Wednesday, February 10, 2016

அனைவருக்கும் கல்வி என்பது இனி வெறும் கனவுதானா…?

Higher Education
நீங்கள் ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள்…? அந்த பயணத்திற்கு தேவையான பயணச்சீட்டு கட்டணம் மட்டும் உங்களிடம் இருக்கிறது. ஆனால், திடீரென்று பேருந்து நடத்துனர், பயணச்சீட்டு கட்டணம் ஏறிவிட்டது என்று அதிக தொகை கேட்கிறார். உங்களிடம் பணம் இல்லை. நீங்கள் பேருந்திலிருந்து இறக்கிவிடப்படுகிறீர்கள். இதை கல்வி சூழலுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் இறக்கிவிடப்பட்ட இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது. அங்கு ‘Give Up LPG Subsidy’ (சமையல் எரிவாயு மானியத்தை விட்டு தாருங்கள்) என்ற பதாகை வைக்கப்பட்டிருக்கிறது. இதனையும் கல்வி சூழலுடன் ஒப்பிட்டு கொள்ளுங்கள்.
என்னது இதற்கும் கல்வி சூழலுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா..? ஆம். நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்போது உங்கள் பையனை அரசு கல்லூரியில் சேர்க்கிறீர்கள், அதற்கான கட்டணத்தை கட்டி விடுகிறீர்கள். திடீரென்று ஒரு நாள் கல்லூரி நிர்வாகம், உங்கள் பையன் படிக்கும் கோர்சுக்கான சந்தை மதிப்பு ஏறிவிட்டது. அதனால் நீங்கள் அதிக கட்டணம் கட்ட வேண்டும் என்கிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்…?
படிப்புக்கும் சந்தை மதிப்புக்கும் என்ன தொடர்பு…? அதுவும் அரசு கல்லூரி இப்படியெல்லாம் செய்யுமா என்று கேட்கிறீர்களா?. ஆம். நிச்சயம் செய்யும். இது எதுவும் மிகையான கற்பனை அல்ல. இது அனைத்தும் விரைவில் நடக்கும் என்கிறார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
ஆம். இனி கல்வி என்பது சேவை என்ற நிலையிலிருந்து முழு வணிகமாக ஆகப்போகிறது, என்கிறார் அவர்.
என்ன இதற்குதான் இவ்வளவு பீடிகையா….? அதுதான் முன்பே மாறிவிட்டதே… அரசு கல்வி நிலையங்களை தவிர, அனைத்து இடங்களிலும் அது முழு வணிகம்தானே…? இதற்கு மேல் அதில் நடக்க என்ன இருக்கிறது.?”
ஆம். எப்போதோ மாறிவிட்டதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க, நடவடிக்கை எடுக்க இன்னும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனி. அப்படி இருக்காது” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

காஸ் மானியமும், கல்வி உதவி தொகையும்!
இது குறித்து அவர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
“ ‘ உலக வர்த்தக அமைப்பு – சேவை துறையில் வர்த்தக உடன்படிக்கை (WTO – GATS) – அமைச்சர் நிலை சந்திப்பு’  என்ற தலைப்பிலான மாநாடு,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கென்யா – நைரோபியில் நடந்தது. அதில்,  உயர் கல்வி துறையை முழுவதும் வணிகமயமாக்க அனுமதிக்கும் பல ஒப்பந்தங்களுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த ஒப்பந்தங்கள், இந்தியாவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இங்கு அரசு பல்கலைகழகங்களுக்கான மானியம் இருக்காது, போராடி பெற்ற இடஒதுக்கீடு இருக்காது, கல்வி உதவி தொகை இருக்காது, எந்த படிப்புக்கு  கிராக்கி (demand) அதிகமாக இருக்கிறதோ, அந்த படிப்புக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், கல்வி என்பது பண்டமாக கருத்தப்படும், அந்த பண்டத்தை வாங்க யாரிடம் பணம் இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும்தான் கல்வி கிடைக்கும்.”
அனைவருக்கும் கல்வி உரிமைக்கான அனைத்திந்திய மன்றம் இதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.
அந்த மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் டெல்லி பல்கலைகழகத்தின் முன்னாள் கல்வி புலத்தலைவர் அனில் சடகோபாலிடம் பேசிய போது, “உங்கள் காஸ் மானியத்தை விட்டு தாருங்கள் என்று அரசு கேட்க துவங்கி இருக்கிறது. இனி கல்வித்துறையிலும் அது அப்படி கேட்கும். அதாவது இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், ‘பெற்ற பிள்ளைகளின் கல்விக்கு அரசை எதிர்பார்க்கலாமா?’ என அரசு விளம்பரப்படுத்தும். அதாவது கல்வி உதவி தொகையை நிறுத்தும். அது போல், கல்விக்கான ஒழுங்கு முறை ஆணையத்தை ஏற்படுத்தி, கல்வி துறையை அதற்கு கீழ் கொண்டு வரும். அவர்கள்தான் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பார்கள். இதனை நீங்கள் பெட்ரோல் விலை நிர்ணயத்துடன் ஒப்பீட்டுக் கொள்ளலாம். எப்படி பெட்ரோல் விலை நிர்ணயத்தில் அரசு தலையிட முடியாதோ, அது போல் கல்வி கட்டணங்கள் குறித்த விஷயங்களிலும் அரசு தலையிட முடியாத நிலை விரைவில் ஏற்படப்போகிறது” என்கிறார்.
மேலும் அவர், “இது நமக்கு மட்டுமான ஒப்பந்தம் இல்லை. WTO-வில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 160 நாடுகளுக்கும்தான். இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகள் தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றன. ஆனால் நம் நாட்டில் இது குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது” என்றார்.
பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுவது இதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
“இப்போது கல்வி நிலையங்களில் ஏதாவது பிரச்னை என்றால் நாம் நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்கிறோம். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் படி, இனி நாம் நீதிமன்றங்களை அணுக முடியாது. கல்வி நிலையங்களில் உள்ள பிரச்னையை தீர்க்க தனி தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்படும். அது சிங்கப்பூரிலோ, ஏதாவது ஐரோப்பிய நாட்டிலோ இருக்கும். எப்படி நம்மால் அங்கு சென்று நமக்கான  நியாயங்களை வென்றெடுக்க முடியும்?”
மாணவர்களுக்கு விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்!
புதிய கல்வி கொள்கைக்கான விவாதங்களை அரசு முன்னெடுக்க துவங்கி உள்ளது. இன்னும் புதிய கல்வி கொள்கை முழு வடிவம் பெறவில்லை என்றாலும், அது முன் வைக்கும் விவாத பொருள்கள், GATS ஒப்பந்தத்தில் உள்ள விஷயங்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. அதாவது, கல்வி உதவி தொகைக்கு பதிலாக, மாணவர்களுக்கு கடன் தருவது போன்ற விஷயங்களை இது முன் வைக்கிறது. மேலும், இதற்காக அமைக்கப்பட்ட கல்வி குழுவில், கல்வியாளர்களின் எண்ணிக்கையைவிட, இந்திய ஆட்சி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் அந்த குழுவில், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகளின் பிரதிநிதித்துவம் இல்லை. அவர்கள் எப்படி ஒரு தரமான, அனைவருக்குமான கல்வி கொள்கையை வடிவமைக்க முடியும்.
ரோஹித் வெமுலா டிசம்பர் 18-ம் தேதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். ‘நீங்கள் இதுபோல் நடந்து கொள்வதற்கு பதில் நீங்கள் அனைத்து தலித் மாணவர்களுக்கும் விஷம் கொடுத்து விடுங்கள்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தால், அந்த தேவை இருக்காது. தலித் மாணவர்கள் மட்டுமல்ல, அனைத்து ஏழை மாணவர்களும் அவர்களே விஷம் குடித்து இறந்து விடுவார்கள்” என்கிறார் பிரின்ஸ்.
ஒரு வலுவான சமூகத்திற்கு, தரமான கல்வி அனைவருக்கும் கிடைப்பது மிக அவசியம். அதற்கு ஆபத்து வருவது போல், எந்த முடிவையும் அரசு எடுக்க கூடாது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval