Monday, February 15, 2016

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்!

Daily_News_5920177698136
புயல் வேகத்தில் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் சேவை பல நாடுகளிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது. நம் இந்தியாவில் மும்பை-அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் ஓடப் போகிறது!
ஆனால் நாம் இன்னும் இதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதற்காக சமீபத்தில் ஜப்பானிய அரசுடன் இந்திய ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில் புல்லட் ரயில் பற்றி முழு முதல் தகவல்கள்…
* புல்லட் ரயிலுக்கு ஜப்பானிய மொழியில் ‘Dangan Ressha’ எனப் பெயர். இதன் ெமாழிமாற்றம்தான் புல்லட் ரயில்.
* 4 ஜப்பானிய ரயில் கம்பெனிகள் இணைந்து உருவாக்கிய சிக்கென்ஷென் அதிவேக ரயில்பாதைக்கு புல்லட் ரயில் பாதை எனப் பெயரிட்டன.
துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவை போல், படுவேகமாகச் சென்று எதிர்முனையை அடைகிறது என்பதால் இந்தப் பெயர்!
* ஜப்பானில் 1964ம் ஆண்டில் டெகாய்டோ – சின்கன்சென் இடையே (515.4 கி.மீ) ஆரம்பித்து, இப்போது புல்லட் ரயில்களுக்கான பாதை 2387.7 கி.மீ அளவுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதைகளில் தற்போதைக்கு செல்லும் ரயிலின் வேகம், மணிக்கு 240-320 கி.மீ.
*ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களில் மட்டுமே புல்லட் ரயில்கள் ஓடுகின்றன. ஆசியாவைப் பொறுத்தவரை ஜப்பான் மற்றும் சீனாவில் மட்டுமே இந்த ரயில்கள் ஓடுகின்றன.
*வேகத்தைப் பொறுத்தவரை உலகின் அதிவேக புல்லட் ரயில் என்ற சாதனையை ஷாங்காய் மக்லேவ் வைத்துள்ளது; இரண்டாவது அதிவேக ரயில் என்ற பெருமை ஹார்மனி CRH 380A என்ற புல்லட் ரயிலுக்கு. இது தவிர HEMU-400X; Zefiro 380 மற்றும் டால்கோ அவ்ரில் ஆகியவையும் இவற்றுக்கு நெருங்கிய போட்டியாளர்கள். ஷாங்காய் மக்லேவ் புல்லட் ரயில் மணிக்கு 430 கி.மீட்டர் வேகத்தில் சென்று அசத்தியுள்ளது. இதன் சராசரி வேகம் மணிக்கு 251 கிலோ மீட்டர்!
* புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் முக்கியமான வார்த்தை மக்லேவ். பாலத்தைத் தொடாமல், காந்த ஈர்ப்பு மூலம் பாலத்திற்கு மேலே தண்டவாளத்தைத் தொடாமல் சமமாக பயணிக்கும் முறைதான் மக்லேவ் (magnetic levitation). இந்த முறையில் உராய்வே இல்லாமல் பயணிக்க காந்தங்கள் உதவும். மக்லேவ் ரயில்கள்… சாதாரண சக்கர ரயில்களை விட மென்மையாகவும் அதே சமயம் வேகமாகவும் பயணிக்கும்!
*மக்லேவ் ரயில் தன் வணிக ரீதியிலான சர்வீஸை சீனாவில் 2004ம் ஆண்டு துவக்கியது. ஆனால், அப்போது அது 30.5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சென்றது. லான்கியாஸ் ரோடு ஸ்டேஷனில் இருந்து ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையம் வரையிலான அந்த தூரத்தை இந்த ரயில் 8 நிமிடங்களில் கடந்தது. இதுதான் முதன்முதலாக வணிக ரீதியில் இயக்கப்பட்ட அதிவேக மேக்னடிக் பறக்கும் ரயில்!
* ஹார் ம னி CRH 380A என்ற புல்லட் ரயில், தற்போது மணிக்கு 380 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து, வேகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது அக்டோபர் 2010ல் இயக்கப்பட்டது! இது பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களை இணைக்கிறது. மேலும் வூகான் முதல் குவாங்ஷு வரையான பாதையில் தினசரி சர்வீஸாகவும் இயங்கி வருகிறது.
*CRH 380A மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம், மணிக்கு 380 கிலோமீட்டர்.
*ஆல்ஸ்டம் நிறுவனம், 2012 ஏப்ரலில் AGV Italo என்ற எலெக்ட்ரிக் ரயிலை ஐரோப்பாவில் இயக்கியது. இது மணிக்கு 360 கி.மீட்டர் வேகத்தில் சென்றது. 2007ல் இந்த ரயில் மணிக்கு 574.8 கி.மீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்தது. ஐரோப்பாவின் மாடர்ன் ரயில் எனக் கருதப்படும் இது, தற்போது நப்போலி-ரோமா-பிரென்ஸ்-பொலோனா மற்றும் மிலானோ… வழியாக ஓடுகிறது.இனி மீண்டும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலுக்கு வருவோம்…
* இதன் மொத்த தூரம் 505 கிலோ மீட்டர். இதனை புல்லட் ரயில் இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கான மொத்த தொகை 97,636 கோடி ரூபாய். இதில் ஜப்பானிய அரசு 79,000 கோடி ரூபாய் (மொத்த செலவில் 80  சதவீதம்) தர முன்வந்துள்ளது. 50 வருட கடன்… வட்டி 0.1 சதவீதம்.
* மணிக்கு  300-350 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் பயணம் செய்யும்.  உயர்த்தப்பட்ட மேடையில், தற்போதைய ரயில் பாதை வழியிலேயே பெரும்பாலும் இது  பயணிக்கும்.
* தற்போது இந்தப் பாதையில் தினம் 70 ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் வகுப்புக்கு வாங்கும் மிக அதிக கட்டணம் 1,855 ரூபாய்.    புல்லட் ரயில் பயணத்தைத் துவக்கினால் அப்போது இருக்கும் என எதிர்பார்க்கும் கட்டணம் 2,500-3,000 ரூபாய். தற்போது விமானத்தில் வாங்கப்படும் மிகக்குறைந்த கட்டணம் 2,200 ரூபாய்.
இதற்கிடையே தைவானில் ஓடும் புல்லட் ரயில்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. காரணம் பயணிகள் குறைவு… வட்டி அதிகம்… கூடுதல் செலவு..! இந்த நிலை இந்தியாவுக்கும் வரலாமே என்ற எச்சரிக்கைக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval