Wednesday, November 30, 2016

சட்டங்களை ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது அரசு எல்லை மீறக்கூடாது; நாங்கள் கண்காணிப்போம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்சரிக்கை

அரசின் எந்த அங்கமும் ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டக்கூடாது. அதை நீதித்துறை கண்காணிக்கும். பாராளுமன்றம் இயற்றும் எந்த சட்டத்தையும் ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறினார்.


அரசியல் சட்ட தினம்

ஆண்டுதோறும் நவம்பர் 26-ந் தேதி, அரசியல் சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பேசியதாவது:-

அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதுதான் இந்த நாளின் சிறப்பு. எனவே, அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதை கொண்டாடுவதாக இருந்தால், இதை சட்ட தினமாக கொண்டாடாமல், அரசியல் சட்ட தினமாகவே கொண்டாட வேண்டும்.

கண்காணிப்போம்

அரசாங்கம் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறை, அரசாங்கம், பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ளது. ஒவ்வொன்றின் அதிகார வரம்புகளையும், லட்சுமணன் கோட்டையும் கூட நிர்ணயித்துள்ளது.

அரசாங்கத்தின் எந்த அங்கமும் எல்லை மீறக்கூடாது. எல்லை மீறாமல் நடக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் கடமை, நீதித்துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்வோம்

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. ஆனால், அந்த சட்டம், அரசியல் சட்டம் வழங்கிய அதிகார வரம்புக்குள் இருக்க வேண்டும். அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகவோ, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவோ இருந்தால், எந்த சட்டத்தையும் ரத்து செய்ய நீதித்துறைக்கு அதிகாரம் உள்ளது.

அரசியல் சட்டத்துக்கு எதிரான எந்த உத்தரவையும் ரத்து செய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நீதித்துறையால் முடியும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

நீதிபதிகள் பணியிடம்

இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடந்த மத்திய நிர்வாக தீர்ப்பாய கருத்தரங்கிலும் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் நியமனம் மற்றும் நீதித்துறை கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக மத்திய அரசை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீதித்துறைக்கு போதுமான வசதிகளை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி நீதிபதி பணியிடங்கள் தொடர்ந்து காலியாக இருப்பதும் தீர்ப்பாயத்தின் மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதில் அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தீர்ப்பாயங்களில் ஐகோர்ட்டு நீதிபதிகளையும் நியமிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.

நாடு முழுவதும் பல்வேறு ஐகோர்ட்டுகளில் 500 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. எனவே இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்

இவ்வாறு டி.எஸ்.தாக்குர் கூறினார்.

ரவிசங்கர் பிரசாத் மறுப்பு

அவரை தொடர்ந்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், தலைமை நீதிபதியின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு மட்டும் 120 நீதிபதி நியமனங்கள் நடந்துள்ளன. இது கடந்த 1990-க்கு பிறகு 2-வது அதிகபட்சமாகும். நீதித்துறையின் கீழ்மட்டத்தில் 5 ஆயிரம் நீதிபதி காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் இதில் மத்திய அரசு எதுவும் செய்ய முடியாது. அதற்கு நீதித்துறையே பொறுப்பாகும். கட்டமைப்பு வசதிகளை பொறுத்தவரை அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.

நீதிபதிகளை தேர்வு செய்வது தொடர்பான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதுபற்றிய மத்திய அரசின் நிலைப்பாட்டை 3 மாதங்களுக்கு முன்பே சுப்ரீம் கோர்ட்டிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் பதில் வரவில்லை.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பேசினார். 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval