Sunday, February 21, 2016

குளிர்வித்த சாதனை

759ac1951b69e0198723c8927dc35599
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா விஞ்ச நினைக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இவை உறுத்தல். அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு, கிரையோஜெனிக் தொழில்நுட்பம் கைகொடுக்கும். இதில் சாதிக்க இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.ராக்கெட் என்பது செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் வாகனம். எரிபொருட்கள் எரிய ஆக்சிஜன் தேவை. புவியில் ஆக்சிஜன் இயற்கையாகக் கிடைக்கிறது. ஆனால், விண்வெளியில் ஆக்சிஜன் கிடைக்காது. ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தினால், ராக்கெட் அதிக உந்துவிசையை அளித்து, அதிக எடை கொண்ட செயற்கைக்கோளைச் சுமந்து செல்ல முடியும். ஆனால், வாயுக்களைப் பயன்படுத்தும்போது, அதற்குத் தனித்தனி டேங்குகள் தேவைப்படுகிறது. ஹைட்ரஜனையும், ஆக்சிஜனையும் திரவமாகச் சேமித்தால், அதிக இடம் தேவைப்படாது. ஆனால், இவ்வாறு சேமிப்பதில்தான் தொழில்நுட்பச் சிக்கல்.
ஹைட்ரஜனை மைனஸ் 253 டிகிரி செல்சியஸ், ஆக்சிஜனை மைனஸ் 184 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குளிர்வித்தால் திரவமாகிவிடும். இன்ஜினில் இவற்றை வாயுவாக மாற்றுவதன் மூலம் ராக்கெட்டுக்கு அதிக உந்து சக்தி கிடைக்கும். திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் பயன்படுத்துவதே கிரையோஜெனிக் தொழில்நுட்பம்.1903ம் ஆண்டிலேயே இதற்கான விதை தூவப்பட்டுவிட்டது. திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜனைப் பயன்படுத்தி ராக்கெட்டைச் செலுத்த இயலும் என்று ரஷ்ய மேதை சியோல்கோவ்ஸ்கி கூறினார். ஆனால், இது சாத்தியமாவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது.அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் கிரையோஜெனிக் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் திறன் பெற்றவையாகத் திகழ்கின்றன. அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை இவை விண்ணில் செலுத்த முடிகிறது.
இந்திய விஞ்ஞானிகளின் 20 ஆண்டு காலப் போராட்டம் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் வெற்றிபெற உதவியிருக்கிறது. ஆற்றல்மிகு கிரையோஜெனிக் இன்ஜினை இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) வெற்றிகரமாகச் சோதித்துக் காட்டியிருக்கிறது. இது ராக்கெட் இன்ஜின் தயாரிப்பில் புதிய மைல்கல். இதன் மூலம் 8 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும்.கிரையோஜெனிக் என்றால் கடும் குளிர்விப்பு நிலை. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் துணையின்றி, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் சுயம்புவாகச் சாதித்துக் காட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் அசத்தியிருப்பது, மக்கள் மனதைக் குளிர்வித்திருக்கிறது. இருப்பினும், இன்னும் கடக்க வேண்டிய தூரம் ஏராளம். ஆனால், எதுவும் சாதிக்க முடியாததல்ல.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval