Saturday, November 19, 2016

மலேசியாவில் வெடித்தது மக்கள் புரட்சி!

ழல் புகாரில் சிக்கி உள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது பதவி விலககோரி மலேசியாவில் இன்று மக்கள் புரட்சி வெடித்தது.
இரண்டாவது முறையாக மலேசிய பிரதமராக உள்ள டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 260 கோடி மலேசிய ரிங்கிட் (வெள்ளி) பணத்தை, தனது சொந்த கணக்கில் மாற்றியதற்காக அதிரடியாக ஊழல் புகாரில் சிக்கினார். ஆனால், அந்த பணம் வெளிநாட்டில் இருந்து தனக்கு நன்கொடையாக வந்ததாக அவர் விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'பெர்சே' அமைப்பு கடந்த மூன்று வருடங்களாகப் போராட்ட களத்தில் குதித்துள்ளது.
மலேசியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட 'பெர்சே' என்ற அமைப்பு, ஊழல் மற்றும் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 'பெர்சே' என்றால் சுத்தம் என்று பொருளாகும். இந்த அமைப்பில் பெரும்பாலான வழக்கறிஞர்களே உறுப்பினர்களாக இருப்பதால், இது அரசு சாரா அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. முக்கியமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளில், மக்கள் விரோத போக்கிற்கு எதிராக இந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து பேரணி நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஊழல் புகாருக்கு தார்மிக பொறுப்பேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது, பதவி விலகக் கோரியும், நேர்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடக்கோரியும், தேர்தல் சீர்திருத்தம் வேண்டியும் நவம்பர் 19-ம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதும், 'பெர்சே' அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான மரியா சென், போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி தரும்போதே, மலேசியாவின் சுதந்திர திடல் பகுதியான 'டத்தாரன் மர்டேக்கா' என்ற புனிதமான இடத்திற்கு மட்டும் செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட 'டத்தோ அம்பிகா ஶ்ரீனிவாசன்' பேரணியைத் தலைமை தாங்கி வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, காலை 9 மணி அளவில் திரண்ட 'பெர்சே' அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து, அரசுக்கு எதிராகப் பேரணியாக சென்றனர்.
மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்ட பொதுமக்கள் ஊர்வலமாகச் சென்று, மலேசியாவின் இரட்டை கோபுரத்தில் ஒன்றுகூடி, எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், மலேசியாவில் எங்குப் பார்த்தாலும், ஒரே மஞ்சள் நிறமாக காட்சி அளித்தது.
போராட்டத்தின் இடையே பேசிய அம்பிகா, " 'மரியா சென்' னை கைது செய்திருக்கலாம். அவரைப் போல எண்ணற்ற 'மரியா'க்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள். வாழ்க மரியா" என்று அம்பிகா பலத்த கோஷமிட்டார். மேலும், "நேற்று நமக்கு நல்ல நாள் அல்ல. மாரியா, மண்டிப் சிங் உள்ளிட்ட பல பெர்சே தலைவர்களும் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்ட நாள். ஆனால், இன்றைய நாள் நமக்கு நல்ல நாள். மக்கள் தைரியமாக அணிதிரண்டு வந்துள்ளனர். உங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். சிவப்புச் சட்டை அணியினரும் இங்குள்ளனர். அவர்களைக் காட்டிலும் நாம் மன வலிமை மிக்கவர்கள் என்பதைக் காட்டுகிறோம். 'பெர்சே' போராட்டத்தைத் தொடர்வோம் வாருங்கள்" என்று அம்பிகா முழங்கியதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களிடமிருந்து, அரசுக்கு எதிராகப் பதில் முழக்கங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்து, அங்கு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களாகச் சிறையில் உள்ள எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவரது கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதேபோல், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது கட்சியான 'பாரிசான் நேஷனல்' கட்சியைச் சேர்ந்தவரும், கடந்த 26 வருடங்களாக மலேசியா பிரதமராக இருந்தவருமான 91 வயதான 'துன் மகாதீர்', இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சூடனிலிருந்து வருகை தந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். அவருடன், முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், முன்னாள் கெடா முதல்வர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் ஆகிய முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.
அரசுக்கு எதிரான இந்தப் பேரணியில் மலாய்க்காரர்கள்,  சீனர்கள்,  மற்றும் இந்தியர்கள் என மூன்று இனத்தவர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். முக்கியமாக வழக்கத்தை விட, இந்த ஆண்டு  வரலாறு காணாத வகையில் பல லட்சம் பேர் கலந்துகொண்டது மலேசியாவில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு மக்களே கூறி வருகின்றனர். மேலும், தனது சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரே, தனக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டது, பிரதமர் 'டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது'க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம், மக்கள் புரட்சிக்கு வித்துள்ளதால், பிரதமர் செய்வது அறியாது திகைப்பதாகவும் மலேசிய நாட்டு அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், மலேசிய பிரதமர் எந்த நேரத்திலும், தார்மீக பொறுப்பேற்று பதவி விலகலாம் என்ற சூழலும் அங்கு நிலவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval