தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இதனால், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், சாந்தி, அருண் பாண்டியன், சுந்தரராஜன்,மாஃபா பாண்டியன், தமிழழகன், சுரேஷ், அருண்சுப்ரமணியன் ஆகியோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயலலிதா சந்தித்து தங்களது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்காக மனு அளித்தனர். அப்போது முதலே இவர்கள் அதிமுகவின் அறிவிக்கப்படாத ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவே கருதப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் 8 பேரும் இன்று (21-ம் தேதி) தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், பா.ம.க.வைச் சேர்ந்த அணைக்கட்டி கலையரசு மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை ராமசாமி ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தபாலிடம் வழங்கினர்.
இதையடுத்து, தே.மு.தி.க.வைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதன் மூலம் தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் அந்த பதவியை இழந்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற பேரவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ”தே.மு.தி.க. கட்சியைச் சார்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதால், சட்டமன்றப் பேரவை விதி 2(ஓ)-ன்படி, எதிர்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தையும் சலுகைகளையும் இழக்கிறார் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போது சட்டமன்றத்தில் 24 குறைவெண் கொண்ட எந்த சட்டமன்றக் கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர் என்று வேறு எந்த சட்டமன்றக் கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என்றும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval