மாவட்ட ஆட்சியர் பணி என்பது எளிதானது அல்ல. ஒரு மாவட்டத்திற்கு ஆட்சியராக இருப்பவர் அந்த மாவட்டத்தில் நடக்கும் எந்த ஒரு சம்பவத்திற்கு பொறுப்பு ஆவார். அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை பதில் அளிக்கும் கட்டாயம் இருக்கும். மாவட்டத்தில் எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும். எனவே மின்னல் வேகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டியது அவசியம். அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டால், அங்கு மாவட்ட ஆடசியர் இருந்தால்தான் மீட்புபணிகள் கூட துரித கதியில் நடக்கும்.
இந்த இடத்தில்தான் மாவட்ட ஆட்சியர்களின் கார் ஓட்டுநர்கள் முக்கியத்தும் பெறுகின்றனர். மாவட்டத்தின் எந்த இடத்திற்கும் மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் மாவட்ட ஆட்சியரை அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு இவர்களது கையில்தான் உள்ளது. இந்த சமயத்தில், மாவட்ட ஆட்சியர் அர்ஜுனன் என்றால் கார் ஓட்டுநர்கள் கிருஷ்ணரை போன்றவர்கள். மாவட்ட ஆட்சியரின் மனம் அறிந்தும் பணியின் முக்கியத்துவம் அறிந்து ஓட்டுநர்கள் செயல்படுவதும் முக்கியம். அப்படி, தனது பணி அறிந்து தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுநருக்கு மாவட்ட ஆட்சியர் ஒருவர் சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.
மகாராஷ்ட்ர மாநிலம் அகாலா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்து வருகிறார் ஒரு இளைஞர். அகோலா மாவட்டம் 7 தாலுக்காக்களையும் ஆயிரம் கிராமங்களையும் கொண்டது. இந்த மாவட்டத்துக்கு ஆட்சியர்களாக வருபவர்களுக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் திகாம்பர் தக். அகோலா மாவட்டத்தில் பணியாற்றிய 18 ஆட்சியர்களுக்கு தனது சர்வீசில் கார் ஓட்டியுள்ளார். மிகத் திறமையாகவும் விரைவாகவும் மாவட்ட ஆட்சியரின் குறிப்பறிந்து காரை ஓட்டி செல்வார் திகாம்பர் தக். இதனால், இங்கு பணியாற்றி செல்லும் ஒவ்வொரு ஆட்சியரும், அடுத்து பதவியேற்பவர்களிடம் 'திகாம்பர் இருக்காரு நம்பிக்கையா இருங்க' என சொல்லி செல்வது வழக்கம். இப்படி அனைத்து மாவட்ட ஆட்சியரிடமும் நல்ல பெயர் பெற்றிருந்த திகாம்பர் தக் நேற்று ஓய்வு பெற்றார்.
தனக்கும் தன்னைப் போல அகோலா மாவட்டத்தில் பணியாற்றிய பிற ஆட்சியர்களுக்கும் சேவை புரிந்த திகாம்பர் தக்கை வித்தியாசமான முறையில் கவுரவிக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார். தனது சொந்தக் காரை திருமணத்துக்கு அலங்கரிப்பது போல அலங்கரித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு அறை மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு திகாம்பர் தக்கிற்கு ஓய்வு நாள் விருந்தும் சிறப்பு விருதும் அளித்து கவுரவிக்கப்பட்டது. அகோலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த பிற அலுவலர்களும் திகாம்பர் தக்கிற்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். திகாம்பர் தக் பேசக் கூட முடியவில்லை.
பின்னர் கார் நிற்கும் இடத்துக்கு திகாம்பர் தக்கை மாவட்ட ஆட்சியர் அழைத்து வந்தார். சரி வழக்கமானதுதானே என நினைத்தார் திகாம்பர் தக். தன்னை காரை ஓட்டச் சொல்வார் என கருதினார். ஆனால், நடந்ததோ வேறு. அலுவலகத்தை விட்டு வெளியே வந்த திகாம்பர் தக்கிற்கு மாவட்ட ஆட்சியரே காரின் பின்கதவை திறந்து விட, கதறி விட்டார் திகாம்பர் தக். 'ஐயா... வேண்டாம் நான் கார் ஓட்டுகிறேன்' என்றார் தழுதழுத்தபடி. ஆனால், மாவட்ட ஆட்சியரோ விடவில்லை. அவரை சமாதானப்படுத்தி காரின் பின் இருக்கையில் கையை பிடித்து அமர வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியரே காரை ஓட்டி நேரே திகாம்பர் தக்கின் வீட்டிற்கு விட்டார். தான் ஓய்வு பெறும் நாளில் மாவட்ட ஆட்சியரே வீட்டுக்கு வந்ததை பார்த்து திகாம்பர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் எங்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வது இவரைப் போன்ற ஓட்டுநர்கள்தான். ஓய்வு பெறும் நாளை, அவரது வாழ்நாளில் மறக்க முடியாதபடி செய்ய வேண்டும். அத்துடன் நன்றிக் கடனாகவும் இதனை செய்தேன்' என்கிறார்.
அந்த மாவட்ட ஆட்சியரின் பெயர் ஸ்ரீகாந்த்!
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval