Wednesday, November 2, 2016

99 ஆண்டுகளுக்கு குத்தகை 3,600 ரூபாய்தான் : பெப்சிக்கு தாமிரபரணியை தாரை வார்க்கும் அரசு!

தென் தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரும் பெப்சி கோலாவாக மாறப்போகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் ஆலை அமைக்கும் பணியை பெப்சி நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில்  கங்கை கொண்டானில் பெப்சி ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பி வருகிறது.  பெப்சி ஆலை அமைப்பது குறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளார். அவர் திரட்டிய தகவல்கள் அதிர்ச்சியை தருகின்றன.

கங்கை கொண்டானில் சிப்காட் வளாகத்தில்,  36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி ஆலை அமையவுள்ள நிலத்தின் அரசு மதிப்பு ரூ. 5.40 கோடி ஆகும். சந்தை மதிப்புப்படி பார்த்தால், 15 கோடிக்கும் மேல். ஆனால் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 36 ரூபாய் மட்டும்தான் பெப்சி நிறுவனம் குத்தகையாக  அரசுக்கு செலுத்தும். அப்படியென்றால்  இவ்வளவு மதிப்புள்ள நிலத்துக்கு 99 ஆண்டுகளுக்கு  வெறும் 3,600 ரூபாய்க்கும் குறைவாகத்தான்,  குத்தகையாக பெப்சி நிறுவனம் அரசுக்கு செலுத்தப் போகிறது. 

அது மட்டுமல்ல, தாமிரபரணி நதியில் இருந்து தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும், தமிழக அரசுடன் பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 37 ரூபாயை அரசுக்கு பெப்சி நிறுவனம் வழங்கும்.  அப்படி தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து அதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகவோ, கோலாவாகவோ மாற்றி  பெப்சி நிறுவனம் எத்தனை ரூபாய்க்கு நுகர்வோர்க்கு விற்கும்  என்று யோசித்து பார்த்தால் தலை சுற்றுகிறது. 

தாமிரபரணியில் இருந்து பல லட்சம் லிட்டர் ஊற்றுநீர் உறியப்பட்டால், நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில்,விளை நிலங்கள் பாதிக்கப்படும் நிலை  ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் கங்கை கொண்டானில் பெப்சி நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராடி வருகின்றன. எனினும் இவர்கள் போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாமல் பெப்சி நிறுவனம் ஆலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 

தமிழத்திலேயே உற்பத்தியாகி  தமிழகத்திலேயே கடலில் இணையும் ஒரே நதி தாமிரபரணிதான். பாபாநாசம் மலையில் உற்பத்தியாகி தூத்தூக்குடி மாவட்டம், புன்னக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது தாமிரபரணி. இந்த இரு மாவட்டங்களின் ஒரே நீராதாரமும் கூட. 
அத்தகைய பெருமை வாய்ந்த ஜீவ நதியும் பெப்சி கோலாவுக்கு தாரை வார்க்கப்படுவதுதான் வேதனை! 
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval