குண்டு துளைக்காத ஜன்னல்களைக் கொண்ட கழிவறைகளுடன், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஆடம்பர பங்களாவில், இந்தியாவின் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடியேறியுள்ளார்.
ஹைதராபாத் நகரின் பேகம்பேட் பகுதியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர பங்களா வாஸ்து விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கிரகப்பிரவேச பூஜைகள் செய்யப்பட்டன. வாஸ்து பூஜை, சுதர்சன யாகம், பூர்ணாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. முதலமைச்சரின் குரு என்று கருதப்படும் திரிதண்டி ஷ்ரீமன் நாராயண சின்ன ஜீயர் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான அதற்கு, பிரகதி பவன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக, இரண்டு கழிவறைகள், குண்டு துளைக்காத வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வாகனங்கள் நிறுத்தவும், கூட்டங்கள் நடத்தவும் தற்போதுள்ள முதலமைச்சரின் வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் புதிய வீடு கட்டப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் சார்பில் முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி அமையாததால்தான் புதிய வீடு கட்டப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஏற்கெனவே, அவரது அலுவலகம் வாஸ்துப்படி இல்லாததால் அவர் அங்கு செல்வதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
புதிய வீடு மற்றும் அலுவலக பூஜையில், மாநில ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ஆனால், பொதுமக்கள் பணம் 40 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு, முதலமைச்சருக்கு ஆடம்பர பங்களா கட்டப்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். நிலத்தின் விலையையும் சேர்த்தால் அது 150 கோடி ரூபாயைத் தாண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
’ராசி’ இல்லாத 8 கோடி பங்களா
கடந்த 2014-ஆம் ஆண்டு, மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், புதிய வீடு மற்றும் அலுவலகம் கட்டும் பணிகளை சந்திரசேகர ராவ் துவக்கினார்.
ஏற்கெனவே, அப்போதைய முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியால் 2004-ஆம் ஆண்டு 8 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வீடு, வாஸ்துப்படி சரியில்லை என்று சந்திரசேகர ராவின் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ராஜசேகர ரெட்டி, அந்த வீட்டுக்கு பூஜை செய்யாமலே குடியேறிவிட்டதாகவும், கடந்த 2009- ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்த அவர், சில மாதங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டதையும் சந்திரசேகர ராவ், அபசகுனமாகக் கருதினார்.
ராஜசேகர ரெட்டியை அடுத்து முதல்வராக வந்த கே. ரோசையாவும் முதல்வர் பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடியவில்லை. அடுத்து வந்த கிரண்குமார் ரெட்டி, ஒருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதலமைச்சர் என்ற வகையில், கடுமையான பிரச்சனைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டார். இவை எல்லாவற்றுக்குமே, வாஸ்துப் பிரச்சனைதான் காரணம் என சந்திரசேகர ராவ் கருதியதாக செய்திகள் கூறுகின்றன.
ரோம் பற்றி எரியும் போது....
மும்பையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான, ஷபூர்ஜி பலோன்ஜி, புதிய அலுவலகம், வீட்டைக் கட்டியது. இது, டாடா நிறுவனத் தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் அன்றாடத் தேவைகளுக்கே பணம் இல்லாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில், முதலமைச்சர், ஐந்து நட்சத்திர ஆடம்பர பங்களாவில் குடியேறியிருப்பது நீரோ மன்னனை நினைவுபடுத்துவதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முகமது அலி ஷபிர் விமர்சித்திருக்கிறார்.
ஏழை மக்களுக்கு 2.6 லட்சம் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கட்டித்தரப்படும் என்ற அவரது உறுதிமொழி நிறைவேற்றப்படாத நிலையில் அவர் மட்டும் ஆடம்பர பங்களாவில் குடியேறியிருக்கிறார் என முகமது அலி ஷபிர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய வீட்டின் வசதிகள் என்னென்ன?
முதல்வரின் புதிய வீடு மற்றும் அலுவலகம் இணைந்த பங்களா கட்டப்பட்ட பகுதி 8.9 ஏக்கர்
வீடு மற்றும் அலுவலக வசதிக்காக மூன்று பெரிய கட்டடங்கள். ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியுடன் பலநோக்கு அரங்கு.
அதுதவிர, மேலும் இரு பழைய கட்டடங்கள்.
ரூ33 கோடி மதிப்பீட்டில், கட்டுமானப் பணி இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது.
திட்டமிட்ட காலத்தில் பணியை முடிக்க 200 பேர் இரவும் பகலும் பணியாற்றினார்கள்.
200 கார்களுக்கும் மேல் நிறுத்தும் வசதி.
வளாகம் 850 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது.
24 மணி நேரமும், நவீன உபகரணங்களுடன் 55 ஆயுதப் படை காவலர்கள்.
தரைத் தளம் மற்றும் ஒரு தளத்துடன் கூடிய ஒவ்வொரு கட்டடமும் தலா 40 ஆயிரம் சதுர அடி கொண்டவை.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval