்பிர்மணியன் சாமி ஒரு ட்வீட் போட்டார். அதில் 'வரும் தேர்தலில் கருணாநிதி முதலமைச்சர் வேட்பாளராக இருக்க மாட்டார். ஸ்டாலின்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார். இதனால் திமுக, பாஜக மற்றும் தேமுதிக இணைந்த கூட்டணி உருவாக வேண்டும்' என்று கூறியிருந்தார். இது தமிழக அரசியிலில் ஒரு புதிய வலுவான யூகமாக தற்போது கிளம்பியிருக்கிறது. தேமுதிக வுடன் கூட்டணி சேர திமுக பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக வுடன் பேசத் துவங்கிவிட்டாலும், கடுமையாக பேரம் செய்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஒரு கட்டத்தில் எத்தனை இடங்கள், இன்ன பிற வசதிகள் என்று பேரத்தை நடத்திக் கொண்டிருந்த விஜயகாந்த் பின்னர் வைக்கத் துவங்கிய முக்கியமான கோரிக்கை பாஜக வையும் திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. இதனை தற்போது முக்கியமான கோரிக்கையாகவே கேப்டன் வைத்துக் கொண்டிருப்பதுதான் திமுக - தேமுதிக கூட்டணி இறுதிக் கட்டத்தை எட்டாமல் தேங்கி நின்று கொண்டிருப்பதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. மாநிலத்தில் மட்டுமல்லாமல் மத்தியிலும் ஆட்சியை சுவைக்க தேமுதிக முடிவு செய்து விட்டதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. இறுதி நிலவரப்படி தேமுதிக வுக்கு 50 இடங்கள், பாஜக வுக்கு 35 இடங்கள், திமுக 135 க்கும் குறையாத இடங்களில் போட்டியிடுவதென்று பேசப்பட்டு வருவதாகக் கூறப் படுகின்றது. மீதமுள்ள 14 இடங்கள் சில உதிரிக்கட்சிகளை இணைப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள், ஒவ்வோர் கட்சிக்கும் கூடுதலாகவோ அல்லது குறைவானதாகவோ இருக்கலாமென்றும் தெரிய வந்திருக்கிறது. பாஜக வைப் பொறுத்த வரையில் தமிழ் நாட்டில் திமுக அல்லது அஇஅதிமுக என்று இரண்டு பெரிய கட்சிகளுடன் சேர்ந்தால் தவிர ஓரிரு எம்எல்ஏ சீட்டுக்களை பெறுவது கூட மிகக் கடினமென்பதை நன்றாகவே உணர்ந்தேயிருக்கிறது. 2014 தேசீய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமைந்தாலும் கூட பெரிய அளவில் வெற்றிகளைப் பெற முடியாதென்பதை அவர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள். இதனால்தான் தேமுதிக மட்டும் போதாது, திமுக வும் வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனை தேமுதிக மூலம் பாஜக சாதித்துக் கொண்டிருப்பதாகவே திமுக வில் தேமுதிக வுடன் பேசிக் கொண்டிருக்கும் குழுவில் இடம் பெற்றிருக்கும் ஒருவர் தெரிவிக்கின்றார். திமுக வைப் பொறுத்த வரையில் பாஜக வுடன் சேருவதனால் ஏற்படும் சிறுபான்மையினரின் வாக்குகள் இழப்பை பாஜக வுக்கு உள்ள மூன்றிலிருந்து நான்கு சதவிகித வாக்குகள் மற்றும் தேமுதிக வாக்குகளை வைத்து சரி கட்டி விடலாமென்று எண்ணுவதாகக் கூறப்படுகின்றது. மேலும் மத்தியில் பதவி சுகத்தையும், அதிகார போதையையும் ஒன்பதாண்டு காலம் தொடர்ச்சியாக அனுபவித்த திமுக தற்போது அந்த அதிகாரமில்லாமல் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் திண்டாடுவது நன்றாகவே தெரிகிறது என்கிறார்கள். இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது, திமுக தலைவரின் மகள் மற்றும் பேரன்கள் மீதான ஊழல் வழக்குகள். கனிமொழி மீதான 2ஜி ஊழல் வழக்கு விசாரணையில் இறுதிக்கட்ட வாதம் துவங்கி விட்டது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறனுக்கு எதிரான 750 கோடி ரூபாய் ஏர் செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் விசாரணை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆகவே இதிலிருந்தெல்லாம் தப்பிக்க பாஜக வின் ஆதரவை திமுக நாடும், கூட்டணியில் காவிக் கட்சியையும் சேர்த்துக் கொள்ளும் என்பதுதான் திமுக அரசியலை உற்று நோக்குபவர்களின் கருத்தாகும். நேற்று இந்தக் கட்டுரையாளரிடம் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரின் மகன் சொன்ன ஒரு கருத்து சுவாரஸ்யமானது. அவர் சொன்னார், ‘நானும் வேறு சில காங்கிரஸ் நண்பர்களும் மூன்று வாரங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த போது காங்கிரஸ் தணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்தோம். அப்போது ராகுலின் உதவியாளர் அஇஅதிமுக வுடன் நமக்கு கூட்டணிக்கான வாய்ப்பு ஏதாவது இருக்கிறதா என்று மீண்டும், மீண்டும் கேட்டார். நாங்கள் அதற்கு அறவே சாத்தியம் இல்லையென்று உறுதியாகத் தெரிவித்தோம். திமுக வை ராகுல் அவ்வளவாக விரும்புவதில்லை என்பதனால் அவர் இவ்வாறு கேட்கிறார் என்றே நினைத்தோம். ஆனால் பின்னர்தான் தெரிந்தது மூன்று வாரங்களுக்கு முன்பே பாஜக பக்கம் திமுக கொஞ்சங் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருப்பதை காங்கிரஸ் மோப்பம் பிடித்து விட்டதென்பது' என்று கூறினார். இந்தத் தகவல்கள் எல்லாமே, அதாவது, திமுக பாஜக கூட்டணிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்பதெல்லாமே வலுவான, ஆனால் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாத ஹேஷ்யங்கள்தான். இது தேர்தல் காலமென்பதால் எதனையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. முறையான அறிவிப்பு வரும் வரையில் இவையெல்லாமே தர்க்க ரீதியாக பேசப்படும் விஷயங்கள்தான். ஆனால் திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளிடமிருந்தும் கிடைத்துக் கொண்டுள்ள சமிக்ஞைகள் இந்தக் கூட்டணிக்கான சாத்தியக் கூற்றை அதிகப் படுத்திக் கொண்டுதானிருக்கின்றன. இன்னொரு பக்கம் இப்படியொரு கூட்டணி உருவாவதை ஜெயலலிதா அனுமதிப்பாரா என்பது. இந்தக் கூட்டணி நிச்சயம் ஒரு வலுவான கூட்டணியாகவே அமையும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லையென்று பேசி வந்த ஜெயலலிதாவுக்கு இந்தக் கூட்டணி உருவானால் அது நிச்சயம் கடினமாக சூழ்நிலையையே உண்டாக்கும். கடந்த ஆகஸ்ட் 7 ம் தேதி மோடி ஜெயலலிதா வை வீடு தேடிப் போய் விருந்துண்டார். ஆனாலும் ஜெயலலிதா தேர்தல் கூட்டணிக்குத் தயாராகவில்லை. அதனால் ஜெயலலிதாவை வழிக்குக் கொண்டு வர வழக்கம் போலவே சுப்பிரமணியன் சுவாமியை பாஜக உசுப்பி விட்டிருப்பதாகவும் ஒரு பார்வை இருக்கின்றது. ஆனால் இதற்கான வாயப்புகள் மிகவும் குறைவென்றே தெரிகிறது. ஒரு உபரி தகவல். வியாழக் கிழமை தந்தி டிவி யில் பாஜக - திமுக கூட்டணி பற்றிய விவாதத்தில் பேசிய பாஜக வின் ஆசிர்வாதம் ஆச்சாரி - இவர்தான் 2ஜி ஊழலை வெளிக் கொணர்ந்தவர், இப்போதும் சிபிஐ சாட்சியாக வழக்கில் இருந்து கொண்டிருப்பவர் - கருணாநிதியை தலைவர் கலைஞர் என்றும், முக ஸ்டாலினை தளபதி ஸ்டாலின் என்றும் வாய்க்கு வாய் பேசினார். ஆசிர்வாதம் ஆச்சாரி சுப்பிரமணியன் சுவாமியின் சிஷ்யன் ... ஆச்சாரி இன்னொன்னும் சொன்னார், 'இன்னும் பத்து நாட்களில் நிலைமை தெளிவாகி விடும்' என்று. வரும் 17 ம் தேதி சென்னையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மகன் திருமணம் நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. கருணாநிதியம் கலந்து கொள்ளுவதாக வாக்களித்துவிட்டார். இது அனேகமாக கூட்டணி அச்சாரத்திற்கான துவக்கப் புள்ளியாகவும் இருக்கலாமென்று கருதப் படுகின்றது. ஒரு காலத்தில் பாஜக வை பண்டாரம், பரதேசிகள் கட்சியென்று பேசி வந்த திமுக தலைவர் அதே பாஜக வுடன் சேர்ந்து நான்காண்டுகள் மத்தியில் பதவிகளைப் பெற்றார். பின்னர் 'மதச்சார்பின்மையைக் காக்க' காங்கிரசுடன் கைகோர்த்தார். தற்போது மகளைக் காப்பாற்றவும், பேரன்களைப் பாதுகாக்கவும் மீண்டும் பண்டாரம், பரதேசிகளின் கரங்களைப் பற்ற தமிழினத் தலைவர் தீர்மானித்து விட்டதாகவே தெரிகிறது. சும்மாவா சொன்னார்கள் அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லையென்று!
courtesy; oneindia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval