Sunday, November 27, 2016

'இங்கிலீஷ் தெரியலை... எதுக்கு 'செக் புக்'?' கோவில்பட்டியில் அழிச்சாட்டியம்

இங்கிலீஷ் தெரியாத உங்களுக்கு எதற்கு 'செக் புக்' என்று கூறிய துணை போஸ்ட் மாஸ்டரை கண்டித்து கோவில்பட்டி தபால் அலுவலகத்தில் கணவன், மனைவி என இருவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் ராமசந்திரன் என்ற ராமசாமி. இவரது மனைவி விஜயா. ராமசாமி, பில்டிங் கான்டிராக்டராக உள்ளார். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. இதனால் கோவில்பட்டி தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்க ராமசாமியும், விஜயாவும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கினர். இன்று இருவரும் தபால் அலுவலகத்துக்கு வந்து சேமிப்பு கணக்கு பாஸ் புத்தகத்தை பெற்றனர். பிறகு செக்புக் மற்றும் ஏ.டி.எம் கார்டு கேட்டனர். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் துணை போஸ்ட் மாஸ்டரிடம் கேட்குமாறு தெரிவித்தனர். அதன்படி ராமசாமியும், விஜயாவும் , துணை போஸ்ட் மாஸ்டரை சந்தித்து விவரத்தை தெரிவித்துள்ளனர். அப்போது ஒரு விண்ணப்பபடிவத்தை கொடுத்த துணை போஸ்ட் மாஸ்டர், அதை பூர்த்தி செய்து கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். அந்த விண்ணப்பப்படிவம் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருந்துள்ளது. இதனால் பூர்த்தி செய்ய முடியாமல் ராமசாமி சிரமப்பட்டதோடு, எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விவரத்தை அந்த அதிகாரியிடம்  கேட்டுள்ளார். அதற்கு அந்த அதிகாரி சொன்ன பதிலைக் கேட்டு ராமசாமியும், அவரது மனைவி விஜயாவும் அதிர்ச்சியடைந்தோடு, மிகவும் மன வேதனை அடைந்தனர். 

 இதையடுத்து இருவரும், தபால் அலுவலகம் வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசப்படுத்தி தபால் அலுவலக ஊழியர்கள், சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் கொடுக்க தெரிவித்தனர். அதன்பேரில் இருவரும் உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். 

 இதுகுறித்து ராமசாமியிடம் பேசினோம். "கோவில்பட்டி தபால் அலுவலகத்தில் அக்கவுன்ட் ஓப்பன் செய்து விட்டு அதற்கு செக் புக், ஏ.டி.எம் கார்டு பெற அங்கு நானும், என்னுடைய மனைவியும் சென்றோம். அப்போது செக் புக் பெற துணை போஸ்ட் மாஸ்டர் முத்துமாரியிடம் விவரத்தை கேட்டேன். அப்போது அவர், விண்ணப்பப் படிவத்தை என்னிடம் கொடுத்து பூர்த்தி செய்யுமாறு தெரிவித்தார். 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்த  எனக்கு இங்கிலீஷ் சரிவர தெரியாததால்  விவரத்தை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், இங்கிலீஷ் கூட உங்களுக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எதற்கு உங்களுக்கு செக் புக் என்று கூறியுள்ளார். அவரது இந்த வார்த்தை எனக்கும், என் மனைவிக்கும் கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இங்கிலீஷ் தெரிந்தால் மட்டுமே தபால் அலுவலகத்தில் 
அக்கவுன்ட் ஓப்பன் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளதா. இல்லை படிக்காதவர்கள் போஸ்ட் ஆபீசுக்கு வரக்கூடாதா. துணை போஸ்ட் மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்கவே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். இதுதொடர்பாக போஸ்ட் மாஸ்டரிடம் புகார் கொடுத்துள்ளேன்" என்றார். 
 
கோவில்பட்டி தபால் அலுவலகத்தின் தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டோம். அப்போது போனை எடுத்து பேசியவர்,  (பெயரை குறிப்பிட வேண்டாம் என்று தெரிவித்து விட்டார்) இந்த சம்பவம் தொடர்பாக போஸ்ட் மாஸ்டரிடம் ராமசாமி புகார் கொடுத்துள்ளார். அவர் குற்றம் சுமத்திய துணை போஸ்ட் மாஸ்டரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை தபால் அலுவலக உயரதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து விட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
எஸ்.மகேஷ் 
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval